Gen Z என்று ஊடகங்களால் சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரேசன் இசட் தலைமுறையினரை பேச்சுவழக்கில் ஜூமர்கள் என்றும் அழைக்கிறார்கள். நம்ம ஊரில் 2கே கிட்ஸ் என்பது பொதுப் பெயர். இவர்கள் 1990 களின் நடுப்பகுதியிலிருந்து, 2010 ஆண்டு வரை பிறந்தவர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். இந்த தலைமுறையினர் எப்படி இருக்கிறார்கள் என்பது முந்தைய தலைமுறையினருக்கு தெரியாது.
கூகிளின் முதன்மையான செயல்பாடு என்பது அது ஒரு தேடுபொறி எந்திரமாகும். கூகிள் ஆண்டவரிடம் எதை வேண்டுமானாலும் தேடலாம், ஆண்டவர் அருள்புரிவார் என்பது சென்ற தலைமுறையினரின் பாலபாடம். ஆனால் டிக்டாக் என்பது பிறர் குரல், பாட்டை வாயசைத்து காப்பிகேட் வீடியோ எடுத்துப் போடும் ஒரு செயலி. இன்ஸ்டாகிராமோ புகைப்படங்கள், குறு வீடியோக்கள் பகிரும் சமூக ஊடகமாகும்.
வேடிக்கை என்னவென்றால் Gen Z தலைமுறையில் பாதிப்பேர் கூகிளின் பணியை டிக்டாக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் செய்கிறார்கள். அதாவது அவர்கள் தேட நினைப்பதை இந்த இரு செயலிகளும் தேடுகிறார்கள். இது கூகிளின் உள் தரவுகளின் படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே கூகிள் இளைய பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் தனது தேடல் எந்திரம் மற்றும் வரைபட செயல்பாடுகளில் பல அம்சங்களை மாற்றி வருகிறது.
உலக அளவில் டிக்டாக் தனது சமூக ஊடக போட்டியாளர்களை விட புதிது புதிதாக வளர்ந்து வருகிறது. கூகிளின் உள்தரவுகளை டெக்கிரஞ்ச் இணைய தளம் வெளியிட்டுள்ளது.
டிக்டாக் செயலி கடந்த சில வருடங்களாக சமூக ஊடகங்களில் அதிவேகமாக வளர்ந்து வரும் செயலியாகும். போட்டியில் அது இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டை விட முன்னேறி வருகிறது. இந்த செயலிகளில் உள்ள ரீல்ஸ் மற்றும் ஸ்பாட்லைட் பிரிவுகளை இளைய தலைமுறையினர் டிக்டாக்கின் காப்பிகேட் வீடியோ போன்று பயன்படுத்தி வருகின்றனர். அல்லது அனைத்தும் டிக்டாக் மயமாகி வருகிறது. யூடியூபில் கூட டிக்டாக் வீடியோக்கள் அதிகம் பிரபலமாக இருக்கின்றன. இதற்காகவே யூடியூபில் ஷார்ட்ஸ் என்ற பிரிவை துவக்கியிருக்கிறார்கள்.
இப்போது டிக்டக்கின் வடிவமைப்பானது இளைஞர்கள் இணையத் தேடல் நடத்தும் முறையை மாற்றுகிறது என்று ஒரு கூகிள் நிர்வாகி உறுதிப்படுத்தியுள்ளார். இதை மாற்றுவதற்கு தொடர்ந்து கூகிள் வேலை செய்கிறது.
ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய கூகிளின் மூத்த துணைத் தலைவர் பிரபாகர் ராகவன், “கிட்டத்தட்ட 40% இளைஞர்கள் மதிய உணவுக்கான இடத்தை தேடும் போது அவர்கள் கூகிள் மேப் அல்லது கூகிள் தேடலுக்கு பதிலாக டிக்டாக் அல்லது இன்ஸ்டாகிராமிற்கு செல்கிறார்கள்" என்று கூறினார். இதை அவர் கூகுளின் உள் ஆய்வுகளின் படி எடுத்துரைத்தார்.
இதை கூகிளும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது. பொதுவான மற்றும் சிறப்பான தேடுபொறிகள், பயன்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களில் நாங்கள் வலுவான போட்டியை எதிர்கொள்கிறோம் என்று கூகிள் கூறியிருக்கிறது.
கூகுள் தனது தேடுபொறியில் இளைய பார்வையாளர்களை கவரும் வகையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அதில் பரந்த காமரா காட்சி, பல இடங்கள், பொருட்களை காட்டும் அகன்ற திரை ஆகியவை அடக்கம்.
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்தான் யூடியூபையும் நடத்துகிறது. ஆனால் இன்சைடர் இணையதளத்தின் படி 2024 இல் டிக்டாக்கின் விளம்பர வருமானம் யூடியூபை முந்தி விடும் என்று ஆய்வு செய்து கூறியிருக்கிறது.
கூகிள் வெற்றி பெறும் என்பது 2000 ஆம் ஆண்டில் யாருக்கும் தெரியாது. அதே போன்று இனி சமூக ஊடகங்கள் மட்டுமல்ல இணையம் என்றாலே டிக்டாக் அல்லது இன்ஸ்டாகிராம் என்று மாறப்போவது குறித்து சில வருடங்களுக்கு முன்பு யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். இணையத்தின் சிறப்பே வருங்காலத்தை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பதைக் கணிக்க முடியாத ஒன்றாக இருப்பதுதான். நேற்று கூகிள் இன்று டிக்டாக் நாளை ?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust