மனிதர்களுக்கு மத்தியில் ஏழை, பணக்காரன், ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், வட இந்தியர், தென்னிந்தியர், ஆத்திகவாதி, நாத்திகவாதி, சைவம் - அசைவம்... எனப் பல பிரிவினைகளைப் பார்க்கலாம்.
ஆனால் பணக்காரர்கள் என்கிற ஒரு பிரிவினருக்கு லாபம் மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்கும். பெரும்பாலான பணக்காரர்களுக்கு நாடு, இனம், மதம், மொழி... போன்றவை எல்லாம் இரண்டாம் பட்சமாக இருக்கும்.
அப்படி தங்களையும் தங்களின் லாபத்தையும் பாதுகாத்துக்கொள்ள, பல பணக்காரர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, வேறு சில நாடுகளில் குடியேறுவர். சில பணக்காரர்கள் தங்களின் வணிக சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக வேறு சில நாடுகளுக்குக் குடியேறுவர். அப்படி இந்தப் பெரும் பணக்காரர்கள் குடியேறும் நாடுகள் பொருளாதாரம் மற்றும் வணிகத்திற்குச் சாதகமான பல அம்சங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்வர்.
அப்படி 2022ஆம் ஆண்டு முடிவுக்குள் எத்தனை மில்லியனர்கள் ஒரு நாட்டில் குடியேறுவர் அல்லது ஒரு நாட்டிலிருந்து வெளியேறுவர் என ஹென்லே அண்ட் பார்ட்னர்ஸ் என்கிற நிறுவனம் குளோபல் சிட்டிசன்ஸ் ரிப்போர்ட் 2022 (இரண்டாம் காலாண்டுக்கானது) என்கிற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2022ஆம் ஆண்டுக்குள் 4,000 மில்லியனர்கள் குடியேறுவர் எனக் குறிப்பிட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள மக்களுக்கு வருமான வரி விதிக்கப்படாதது, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றின் வருமானம் அதிகரித்து வருவது போன்றவை அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2022ஆம் ஆண்டு முடிவுக்குள் 3,500 மில்லியனர்கள் குடியேறுவார் என்றும், சிங்கப்பூரில் 2,800 மில்லியனர்கள், இஸ்ரேலில் 2,500 மில்லியனர்கள், சுவிட்சர்லாந்தில் 2,200 மில்லியனர்கள், அமெரிக்காவில் 1,500 மில்லியனர்கள் குடியேறு வாய்ப்பு இருப்பதாக அவ்வறிக்கையில் கணிக்கப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் வணிக முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் சொர்க்கபுரியாக இருந்த அமெரிக்கா தற்போது புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், மில்லியனர்களை ஈர்ப்பதில் சற்று பின்தங்கி உள்ளது. அமெரிக்க அரசியலில் இதுதான் நடக்கும் என உறுதியாகக் கணிக்க முடியாத ஒரு சூழல் நிலவுவது, மில்லியனர்கள் அமெரிக்காவில் குடியேறத் தயங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரின் கை ஓங்க வாய்ப்புள்ளது. அப்படி குடியரசுக் கட்சியின் கை ஓங்கினால், அது மேலும் அமெரிக்க அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது என கல்ஃப் நியூஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஹாங்காங் குறித்து அதிகம் விவரிக்கத் தேவையில்லை. கடந்த இரு ஆண்டு காலமாகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய அரசியல் நிகழ்வுகள் அந்நாட்டில் அரங்கேறி வருகின்றன. இந்த அரசியல் நிலையற்ற தன்மையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஹாங்காங்கைச் சேர்ந்த பல மில்லியனர்களும் அந்நாட்டிலிருந்து வெளியேறி, தங்களுக்குச் சாதகமான வியாபார சூழல் நிலவும் மற்ற நாடுகளுக்குக் குடியேறி வருகின்றனர்.
அப்படி ஹாங்காங்கில் இருந்து வேறு நாடுகளுக்குக் குடியேறுவதில் ஹாங்காங் மில்லியனர்களுக்கு சிங்கப்பூர் ஒரு நம்பகமான இடமாக இருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து 2022ஆம் ஆண்டுக்குள் 15,000 மில்லியனர்கள் வெளியேறுவது என கணித்துள்ளது. அதேபோல சீனாவில் இருந்து 10 ஆயிரம் மில்லியனர்களும் இந்தியாவில் இருந்து எட்டு ஆயிரம் மில்லியனர்களும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் ஹாங்காங்கில் இருந்து 3,000 மில்லியனர்களும் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனில் இருந்து 2,800 மில்லியனர்களும் வெளியேறுவர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி மாத காலத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தன் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே பல மில்லியனர்களும் ரஷ்யா மற்றும் உக்ரைனை விட்டு வெளியேற ஆலோசித்து வந்தனர்.
தற்போது உக்ரைன், ரஷ்யாவின் கடும் தாக்குதலால் சிதறுண்டு கிடக்கிறது. எனவே மில்லியனர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாகப் பலதளங்களிலும் பல்வேறு அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது வரலாறு காணாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. எனவே ரஷ்ய மில்லியனர்கள் இந்த தடைகளில் சிக்கி தங்கள் வியாபாரத்தை இழந்துவிடாமல் இருக்க பல்வேறு நாடுகளுக்குக் குடியேறுவதாக கல்ஃப் நியூஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பதற்றமான சூழல், சீனாவில் தொடரும் கொரோனா பிரச்சனைகள், சீனாவில் நிலவும் கடும் அரசு ஏகாதிபத்தியம்... போன்ற பல்வேறு காரணங்களால் சீனாவிலிருந்து மில்லியனர்கள் சாரி சாரியாக வெளியேறி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து பெரும்பான்மைவாத சக்தியால் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் வெறுப்புப் பிரசாரங்கள், மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளால் ஏற்கனவே உத்தரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் முதலீடுகள் தன்னிச்சையாக வருவதில்லை.
வணிகத்தை ஒரு பொருளாதாரம் சார்ந்த விஷயமாகப் பார்க்காமல், அதிலும் பிரிவினைவாதத்தைக் கையிலெடுத்தால் தங்கள் வியாபாரம் அடிபட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல மில்லியனர்கள் வெளியேறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த வரிசையில், 2022ஆம் ஆண்டில் பிரேசில் (2,500 மில்லியனர்கள்), பிரிட்டன் (1,500 மில்லியனர்கள்), மெக்ஸிகோ (800 மில்லியனர்கள்), செளதி அரேபியா (600 மில்லியனர்கள்), இந்தோனேஷியா (600 மில்லியனர்கள்) வெளியேறலாம் என ஹென்லி நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust