
(ஏப்ரல் 5 வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது)
இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது.
ஒரு நாட்டுக்கு தேவையான போது ஒரு சில விதிமுறைகளோடு கடனைக் கொடுத்துவிட்டு, பிறகு அக்கடனை வைத்து தனக்கு தேவையான காரியங்களை அந்நாட்டில் (கடன் பெற்ற நாட்டில்) சாதித்துக் கொள்வது தான் கடன் ராஜதந்திரம்.
1950-களில் ஒரு ஏழை விவசாய நாடாக இருந்த சீனா, இன்று ஜிடிபி அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது. முதலாம் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
வல்லரசு நாடு என்கிற பெருமையை எட்டிப்பிடிக்க வெறுமனே உழைப்பு, வருமானம் மட்டும் போதுமா? சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்தவும், உலக அளவில் தீட்டப்படும் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவும், தங்கள் கருத்துக்களுக்கு போதுமான ஆதரவு இருக்கிறது என்பதை நிறுவவும், ராஜரீக ரீதியிலும், பூகோள அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சீனா தன் ஆதிக்கத்தைச் செலுத்த... என பல விஷயங்களில் பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு தேவை.
அப்படி பல்வேறு உலக நாடுகளை வளைக்க சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கடன்.
இந்த ஆயுதத்தால் இப்போது கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறது சீனா.
பொதுவாக பல நாடுகளுக்கு, முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாக கடன் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளது. பெல்ட் அண்ட் ரோட் திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்யும்.
இதற்கு கடனாக பல மில்லியன்களை சீனா அந்த நாடுகளுக்கு கொடுக்கும். இந்த நிலையில் அந்த நாடுகள் கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில், அந்த நாடுகளின் பல்வேறு வளங்களை சீனா கட்டுப்படுத்தும்.
கடன் பெற்ற துறைமுகம் போன்ற இடங்களை சீனா கையகப்படுத்தும்.
சீனாவில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்த கடனும் முக்கிய காரணம் ஆகும். 1948க்கு பின்பாக இலங்கை மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதாவது தங்கள் கடல் எல்லையில் இறக்குமதிக்கு தயாராக இருக்கும் கச்சா எண்ணெய்யை வாங்க கூட இலங்கையிடம் டாலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை இந்தியாவிடம்தான் உதவி கேட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து இலங்கைக்கு இந்தியா 2.4 பில்லியன் டாலர் கொடுத்து உதவி உள்ளது. அதோடு 400 மில்லியன் டாலர் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் 1 பில்லியன் டாலருக்கு மருந்து, உணவு உட்பட பல்வேறு உதவிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கைக்கு கடுமையாக கடன் கொடுத்து அந்த நாட்டை கட்டுப்படுத்தி வந்த சீனா தற்போது கடனை கேட்டு கழுத்தை நெருக்கி உள்ளது. சீனாவிடம் இலங்கை வாங்கிய மொத்த கடன் 8 பில்லியன் டாலர்.
இலங்கையின் மொத்த கடனே 45 பில்லியன்தான். இதில் ஆறில் ஒரு பங்கு சீனாவிடம் வாங்கப்பட்ட கடன். இதெல்லாம் டாலரில் வாங்கப்பட்ட கடன். இதனால் டாலரில் சீனா வட்டியை செலுத்தி வந்தது. இதில் டாலராக மட்டும் 6 பில்லியன் டாலரை சீனாவிற்கு இலங்கை கொடுக்க வேண்டும். அதோடு தங்க நகை பத்திரமாக 1 பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும்.
இந்த கடன் கால அவகாசம் வரும் ஜூலை மாதத்தோடு முடிகிறது. கடனை ஜூலை மாதம் கொடுத்தே தீர வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
முந்தைய கடனுக்கே ஜூலை மாதம் கடன் அடைக்க வேண்டிய நிலை உள்ள போது சீனா மேலும் 1 பில்லியன் டாலரை இலங்கைக்கு வழங்க சீனா முடிவு செய்துள்ளது.
இது முழுக்க முழுக்க கடன்தான். உதவி கிடையாது. ஏற்கனவே இலங்கை கடுமையான கடன் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில்தான் சீனா மேலும் கடன் கொடுத்து இலங்கையை சிக்க வைக்க முயன்று வருகிறது.