சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அத்தியாவசியமான இறக்குமதிகளை செய்வதற்கு கூட அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லை. முக்கியமாக எரிபொருள் இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கூட பணமில்லை. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை உதவி கேட்டு நாடியிருக்கிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட ஐந்து முக்கியப் பிரச்சினைகள்
1. அதிபர் மாளிகைக்கு வெளியே நடக்கும் தொடர் போராட்டம்
தலைநகர் கொழும்புவில் 2000த்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர் குழாயால் விரட்ட முயன்றனர். அதிபர் ராஜபக்சே பதவி விலக வேண்டுமென்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2. பைத்தியக்காரனே வீட்டுக்கு போ!
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் ஆண்களும் பெண்களும் "பைத்தியக்காரனே வீட்டுக்கு போ" என்று முழக்கமிடுகிறார்கள். வலிமை வாய்ந்த ராஜபக்சே குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்க்ளையும் பதவி விலகுமாறு அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.
அதிபர் கோத்தபயாவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி வகிக்கிறார். இளைய சகோதரர் பசில் நிதி அமைச்சராகவும், மூத்த சகோதரர் சமல் விவசாய அமைச்சராகவும், மருமகன் நாமல் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்கள். இப்படி மொத்த நாட்டின் அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
3. டீசல் காலி
வியாழன் அன்று இலங்கை முழுவதும் டீசல் விற்பனைக்கு வரவில்லை. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் 2 கோடியே 20 இலட்சம் மக்கள், வரலாறு காணாத மின்சாரத் தடையை எதிர்கொண்டதால், போக்குவரத்து முடங்கியது. பெட்ரோல் விற்பனைக்கு வந்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் கார்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
4. பேருந்துகளில் எரிபொருள் தட்டுப்பாடு
டீசல் தட்டுப்பாடு சமீப நாட்களில் இலங்கை முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வியாழன் போராட்ட நிகழ்வுகளுக்கு முன்னர் இதுவரை நகரங்களில் எதிர்ப்புக்கள் இருந்தாலும் எந்த ஒரு உயர்மட்ட தலைவரையும் இலக்காக கொண்டு போராட்டம் நடக்கவில்லை. தற்போது நிலைமை மாறிவருவதோடு மக்கள் அதிபர் குடும்பத்தை இலக்கு வைத்து போராடுகிறார்கள்.
“கேரேஜில் உள்ள பேருந்துகளில் பழுதுபார்ப்பதற்காக எரிபொருளை வெளியேற்றி, அந்த டீசலை பயன்படுத்தி சேவை செய்யக்கூடிய வாகனங்களை இயக்குகிறோம்” என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் - நாட்டின் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டவர்கள் - ஏற்கனவே எண்ணெய் தீர்ந்துவிட்டதாகவும், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பெயரளவு சேவைகள் கூட சாத்தியமில்லை என்றும் கூறினார்கள்.
5. மின்சார பற்றாக்குறை
மின்சாரத்தை சேமிப்பதற்காக இலங்கை தெரு விளக்குகளை அணைத்து வருவதாக அமைச்சர் ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். அரசு மின்சார நிறுவனமும் ஜெனரேட்டர்களுக்கு டீசல் இல்லாததால் 13 மணி நேர மின்வெட்டை அமல்படுத்தியது.
இப்படி இலங்கை போராட்டத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் தீப்பிடித்து எரிகிறது. அதை அணைப்பதற்கு அரசாங்கத்தால் இயலவில்லை. கோபம் அதிபர் குடும்பத்தின் மீது குவிகிறது. துன்பப்படும் இலங்கை மக்கள் என்ன செய்வார்கள்?