Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை

கிரெடிட் சூசி வங்கியில் உலகம் முழுக்க சுமார் 50,000 ஊழியர்கள் வேலை பார்ப்பதாகவும், 1.3 ட்ரில்லியன் ஸ்விஸ் பிராங்க் அளவுக்கு சொத்துக்கள் நிர்வகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உலகெங்கிலும் 150 நகரங்களில் செயல்படும் இந்த வங்கி சரிந்தது எப்படி?
Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை
Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதைTwitter

சுவிட்சர்லாந்து நாட்டின் சுரிக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த கிரெடிட் சூசி வங்கியை சில தினங்களுக்கு முன் அதன் போட்டி வங்கியான யூபிஎஸ் அடிமாட்டு விலைக்கு வாங்கியதாகச் செய்திகள் வெளியாயின.

பல பில்லியன் டாலர் மதிப்பிலான கிரெடிட் சூசி வங்கியின் பங்குகளை வெறும் 3 பில்லியன் சுவிஸ் பிராங்க்குக்கு வாங்கி இருப்பதாக பல்வேறு வலைதளச் செய்திகள் கூறுகின்றன.

கிரெடிட் சூசி வங்கியில் உலகம் முழுக்க சுமார் 50,000 ஊழியர்கள் வேலை பார்ப்பதாகவும், 1.3 ட்ரில்லியன் ஸ்விஸ் பிராங்க் அளவுக்கு சொத்துக்கள் நிர்வகிக்கப்படுவதாகவும் ராய்டர்ஸ் செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உலகம் முழுக்க இந்த வங்கிக்கு சுமார் 150 நகரங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கிரெடிட் சூசி வங்கியின் கதை என்ன?

கிட்டத்தட்ட 15 தசாப்தங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த வங்கி இந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தரைதட்டியது ஏன்? வாருங்கள் சுருக்கமாகப் பார்போம்.

கிபி 1856ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் தொழில்மயமாவதை ஊக்குவிக்கவும், ரயில் பாதைகளை விரிவுபடுத்தவும் அன்றைய அரசியல்வாதி மற்றும் வணிகராக இருந்த ஆல்ஃப்ரெட் இஷர் (Alfred Escher) Schweizerische Kreditanstalt (SKA) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் கடந்த 1870ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தன் முதல் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகத்தைத் (foreign representative office) திறந்தது.

Alfred Escher
Alfred Escher

1876ஆம் ஆண்டு சுரிக் நகரத்தில் உள்ள தலைமையகத்துக்கு மாற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 3 தசாப்த காலத்துக்குப் பிறகு, சுரிக் நகரத்துக்கு வெளியே தன் முதல் அலுவலகத்தைத் திறந்தது. என மணி கண்ட்ரோல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

1939ஆம் ஆண்டு எஸ் கே ஏ நிறுவனம் சுவிஸ் அமெரிக்கன் கார்ப்பரேஷன் என்கிற பெயரில் அண்டர்ரைட்டிங் மற்றும் முதலீட்டு வணிகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியது. வைட் வெல்ட் & கோ என்கிற அமெரிக்க முதலீட்டு நிறுவனத்திடமிருந்து, 1962ஆம் ஆண்டு வைட், வெல்ட் & கோ ஏ ஜி என்கிற பெயரில் சுரிக் நகரத்தில் இயங்கி வந்த வங்கியைக் கைப்பற்றியது.

அந்நிறுவனத்துக்கு கிளாரிடென் ஃபைனான்ஸ் ஏஜி என பெயர் மாற்றி செயல்படத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு, எஸ் கே ஏ நிறுவனம் ஒரு முழு சேவை வங்கியாக நியூயார்க்கில் செயல்படுவதற்கான உரிமத்தைப் பெற்றது.

1977ஆம் ஆண்டு, சியாசோ என்கிற கிரெடிட் சூசி வங்கிக் கிளையில் நடந்த பணச் சலவை வழக்கின் (Money Laundering) காரணமாக, ஒட்டுமொத்த கிரெடிட் சூசி வங்கியும் கடும் நஷ்டத்தைச் சந்தித்தது. உலகம் முழுக்க ஊடகங்களில் கிரெடிட் சூசியின் பெயர் தலைப்புச் செய்தியானது.

1982ஆம் ஆண்டு, நியூயார்க் பங்குச் சந்தையில் இடம் பிடித்த முதல் சுவிஸ் வங்கி என்கிற பெருமையைப் பெற்றது. எஸ் கே ஏ நிறுவனத்தின் துணை நிறுவனமாக சி எஸ் ஹோல்டிங் உருவாக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வைத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்டது. 1989 வாக்கில் இதே சி எஸ் ஹோல்டிங் என்கிற நிறுவனம் எஸ் கே ஏ குழுமத்தின் தாய் நிறுவனமாக உருவெடுத்தது.

Wll Street
Wll Street

1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் நான்காவது பெரிய வங்கியான வொல்க்ஸ்பேங்க் குழுமத்தை வாங்கியது சி எஸ் ஹோல்டிங். 1997ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு நிறுவன மறுசீரமைப்பின் காரணமாக சி எஸ் ஹோல்டிங் கிரெடிட் சூசி குழுமமாக மாறியது. எஸ் கே ஏ என்கிற பெயரே ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டது.

2002ஆம் ஆண்டு கிரெடிட் சூசி குழுமம் இரு யூனிட்களை உருவாக்கியது. 1. கிரெடிட் சூசி நிதி சேவைகள் 2. கிரெடிட் சூசி ஃபர்ஸ்ட் பாஸ்டன். சில ஆண்டுகளுக்குப் பின் இது 3ஆகப் பிரிக்கப்பட்டது. அப்பட்டியலில் வின்டர்தெர் (Winterthur) சேர்ந்து கொண்டது.

2005ஆம் ஆண்டு கிரெடிட் சூசியும், சி எஸ் ஃபர்ஸ்ட் பாஸ்டன் நிறுவனமும் இணைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு வின்டர்தெர் (Winterthur) நிறுவன பங்குகள் பிரான்ஸ் நாட்டின் ஏ எக்ஸ் ஏ (AXA) நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

நிமிர்ந்து நின்ற கிரெடிட் சூசி:

2007 - 08 காலகட்டத்தில் உலகின் பல நிதி நிறுவனங்கள் & வங்கிகள் உலக நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, அரசின் நிதி உதவியைப் பெற்று தப்பிப் பிழைத்தன. அப்படி கிரெடிட் சூசியின் போட்டி நிறுவனமான யூபிஎஸ் அப்போது அரசின் நிதி உதவி பெற்று தப்பியது இங்கு நினைவுகூரத்தக்கது. அந்தகாலத்தில் கிரெடிட் சூசி அரசின் நிதி உதவி ஏதும் பெறாமல் ஆலமரம் போல் நின்றதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

2012ஆம் ஆண்டு கிளாரிடென் லியூ (Clariden Leu) & தனியார் வங்கிச் சேவை பிரிவு & சொத்துக்கள் மேலாண்மைப் பிரிவை ஒன்றாக இணைத்து ஒற்றை பிரிவாக உருவானது.

2013ஆம் ஆண்டு, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள மார்கன் ஸ்டான்லியின் சொத்துக்கள் மேலாண்மை நிறுவனத்தை வாங்கியது.

அடுத்தடுத்து சி இ ஓக்கள் பதவி விலகல்:

2015ஆம் ஆண்டு ஜானே தைம் (Tidjane Thiam) கிரெடிட் சூசியின் முதன்மைச் செயலாலராக இருந்த போது மீண்டும் கிரெடிட் சூசியை 3 சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனங்களாக, இரு முதலீட்டு வங்கி பிரிவின் கீழ் செயல்படத் தொடங்கியது.

tidjane thiam
tidjane thiam

கடந்த 2020ஆம் ஆண்டு, சி இ ஓ தைம், சில முன்னாள் கிரெடிட் சூசி ஊழியர்களை வேவு பார்த்த செய்தி வெளியாகி, நிதி உலகத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்தது. கடைசியில், நிதி உலகின் ஜாம்பவான் மற்றும் முக்கிய நபராகக் கருதப்பட்ட ஜானெ தைம் கிரெடிட் சூசி நிறுவனத்திலிருந்து விலகினார்.

நஷ்டத்துக்கு மேல் நஷ்டம்

அதே ஆண்டு மார்ச் மாதம் அர்செகோ கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனம் மார்ஜின் கால் பணத்தைத் திருப்பித் தர முடியாமல் திவாலானது. இந்த ஒரு நிறுவனத்தால் மட்டும் சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்தது கிரெடிட் சூசி.

அதனைத் தொடர்ந்து கிரீன் சில் கேப்பிட்டல் என்கிற பிரிட்டன் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் 10 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை முடக்க வேண்டி வந்தது.

antonio horta osorio
antonio horta osorio

இப்படி வணிக ரீதியிலான வீழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஓராண்டு காலத்துக்குள், கொரோனா விதிமுறைகளை மீறிய காரணத்துக்காக கிரெடிட் சூசி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி அண்டொனியோ ஹொர்டா ஒசொரியோ தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.

அவரைத் தொடர்ந்து தாமஸ் கொட்ஸ்டெயின் (Thomas Gottstein) பதவியேற்றாலும், பெரிதாக எதையும் சாதிக்காமல் கிரெடிட் சூசியிலிருந்து வெளியேறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மறுசீரமைப்புத் துறையில் நிபுணராகக் கருதப்பட்ட அல்ரிச் கொர்னர் (Ulrich Koerner) சி இ ஓவாக பதவியேற்று, கிரெடிட் சூசிக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் சில திட்டங்களை முன்வைத்தார்.

Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை
இலங்கை : கைவிரித்த உலக வங்கி - அடுத்து என்ன?

2022 அக்டோபர் மாதவாக்கில் மீண்டும் பணக்காரர்களுக்கு வங்கிச் சேவை வழங்குவது, 4 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் பணம் திரட்டுவது, சுமார் 9,000 ஊழியர்களை 2025ஆம் ஆண்டுக்குள் வீட்டுக்கு அனுப்புவது, முதலீட்டு வங்கிச் சேவையை தனியாகப் பிரித்து சி எஸ் ஃபர்ஸ்ட் பாஸ்டனாக பிரித்தெடுப்பது போன்ற திட்டங்களை முன்வைத்தார். இதில் பலதும் வேலைக்கு ஆகவில்லை. மறுபக்கம் பல வாடிக்கையாளர்களும் வங்கிகளிடமிருந்து சகட்டுமேனிக்கு பணத்தை வெளியே எடுக்கத் தொடங்கினர்.

Ulrich Koerner
Ulrich Koerner

சமீபத்தில் 2023 மார்ச் மாதத்தில் வெளியான கிரெடிட் சூசி 2022 ஆண்டறிக்கையில், கிரெடிட் சூசியில் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் பணத்தை வெளியே எடுப்பது நிலைப்படுத்தப்பட்டாலும், வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிக்கு பணம் வருவது அதிகரிக்கவில்லை.

கிரெடிட் சூசியின் பங்கு விலை சுமார் 30% சரிந்தது. கிரெடிட் சூசி வங்கியில் லிக்விடிட்டி பிரச்சனையைச் சமாளிக்க சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியிடமிருந்து 54 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகையாகப் பெற்றது. 2008ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, சுவிஸ் மத்திய வங்கியிடமிருந்து உதவித் தொகை பெற்ற முதல் வங்கி கிரெடிட் சூசி தான் என்றால் கிரெடிட் சூசியின் நிலைமையை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.

Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை
silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்?

இந்த செய்தி வெளியாகி சொசைட்டி ஜெனரல் (Societe Generale SA), டாயிஷ் பேங்க் (Deutsche Bank AG) போன்ற பல நிறுவனங்களும் கிரெடிட் சூசி நிறுவனம் தொடர்பான வர்த்தகங்களை நிறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சில நாட்களாக தொடர்ந்து நடந்து வந்த வாத விவாதங்களைத் தொடர்ந்து கிரெடிட் சூசி நிறுவனத்தை, அதன் போட்டியாளரான யூபிஎஸ் சுமார் 3.23 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பங்குகளை வாங்க விருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது சந்தையில் பதற்றத்தைத் தவிர்க்க சுவிஸ் அரசு தரப்பின் உதவியோடு விரைந்து செயல்படுத்தப்பட்ட டீல் என்றும் கூறப்படுகிறது.

16 தசாப்தங்களாக உலக வங்கிச் சேவையில் அழுத்தமாக தடம் பதித்த வங்கியே தரை தட்டி இருப்பது, நிதித் துறையில் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடருமா? 2008 போல உலக நிதி நெருக்கடிக்கு வழி வகுக்குமா என்பதை எல்லாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Credit Suisse: 167 ஆண்டு கால வங்கி சாம்ராஜ்ஜியம் சரிந்த கதை
Silicon Valley Bank: அமெரிக்காவின் முன்னணி வங்கி மூடு விழா கண்டது எப்படி? Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com