கனடாவில் மான்கள் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றன. இந்த நோய்த் தொற்றின் அறிகுறிகளாக கனடாவின் உணவு ஆய்வு நிறுவனம், உமிழ்நீரும், சிறுநீரும் அதிகளவில் சுரந்து கொண்டே இருத்தல், மூளை, தன் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரண செயல்களைச் செய்தல் போன்றவற்றைக் கூரியுள்ளது.
Chronic Wasting Disease (CWD) என்று சொல்லப்படக்கூடிய இந்நோய், மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பை பாதிக்கக்கூடியது. இதனை zombie deer disease என்றும் சொல்கின்றனர். ஏனெனில் இந்நோய்த் தொற்றினால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
இந்நோய் தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள மான்களை பாதித்து வருகிறது. மரை மான், கலை மான், சதுப்புநில மான், கட மான் போன்ற மான் வகைகளை பாதிக்கக்கூடிய இந்நோய், மனிதரிலும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மானின் சளி, சிறுநீர் மூலம் இந்நோய் பிற மான்களுக்குப் பரவுகிறது.
எனினும் இதுவரை இந்நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மான்களின் இறைச்சியை உண்பதன் மூலம், இந்நோய்த்தொற்று மனிதர்களுக்கும் பரவும். மான்களை வேட்டையாடுபவர்கள் சடலத்தை சரியான முறையில் கையாளத் தவறும் பட்சத்தில் மானின் ரத்தம் அல்லது மூளைப் பொருள்கள் உடலில் நுழைவதாலும், இந்நோயால் மனிதர்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே மான்களை வேட்டையாடுபவர்களை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தொற்று முதன்முதலில் அமெரிக்காவில் 1960களில் கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து இந்த நோய்த்தொற்று 26 அமெரிக்க மாநிலங்களில் கண்டறியப்பட்டது. கனடாவில் முதன்முதலில் 1996-ல் சஸ்காட்செவனில் உள்ள ஒரு மான் பண்ணையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது, குறிப்பிடத்தக்கது.