சிறுவயதில், நாளிதழ்கள், பால் பாக்கெட் போட்டுக் கொண்டே படித்தவர்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்போம் அல்லது நம்மில் சிலரே கூட பாக்கெட் மணிக்காக அப்பணிகளைச் செய்து ஒரு சிறிய பணம் சம்பாதித்திருப்போம்.
அப்போது பத்திரிகையை மாற்றிப் போடுவது, பால் பாக்கெட்டை மாற்றிப் போடுவது போல சில விஷயங்களைச் செய்திருப்போம். அதற்கே அடுத்த நாள் வீட்டுக்காரர்கள் பூகம்பம் வந்தது போலப் பால்காரர்களையும், நாளிதழ் போடுபவர்களையும் திட்டித் தீர்ப்பர்.
ஆனால் செக் குடியரசு நாட்டில், பழங்களை டெலிவரி செய்வதற்கு பதிலாகக் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கொகைன் என்கிற போதைப் பொருளைப் பல சூப்பர் மார்கெட் கடைகளுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக இண்டிபெண்டன்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
கொலம்பியாவிலிருந்து வந்திருக்கும் வாழைப் பழம் என்று கருதி, சூப்பர் மார்கெட் ஊழியர்கள் தங்கள் கடைகளுக்கு டெலிவரி செய்யப்பட்ட பெட்டிகளைத் திறந்து பார்த்த போது கட்டி கட்டியாக என்னவோ இருந்திருக்கிறது.
சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் ஊழியர்கள். காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து அந்த சந்தேகத்துக்குரிய கட்டிகளைப் பரிசோதித்த போது, அது கொகைன் என்கிற போதைப் பொருள் என்பது தெரிய வந்தது.
செக் குடியரசு நாட்டில் ஒரு கடை, இரண்டு கடை என பிரத்யேகமாக குறிப்பிட முடியாத படி, பல கடைகளுக்கு அதே போல கொகைன் போதைப் பொருள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
ஒட்டுமொத்தமாக செக் குடியரசில் சுமார் 2,200 பவுண்ட் எடையுள்ள போதைப் பொருள் டெலிவரி செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு 68 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் என்றும் அந்நாட்டு காவல்துறை கூறியது.
செக் குடியரசு நாட்டில் உள்ள பராக், ஜிசின், ரிச்னாவ், நெசோ எனப் பல நகரங்களில் உள்ள சூப்பர் மார்கெட்களுக்கு இது போல கொகைன் டெலிவரி செய்யப்பட்டது அந்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படி டெலிவரி செய்யப்பட்ட கொகைன் போதைப் பொருட்கள் அனைத்தும் ஒரே பேட்சை சேர்ந்தாக செக் குடியரசு நாட்டின் காவல்துறை கூறியுள்ளது.
செக் குடியரசு நாட்டின் சுங்க வரித் துறை உட்பட பல்வேறு முகமைகளோடு இணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறையின் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல சர்வதேச அதிகாரிகளோடும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் கொகைன் போதைப் பொருள் உற்பத்தி வரலாறு காணாத வகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது எனப் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தரவுகள் கூறுகின்றன.
இதில் கொலம்பியாவில் இருந்து மட்டும் கணிசமான அளவில் போதைப் பொருள் சந்தைக்கு வருவதாகக் கடந்த 2021ஆம் ஆண்டில் சமர்ப்பிக்க அறிக்கை ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையே கூறியது நினைவுகூரத்தக்கது.
இப்போது நடந்த சம்பவத்தைப் போலவே, கடந்த 2015ஆம் ஆண்டு சுமார் 220 பவுண்ட் கொகைன் பராக் நகரத்தில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust