ஹீலியஸ் விமானம்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள் - நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்

அந்த விமானம் வானில் பறந்துகொண்டிருந்த போது அதில் பயணித்த அனைவரும் (விமானிகள் உட்பட) மயங்கி விழத்தொடங்கினர். அந்த விமானத்திலிருந்த ஒருவர் கூட உயிர் தப்பாததற்கு காரணம் எஞ்சினியர் ஒரு ஸ்விட்சை அழுத்த தவறியது தான்... என்ன நடந்தது ஹீலியஸ் விமானத்தில்? விரிவாக பார்க்கலாம்...
ஹீலியஸ்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள்- திக் திக் நிமிடங்கள்...
ஹீலியஸ்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள்- திக் திக் நிமிடங்கள்...Youtube

2005ம் ஆண்டு கிறீஸ் நாட்டின் ஏதேன்ஸில் நடந்த விமான விபத்து 121 பேர் இறப்புக்கு காரணமாக அமைந்தது, "கோஸ்ட் - விமானம்" என்று அந்த சம்பவத்தை அழைக்க சில காரணங்கள் இருக்கின்றன.

அந்த விமானத்தில் சென்ற அத்தனை மனிதர்களும் சுய நினைவை இழந்தனர். யாராலும் எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்த முடியவில்லை. ஆக்ஸிஜன் மாஸ்குகள் அவர்களது உயிரை காக்கவில்லை. அந்த விமானத்துக்கு என்ன ஆனது? அந்த விபத்துக்கு காரணம் என்ன? அந்த பெரும் கொலைப் பழியை 8 ஆண்டுகள் சுமந்த ஆலன் இர்வின் யார் என்பதை இங்குப் பார்க்கலாம்!

ஆகஸ்ட் 14, 2005 காலையிலேயே தனது பணிக்கு விரைந்தார் ஆலன் இர்வின். 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த பொறியாளரான அவர் அப்போது ஃப்ரீலான்ஸராக ஹீலியோஸ் ஏர்வேஸில் பணியாற்றி வந்தார். குவைத், சீனா, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, மெக்சிகோ மற்றும் மியாமி ஆகிய நாடுகளில் பணியாற்றியிருக்கும் 44 வயது (2005) நபரான ஆலனுக்கு அது அன்றாட பணி தான்.

நள்ளிரவு 1 மணியளவில் பணிக்குச் சென்ற ஆலன் புறப்பட தயாராக இருக்கும் விமானத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என சரி பார்க்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் எஞ்சினியர் அவர். அன்று இஞ்சினில் கேபின் அழுத்தம் சரியாக இருக்கிறதா என சோதிக்க கேபின் ப்ரஸ்ஸர் ஸ்விட்சை மேனுவல் நிலைக்கு மற்றினார். போயிங் 737 விமானத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு 6:30 மணிக்கு வீடு திரும்பினார்.

விமானம் 522 சைப்ரஸில் இருந்து 6:07 மணிக்கு ஏதேன்ஸ் நோக்கிப் புறப்பட்டது. ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் அந்த பயணம் நீளும்.

விமானம் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே விமானி அறையிலிருந்து தரையில் உள்ள பொறியாளர்களுக்கு அழைப்பு வந்தது. விமானம் புறப்பட்டு 30 நிமிடம் வரை ஆலன் இர்வின் விமானநிலையத்திலிருந்து சரியாக பயணிக்கிறதா என்பதை உறுதிபடுத்துவது வழக்கம்.

ஆலனும் விமானியும் 6 நிமிடம் உரையாடினர். விமானத்தை மீண்டும் அழைக்க முயற்சித்த போது விமானி அறைலிருந்த யாரும் பதிலளிக்கவில்லை. 56 வயதான கேப்டன் மற்றும் 51 வயதான துணை விமானி என அனுபவமிக்க விமானிகள் விமான நிலையத்துக்கு பதிலளிக்காமல் இருப்பது சாதாரணமான விஷயமல்ல.

விமானம் 12000 அடி உயரத்தில் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக தரையிறங்காமல் சுற்றி சுற்றி பறந்துகொண்டிருந்தது. விமான நிலையத்திலிருப்பவர்களால் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. விமானிகள் பதிலளிக்காததால் ஆட்டோ பைலட் முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கண்டுகொண்டனர்.

விமானத்தை ரேடார் மூலமாக ட்ரேஸ் செய்து என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள இரண்டு விமானங்களை அனுப்பினர். அந்த விமானத்தில் இருந்தவர்கள் பார்த்த போது, மூன்று பயணிகள் மட்டுமே கண்ணில் பட்டிருக்கின்றனர். அவர்கள் மூவருமே சுய நினைவு இல்லாமல் இருந்தனர். கேப்டனின் சீட்டில் அவர் இல்லை. துணை கேப்டனும் மிக மோசமான நிலையில் மயங்கி கிடந்தார். அப்போது நீள நிற உடை அணிந்திருந்த மர்மநபர் ஒருவர் கேப்டனின் சீட்டில் அமர்ந்து விமானத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். விமானத்தில் 3 மணி நேரம் பறப்பதற்கு தேவையான எரிபொருள் இருந்தது.

சரியாக காலை 9:03 மணிக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் ஏதேன்ஸிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மலைப்பகுதியில் விழுந்தது.

விமான விபத்தின் மீதான விசாரணைகள் நடைபெற்றது. அதில் இந்த விபத்துக்கு அலன் இர்வான் தான் முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டார். ஏன் அவர் மீது விசாரணை திரும்பியது என்று தெரிந்துகொள்ள விமானத்தில் என்ன நடந்தது என்பதைத் அறிய வேண்டியது அவசியம்.

விமானிகள், விமானக் குழுவினர் மற்றும் பயணிகள் என 121 பேர் அந்த விமானத்தில் பறந்துகொண்டிருந்தனர். சம்பவதன்று அதிகாலையில் தங்கள் பயணங்களை திட்டமிட்டிருந்தவர்களைப் பொறுத்தவரையில் இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் ஏதேன்ஸில் இருப்பார்கள். அங்கு ஊர் சுற்றிப் பார்பதோ, உறவினர்களை சந்திப்பதோ, வணிக சந்திப்புகளை நடத்துவதோ அவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

விமானம் அதிக உயரத்துக்கு செல்லும் போது விமானத்தினுள் அழுத்தம் குறையத் தொடங்குகிறது. இதனால் பயணிகள் மூச்சுவிட சிரமப்படுகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவர்களில் சிலருக்கு காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வந்திருக்கலாம். தலை சுற்று ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இறுதி வினாடி வரையில் தாங்கள் மரணிக்க நேரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

விமானத்தின் உள்ளே ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணம் கேபின் ப்ரஸ்ஸர் தான். விமானம் அதிவேகமாக உயரத்தில் பறக்கும் போது அதன் வெளிப்புறத்தில் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும். ஆனால் உள்பக்கத்தில் தரையிலிருக்கும் அழுத்தம் இருந்தால் மட்டுமே பயணிகள் சுமூகமாக பயணிக்க முடியும்.

விமானம் பறக்கும் உயரத்தில், குறைந்த அழுத்தம் காரணமாக காற்றில் ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்கும் இதனால் மனிதர்களால் அந்த அழுத்தத்தில் உயிர்வாழ முடியாது.

விமானத்தில் இந்த அழுத்தத்தை சரியாக கவனித்துக்கொள்ள கேபின் ப்ரஸ்ஸர் ஸ்விட்ச் உதவுகிறது. இந்த ஸ்விட்ச் தானியங்கி நிலையில் இருக்கும் போது அறையின் வெளிப்புறத்துக்கு காற்றை தள்ளவும் தேவையான காற்றை உள் இழுத்துக்கொள்ளவும் கணினியின் கட்டளைப்படி இயங்குகிறது. ஆனால் மேனுவல் மோடில் இருந்தால் வெளிப்புறத்துக்கு காற்று செல்லாது.

விமானத்தின் உள்பக்கம் தேவையான காற்றானது இறக்கைகளில் இருக்கும் மோட்டார் வழியாக உள்ளிழுக்கப்பட்டு ஏர் கண்டிஷனர்களால் குளிரூட்டப்பட்டு விமானம் முழுவதும் அனுப்பப்படுகிறது.

விமானத்தின் பின் பக்கத்திலிருக்கும் வால்வு விமானத்திலிருந்து காற்று வெளியேற உதவுகிறது. இந்த வால்வு தரையிலிருக்கும் போது திறந்து இருக்கும். ஏனெனில் தரையிலும் விமானத்தின் உள்ளேயும் ஒரே அளவு அழுத்தம் இருக்கும். ஆனால் வானில் பறக்கும் போது இந்த வால்வு சிறிய அளவே திறந்திருக்கும். இதனால் விமானத்தில் இருந்து காற்று வெளியாவது தடுக்கப்பட்டு விமானத்தினுள் அழுத்தம் காக்கப்படும்.

விமானத்தின் கேபின் ப்ரஸ்ஸர் ஸ்விட்ச் மேனுவலில் இருந்தால் வால்வு திறந்தே இருக்கும். இதனால் விமானம் உயரத்தில் எழுந்த பின்னரும் காற்று முழுவதுமாக வெளியேறி விமானத்தினுள் அழுத்தம் குறைந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

ஆலன் விமானத்தை சரிபார்க்க கேபின் அழுத்த ஸ்விட்சை மேனுவல் மோடுக்கு திருப்பியுள்ளார். ஆனால் அதனை மீண்டும் ஆட்டோவில் வைக்கவில்லை.

விபத்துக்கு பிந்தைய அறிக்கைகள் பல பயணிகள் இறக்கும் வரை தங்கள் இருக்கையிலிருந்து கூட எழ வில்லை எனக் கூறுகின்றது. அவர்களுக்கு தாங்கள் இறக்கப்போவது பற்றிய எந்த சிந்தனையும் இருந்திருக்காது.

விபத்து நடந்த மூன்றாவது நாளில் ஆலன் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவலர்களுக்குத் தொழில்நுட்ப விவகாரங்களை விளக்குவதற்காகவே தன்னை அழைக்கின்றனர் என்று அவர் நினைத்தார். ஆனால் அவர் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

கேபின் ப்ரஸ்ஸர் ஸ்விட்சை மேனுவலுக்கு மாற்றியது அவர்தான். அதுவே விபத்துக்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

1. கேபின் ப்ரஸ்ஸர் ஸ்விட்சை ஆட்டோவில் மாற்றாதது

2. விமான நிலையத்திலிருந்து வந்த அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளாதது

3. விமானத்தினுள் அழுத்தம் குறைந்தது அல்லது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது ஆகிய மூன்று நேரடிக்காரணங்களும் , முந்தைய விபத்துகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததை மறைமுக காரணமாகவும் விசாரணைக் குழு தெரிவித்தது.

விசாரணையின் அடிப்படையில் 2008ம் ஆண்டு ஆலன் இர்வான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது வேலையும் போனது.

அவரது மனைவி டொன்னா விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆலனின் தந்தையும் ஒரு விமானி, அவர் ஒரு எஞ்சினியர் மட்டுமல்லாமல் விமானியாக பணியாற்றியவரும் கூட. அவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தனர். தனது மகனை தனியாக பார்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் இர்வான்.

6 நிமிடங்கள் விமான நிலையத்துடன் பேசிய விமானியிடம் ஆலன் இருமுறை கேபின் ஸ்விட்ச் தானியங்கி நிலையிலிருக்கிறதா அல்லது மேனுவல் நிலையில் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். ஆனால் விமானி அதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. அவர் தனது கருவிகளை கூலிங் செய்யும் சட்க்யூட் பிரேக்கர்கள் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த அனுபவம் வாய்ந்த விமானி எப்படி ஆலனின் அறிவுறுத்தல்களை அசால்ட்டாக எடுத்துக்கொண்டார் என்ற கேள்விக்கு நமக்கு விடை கிடைக்கப் போவதில்லை. அப்போது அந்த விமானத்தில் இருந்த எவருமே இப்போது உயிரோடு இல்லை.

ஹீலியஸ்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள்- திக் திக் நிமிடங்கள்...
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

ஆலன் இர்வான் உடன் பணியாற்றியவர்கள் அவருக்காக குரல் கொடுத்தனர். அந்த விபத்தில் அவரது தவறு எதுவுமில்லை எனக் கூறினர். இறுதியாக விசாரணை 2012ல் முடிந்த போது முக்கிய குற்றவாளிகளாக இருந்த மூவரில் ஆலன் மட்டும் நிரபராதியாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 51. நீதிபதி ஸ்விட்ச் ஆட்டோ மோடில் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டியது விமான குழுவின் தவறு தான் என்ற முடிவுக்கு வந்தார்.

ஹீலியோஸின் தலைமை விமானி இயன்கோ ஸ்டோமெனோவ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டெமெட்ரிஸ் பான்டாசிஸ் ஆகியோருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

அதன் பின் 2019 வரை விமானத்துறையில் பணியாற்றிய ஆலன், இப்போது ஓய்வு பெற்று தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

ஹீலியஸ்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள்- திக் திக் நிமிடங்கள்...
வீட்டுக்கு வீடு விமானம் : ஓர் 'அடடே' நகரம்

அந்த விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்னர் கேப்டனின் இருக்கைக்கு வந்த நபர் விமான குழுவின் அனுபவமிக்க பணியாளர். அவருக்கு காக்பிட் (விமானிகள் அறை) கதவுகளைத் திறக்கும் ரகசிய எண் தெரிந்திருந்ததால் அவர் விமானிகள் அறைக்குள் நுழைந்து விமானத்தை தரையிறக்க முயன்றிருக்கிறார். ஆனால் அதற்குள் எரி பொருள் பற்றாக்குறையால் விமானத்தின் இடது பக்க எஞ்சின் செயலிழந்துள்ளது.

121 உயிர்களைத் தாங்கிய இரும்புப் பறவையில் ஒரு ஸ்விட்ச் சரியாக அழுத்தப்படாததால் அத்தனை பேரின் உயிரும் பலியாகியிருக்கிறது. விசாரணைக் குழு கூறிய மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்று சரியாக நடைபெறவில்லை என்றால் கூட அந்த விபத்து தடுக்கப்பட்டிருக்கும். விமான வரலாற்றில் ஒவ்வொரு விபத்துமே ஒரு படிப்பினையை வழங்கியிருக்கிறது. ஆனால் எல்லா விபத்துகளுமே வழங்கும் படிப்பினை ஒன்று தான், இந்த தொழில்நுட்பத்தில் சிறிய கவனக் குறைவுக் கூட உயிர்களைப் பறித்துவிடும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

ஹீலியஸ்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள்- திக் திக் நிமிடங்கள்...
அமெரிக்கா: விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி - 9 பேரை மீட்கும் பணியில் கடற்படை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com