சீனாவில் தோன்றிய தேநீர் தற்போது உலகெங்கும் பருகப்படுகிறது. குறிப்பாக சைனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ரசியா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் சாலையோரங்களில் அதிகம் இருப்பது தேநீர்க் கடைகள்தான். ஒரு தெருவில் தேநீர்க் கடை இல்லையென்றால் அந்த தெருவுக்கு ஒரு முக்கியத்துவமே இருப்பதில்லை.
தண்ணீருக்கு அடுத்து உலகில் அதிகம் பருகப்படும் பானம் தேநீர்தான். தேநீர் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. தேநீரில் கருப்பு தேநீர், பச்சைத் தேயிலை தேநீர், பால் கலந்த தேநீர், இதர நறுமண வகை தேநீர் என்று நூற்றுக்கணக்கில் வகைகள் உண்டு.
தேநீர் சீனாவில் தோன்றியிருந்தாலும் அதைப் பற்றிய குறிப்பான வரலாற்றுச் செய்திகள் ஆதாரங்களோடு இல்லை. புராணக் கதைகள் போலக் குறிப்பிடுகிறார்கள். கி.மு 2737-ல் ஆட்சியிழந்த மன்னர் ஷென் நங் தெற்கு சீனா செல்கிறார். சாப்பிடுவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. அப்போது அங்கே ஒருவர் ஒரு மரத்தின் இலைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடிக்கிறார். மன்னருக்கும் கொடுக்கிறார். மன்னரும் அதை விரும்பி பருகுகிறார். பிறகு அவர் அங்கேயே ஏழு வருடங்களுக்கு தேநீரை அதிகம் பருகுகிறார். இது ஒரு கர்ணபரம்பரைக் கதை.
இப்படியாக தேநீர் சீனாவில், சிச்சுவான் மற்றும் யுனானைச் சுற்றியுள்ள மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அரசர் ஷென் நங் அதைப் பிரபலப்படுத்தினார் என்பது நம்பப்படும் கதை. அரசரது வயிற்று உபாதைகளை தேநீர் குணப்படுத்தியதும் அந்தக் கதையில் உண்டு. தற்போது தேநீரில் உள்ள பாலிஃபீனால்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நல்ல பாக்டீரியாக்கள் செழிக்க உதவுகின்றன. இப்படி நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு தேநீருக்கு இருப்பது அறிவியில் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கிமு 616 – 907 ஆண்டுகளில் சீனாவில் இருந்த டாங் அரசவம்ச காலத்தில் தேநீர் உலகெங்கும் பரவியது. மத்திய கிழக்கிற்கு சென்ற வணிகர்கள் சீனாவில் வாங்கிய பட்டுத் துணியுடன் தேயிலைகளையும் கொண்டு சென்றார்கள். அதன் பிறகு ஆசியா, ஐரோப்பா,பிற்பாடு அமெரிக்கா என்று உலகெங்கும் தேநீர் பரவியது.
உலகின் சீன மக்கள்தான் முதன்முதலில் தேநீரை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பருகி வந்தார்கள். அது அவர்களது உடல்நலம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தும் இருந்தது. பல நூறாண்டுகளுக்கு பிறகே அது ஐரோப்பா போய்ச் சேர்ந்தது.
ஆரம்பத்தில் தேயிலை அரிதான பொருளாக இருந்தது. பின்னர் தேயிலை சாகுபடி பல இடங்களில் வந்த பிறகே பொது மக்களுக்கு தேநீர் கிடைத்தது. அதற்கு முன் அரசவம்சத்தினர் மட்டுமே பருகினார்கள். சீனாவில் படித்து வந்த ஜப்பானிய துறவிகள் தாய்நாடு திரும்பும்போது தேயிலையையம் கொண்டு சென்றார்கள். பிறகு ஜப்பான் அரசருக்கு தேநீர் பிடிக்க அங்கேயும் அது மக்கள் பானமாக உருவெடுத்தது. தற்போது ஜப்பானில் மட்டும் ஆண்டுக்கு 80,000 டன் தேயிலை விளைகிறது.
உலகில் ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகள் மட்டும் தேயிலையின் உலக உற்பத்தியில் 80 -90 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. ஆப்பிரிக்காவில் 20ம் நூற்றாண்டில்தான் தேநீர் அறிமுகமானது. முக்கியமாக கென்யநாட்டின் மலைப்பகுதிகளில் அது அதிகம் விளைகிறது.
ஜப்பான்
யெயஷி எனும் புத்தத்துறவிதான் முதன்முதலில் சீனாவில் இருந்து ஜப்பானுக்கு தேயிலை விதைகளை கொண்டு சென்றார். தியானம் செய்வதற்கு தேநீர் உதவும் விதத்தை அவர் கண்டுபிடித்தார். அதன் பிறகு சென் புத்தமதப் பிரிவில் தேநீர் முக்கியமாக இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு சாதாரண மக்களுக்கும் பரவியது. மதம் சார்ந்த ஆன்மீக நிகழ்வுகளில் தேநீர் ஒரு அங்கமாக மாறியது.
கிபி 1650-ல் பீட்டர் ஸ்டூவெசன்ட் எனும் டச்சு காலனியவாதியால் தேநீர் அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது இருக்கும் நியூயார்க் அப்போது நியூ ஆம்ஸ்டர்டாம் எனும் டச்சு காலனியாக இருந்தது.
கிபி 1720-க்குள் உலக தேயிலை வர்த்தகம் நியூயார்க், பாஸ்டன், பிலடெல்பியா போன்ற மையங்களில் நிலைகொண்டது. இங்கிலாந்து அமெரிக்காவில் இருக்கும் தனது காலனிய நாடுகளுக்கு தேயிலையை வர்த்தகம் செய்தது. அப்போது தேயிலைக்கான வரி அதிகம் என்பதால் கள்ளத்தனமாக தேயிலை கடத்தி வரப்பட்டது. தேயிலைக்கான வரியை எதிர்த்து அமெரிக்க மக்கள் இங்கிலாந்திற்கு எதிராக போராடினர். அப்படித்தான் பாஸ்டன் துறைமுகத்தில் இருந்த 340 தேநீர் கன்டெயினர் பெட்டிகளை மக்கள் கடலில் தூக்கி எறிந்தார்கள். இது பாஸ்டன் தேநீர் விருந்து என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறது. மேலும் இது இங்கிலாந்திற்கு எதிரான அமெரிக்காவின் சுதந்திரப் போராட்த்திற்கான முன்னறிவிப்பாகவும் இருந்தது.
ஜஸ் டீயும், டீ பேக்ஸ் எனப்படும் தேநீர் வகைகள் அமெரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு முன் தேயிலைகள் மூட்டைகளில் கொண்டு செல்லப்பட்டன. அதை வர்த்தகர்களுக்கு உதவிடும் நோக்கில் சிறு பெட்டிகளில் அடைக்கும் வழக்கம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கிபி 1618-ல் சீனர்களால் ரசிய ஜாருக்கு தேநீர் பரிசாக அளிக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் சீனா - ரசியா இருநாடுகளும் தேயிலை வர்த்த்கத்தில் ஈடுபட்டன. வோத்காவும், தேநீரும் ரசியாவின் தேசிய பானங்களாக மாறின. ஆரம்பத்தில் சீனாவில் இருந்து ரசியாவிற்கு தேயிலை கொண்டு சென்றதால் அதன் அடக்க விலை அதிகம் இருந்தது.
உலகின் கணிசமன தேயிலை உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. டார்ஜ்லிங், அஸ்ஸாம், நீலகிரி தேயிலைகள் புகழ்பெற்றவை. பிரிட்டீஷ் காலனியவாதிகளால் 1830-ஆம் ஆண்டில் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் அவை அஸ்ஸாமின் காட்டுப்பகுதியில் வளர்க்கப்பட்டன.
அதற்கு முன்பு வரை தேயிலையில் ஏகபோகமாக இருந்த சீனாவிற்கு போட்டியாக பிரிட்டீஷார் இந்தியாவைக் களமாகக் கொண்டு களத்தில் இறங்கினர்.
சீனாவுடனான அபினிப் போரின் போது ஆயிரக்கணக்கான தேயிலை விதைகளை சீனாவில் இருந்து கடத்திக் கொண்டு வந்து இந்தியாவின் அஸ்ஸாம் பள்ளத்தாக்கு, டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்தனர். ஆனால் சீன வகை தேயிலை இங்கே சரியாக வளராததால் ஆங்கிலேயர்கள் இந்திய வகைகளையே சாகுபடி செய்தினர்.
அதுவரை இந்தியாவில் தேநீர் அருந்தும் பழக்கமே இல்லை. அதைப் பிரபலப்படுத்தும் வண்ணம் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலைகள், சந்தைகள், நகரங்களில் தேநீர் கடைகளைப் போட்டு மக்களை குடிக்குமாறு ஊக்குவித்தனர். இப்படியாக இந்திய மக்கள் தேநீரைக் குடித்துப் பழகினர். 1900-ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் இங்கே விளைந்த 7,15,000 டன் தேயிலையில் 70 சதவீதத்தை குடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்போது இந்தியாவில் பரவலாக தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. 2000த்திற்கும் மேற்பட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் பெரும் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. சர்வதேச சந்தையிலும் இந்திய தேயிலைக்கு வரவேற்பு இருக்கிறது. 20 இலட்சத்திற்கும் மேற்பட்டதேயிலைத் தொழிலாளிகள் பணி புரிகின்றனர். உலகப்புகழ் பெற்ற டீ பிராண்டுகளான டெட்லி மற்றும் டைப்போ இரண்டிற்கும் இந்தியாவின் தேயிலைதான் பயன்படுகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் தேநீர்க் கடைகள் விதவிதமான தேநீர்களை விற்கின்றன. மக்களும் குடிக்கிறார்கள். பொது இடங்களில் "சாய்" எனும் வார்த்தையை நாம் கேட்காமலேயே இருக்க முடியாது.
அமெரிக்காவில் இருக்கும் டச்சு காலனியான நியூ ஆம்ஸ்டர்டாம் பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு அங்கே தேயிலை பிரபலமாக இருப்பதை கண்டு கொண்டனர். 17 ஆம் நூற்றண்டில்தன் தேயிலை ஐரோப்பாவிற்கு டச்சுக்காரர்களால் வந்தது. பிறகு அங்கே இது பிரபலமானது. போர்ச்சுக்கீசிய இளவரி காதரீன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 2ஐ திருமணம் செய்த போது கிபி 1662-ல் தேநீரை தன்னுடன் இங்கிலாந்திற்கு கொண்டு வந்தார். பிறகு இங்கிலாந்தின் உயர்வர்க்கப் பிரிவில் தேநீர் பிரபலானது. தற்போது ஒரு பிரிட்டீஷ் குடிமகன் ஒரு வருடத்திற்கு இரண்டு கிலோ தேயிலைத்தூளை நுகர்கிறார்.
அரபு வணிகர்களால் மத்திய கிழக்கில் தேநீர் அறிமுகம் ஆனது. தென் அமெரிக்காவில் ஐரோப்பிய காலனியவாதிகளால் அறிமுகம் ஆனது. அதே போன்று ஆங்கிலேயர்களால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது.
இலங்கையில் இருக்கும் ஆங்கிலேயரின் தேயிலைத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் இப்போது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். உலக சந்தையில் இலங்கை தேயிலையும் பிரபலமானதுதான்.
தேநீரின்றி இவ்வுலகு இல்லை எனுமளவுக்கு தேநீர் இன்று உலக மக்களின் பானமாக மாறிவிட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust