உக்ரைன் மீதான போர் காரணமாக ரசியா விரைவில் அதன் கடன்களைச் செலுத்த முடியாமல் போகுமென ஒரு முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேசத் தடைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எனும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் ரசிய அரசு தனது கடன்களைத் திருப்பி அனுப்புவது பற்றிய வாய்ப்பு குறைந்துள்ளதாக எச்சரித்திருக்கிறது.
கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் ரேட்டிங்கை வைத்துத்தான் முதலீட்டாளர்கள், ஒரு நாட்டிற்குக் கடன் கொடுப்பது மற்றும் பத்திரங்கள் வாங்குவதன் அபாயத்தை முடிவு செய்வார்கள்.
ஒரு நாட்டின் கடன் மதிப்பீடு - ரேட்டிங் குறைவாக இருந்தால் அந்நாடு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. எனவே இந்த அபாயத்தின் பொருட்டு முதலீட்டாளர்கள் அந்நாட்டிற்குக் கடன் கொடுக்க அதிக வட்டி வசூலிப்பார்கள். அல்லது கொடுக்க மாட்டார்கள்.
தற்போது பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவின் கடன் பத்திரங்களின் வசூலிப்பு பாதிக்கப்படலாம் என்று அந்நாடு கூறியிருக்கிறது.
முதலில் B ரேட்டிங்கில் இருந்த ரஷ்யாவின் தகுதி தற்போது C ரேட்டிங்கென ஃபிட்ச் நிறுவனம் குறைத்துள்ளது. இதன் பொருள் ரசியா கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறைவு. மேலும் பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வருவது, ரஷ்யாவின் எண்ணெய், எரிசக்தி வர்த்தகம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை சேர்ந்து ரஷ்யாவின் கடன் திருப்புதலை மிகவும் பாதிக்கும் என ஃபிட்ச் நிறுவனம் கூறுகிறது.
உக்ரைன் மீதான ரசியப் படையெடுப்பை அடுத்து அமெரிக்காவும், பிரிட்டனும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யைத் தடை செய்வதாக அறிவித்தன. உடன் பிட்ச் நிறுவனம் ரசியா மீதான ரேட்டிங்கை குறைத்தது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியம் ரசிய எரிவாயுவை வாங்கிக் கொள்வதை நிறுத்தப் போவதாகக் கூறியிருக்கிறது.
எரிசக்தித் துறையில் பெரும் ஏற்றுமதியாளராக இருக்கும் ரஷ்யாவின் மீதான இந்த பொருளாதாரத் தடைகள் அதன் நிதி நிலையைத் தாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும் ரசியா மீதான தடைகள் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தச் செய்யும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ரசியா அதன் கடனை திருப்பிச் செலுத்தும் விருப்பத்தைக் கொண்டிருந்தாலும், பொருளாதாரத் தடை காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களுக்குச் சிரமங்கள் ஏற்படும் என ரஷ்யாவின் நிதித்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருப்போருக்கு ரசியா பணம் அனுப்பும் நிதி நடவடிக்கைகள் தற்போது தடைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஃபிட்ச் நிறுவனம் மட்டுமல்ல அதன் போட்டி நிறுவனங்களான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் மற்றும் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆகியவையும் ரசியாவின் கடன் திருப்பும் திறன் பற்றிய அளவீட்டைக் குறைத்துள்ளன. இவை காரணமாக ரஷ்யாவின் ரூபிள் பணம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவின் மத்திய வங்கி ரூபிளின் மதிப்பு மேலும் குறைவதைத் தடுக்க அதன் வட்டி விகிதத்தை இருமடங்காக 20% மாக உயர்த்தியது. ஆனாலும் இதனால் ரூபிளின் வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா என்பது கடினம். மேலும் மெக்டொனால்ட்ஸ், கோகோ கோலா மற்றும் ஸ்டார்பக்ஸ் உட்பட டஜன் கணக்கான உலகளாவிய பிராண்டுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யாவில் தமது வர்த்தகத்தை நிறுத்தியுள்ளன. இது மேலும் ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதித்து வருகிறது.
முடிவாக இந்நடவடிக்கைகள் ஏதோ ரசியாவை மட்டும் பாதிக்கும் ஒன்றல்ல. உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் - டீசல் விலைகள் தாறுமாறாக ஏறி வருகின்றன. இந்தியாவில் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாக ஏற்றும் என அஞ்சப்படுகிறது.