ஒரு மோசமான ஆட்சியாளரை சுட்டிக்காட்ட இதை விட சிறந்த வார்த்தைகள் நமக்கு கிடைக்காது.
உலகம் முழுவது உள்ள அரசியல்வாதிகளாலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தப்படும் இந்த மேற்கோளில் வரும் நீரோ மன்னன் யார்? அவர் ஃபீடில் வாசித்தது உண்மையா? கொஞ்சம் வரலாற்றுப் பூர்வமாக பார்க்கலாம்.
ரோமானிய மன்னனான நீரோ தானே ரோம் நகருக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
அவர் தனது சிற்றன்னை, மக்கள், மனைவிகளைக் கொலை செய்து தனது நீதிமன்றத்தில் இருந்த திருநங்கைகளை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
வரலாறு இவ்வளவு கொடூரமாக நினைவு வைத்திருக்கும் நீரோ எப்படி ஆட்சிக்கு வந்தார் தெரியுமா?
அப்போது ரோமானிய பேரரசு மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சிரியா வரை வடக்கே பிரிட்டன் வரை பரவியிருந்தது.
நீரோவின் தாய் அக்ரிபீனா அவரது மாமாவான கிளாடியஸை மணந்தார். பின்னர் பேரரசரின் மகளுக்கு நீரோவை மணமுடித்தார்.
ரோமானியப் பேரரசின் இரண்டாவது பேரரசரான திபெரியஸின் ஆட்சியின் போது நீரோவின் பாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். நீரோவின் தாய் மூன்றாவது மன்னனின் ஆட்சியில் நாடுகடத்தப்பட்டார். கிளாடியஸின் ஆட்சியின் போது, நீரோவின் தாயார் நாடு திரும்பினார். மேலும் அவர் தனது மாமாவான பேரரசரை மணந்து அரச குடும்பத்தில் தனது இடத்தைப் பிடித்தார்.
நீரோவின் தாய் செய்த தந்திரங்களால் கி.பி 54ல் தனது 16 வயதில் பேரரசரானார் நீரோ. அக்ரிபீனா பேரரசர் கிளாடியஸை விஷம் வைத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவு உண்மை எனக் கூற முடியாது.
நீரோவின் தாய் மிகவும் தந்திரக்காரராகவும் பேராசை மிக்கவராகவும் இருந்தார். நீரோவுக்கு நெருங்கிய ஆலோசகராக இருந்து தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டார்.
நீரோவை தனது கைப்பாவையாக பயன்படுத்த அக்ரிபீனா நினைத்தார். அவரை வசியம் செய்ய அவருடன் உடலுறவு கொள்ளக் கூட தயாராக இருந்தார் எனக் கூறுகின்றனர்.
நீரோ அவரது தாயின் வழிகாட்டுதலுடன் ஆட்சி செய்த 5 ஆண்டுகள் ரோமானியர்களுக்கு பொற்காலமாக இருந்தன என்றே கூறலாம்.
மக்களைக் கவர நீரோ நிறைய விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தார். நீரோவின் முகம் பொறிக்கப்பட்ட காசுகள் புழக்கத்துக்கு வந்தன.
தாயின் பொம்மையாக இருக்க விரும்பாத நீரோ தனது தாயை கொல்லவே திட்டம் தீட்டினார். ஒரு விழாவுக்கு அவரை அழைத்து கப்பலில் திருப்பி அனுப்பும் போது கப்பலை மூழ்கடிப்பது திட்டம். ஆனால் அந்த கப்பலில் இருந்து அக்ரிபீனா எப்படியோ தப்பித்தார்.
அதற்கு பின்னர் தனது தாய் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதாகக் கூறி நீரோ அவரை கொலை செய்ய உத்தரவிட்டார்.
நீரோ எல்லை விரிவாக்கத்தில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டால் கிடைக்கும் செல்வங்களின் வரத்து இல்லாதது ராஜ்ஜியத்தை உலுக்கும் பிரச்னையாக இருந்தது.
ரோமில் கிட்டத்தட்ட மன்னருக்கு இணையான அதிகாரத்தைப் பெற்றிருந்தது செனட் அமைப்பு. எந்த ஒரு மன்னரும் செனட்டின் உதவியுடன் தான் ஆட்சி செய்ய வேண்டியதிருந்தது.
செனட் ஒருபுறம் இருக்க அரச குடும்பத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதிகாரத்தைப் பெறுவதற்காக, குடும்பத்தில் திருமணங்கள், குழந்தைகளைத் தத்தெடுப்பது, விவாகரத்து செய்தல், நாடுகடத்தப்படுதல், நாட்டுக்கு வெளியேயிருந்து ஆட்சி செய்வது என பல தந்திரங்கள் அரங்கேறின.
நீரோ செனட்டுக்கு அதிகாரம் அளித்து, இராணுவத்தை திருப்திகரமாக வைத்திருந்தார்.
செனட் தன் மீது அதிருப்தி அடைந்து கிளர்ச்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக பல காரியங்களை செய்தார் நீரோ. அதே நேரத்தில் கிளர்ச்சிக்கான சூழல் எழும் போது ஒருவருக்கு எதிராக ஒருவர் சதிகளிலும் ஈடுபட்டனர்.
அதிகாரப்போட்டி, சதி திட்டங்கள், இராணுவம், செனட் உறுப்பினர்கள் என பலதரப்புகளை சமாதனப்படுத்த வேண்டியது இருந்தது. நீரோ எல்லை விரிவாக்கத்தில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் இருந்தார். எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டால் கிடைக்கும் செல்வங்களின் வரத்து இல்லாதது ராஜ்ஜியத்தை உலுக்கும் பிரச்னையாக இருந்தது.
நீரோவின் முதல் மனைவி ஆக்டோவியாவால் பாதிக்கப்பட்டதால் அவரை நாடுகடத்தி கொலை செய்தார் எனக் கூறப்படுகிறது.
அதன் பிறகு போபியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். போபியா கர்ப்பமாக இருந்த போது அவரையும் கோவத்தில் கொலை செய்தார்.
நீரோவின் தாயை கொலை செய்ய சென்ற வீரர்களிடம் "நீரோவின் பாவம் வளரும் இந்த வயிற்றில் குத்தி என்னைக் கொலை செய்யுங்கள்" என அக்ரிபீனா கூறியாதகவும் வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுக்கு இடையில் நீரோ கிறீஸில் நடப்பது போல போட்டிகளை நடத்தவும், சர்கஸ்களை ஏற்பாடு செய்யவும் அதிக ஆர்வம் காட்டினார். நீரோ லைர் என்ற இசைக்கருவியை வாசித்து பாட்டுப்பாடுவதிலும் ஆர்வமாக இருந்தார்.
நாடகங்களில் நடிப்பதை விரும்பிய நீரோ, ராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு சென்று நாடக போட்டிகளில் கலந்துகொண்டார். ஒரு நாடக போட்டியில் தன் மனைவி போபியாவின் முகமூடியை அணிந்துகொண்டு கதாநாயகியாக நடித்தார். போபியாவை கொலை செய்ததற்காக அவர் வருந்தினார் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும் என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கி.பி 64ம் ஆண்டு ரோமபுரி பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் நீரோ தான் தீ வைத்தார் என்றும், ரோம் எரியும் போது அவர் ஃபீடில் வாசித்துக்கொண்டிருந்தார் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வரலாற்றாசிரியர்கள் இரண்டுவிதமான நிலைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.
சிலர் நீரோ ரோமை எரித்ததற்கு வரலாற்றுப்பூர்வமான காரணங்கள் இருக்கின்றன என்கின்றனர்.
நீரோ தான் ஒரு புதிய நகரத்தை உருவாக்க விரும்பியதாகவும் அதனால் இதனைச் செய்தார் என்பது அவர்களது கருத்து.
ஆனால் எரிந்த ரோமை மீண்டும் நீரோ புதுப்பிக்கவே செய்தார். இதனால், ரோமை நீரோ மன்னன் எரித்ததாகக் கூறப்படுவது வதந்தியே என்கின்றனர்.
நீரோ மன்னன் அந்த காலத்தில் மதச் சிறுபான்மையினராக இருந்த கிறிஸ்தவர்கள்தான் ரோம் நகரத்துக்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டினார்.
சிறுபான்மை மக்கள் மீது பலி சொல்வது அவருக்கு எளிதாக இருந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்தவர்கள் தீவைத்த குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டனர். காட்டு ஓநாய்களுக்கு இரையாக்கப்பட்டனர். உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த தண்டனைகளை பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றினார் நீரோ.
எரிந்த ரோம்நகரில் நீரோ ஒரு மிகப் பெரிய அரண்மனையை எழுப்பினார். ஆனால் சாம்பலில் இருந்து மீண்டும் வாழ்க்கையை எழுப்பத் தொடங்கியிருந்த மக்களுக்கு அது பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது.
அவர் இந்த அரண்மனை மக்களுக்காக கொண்டாட்ட காலத்திலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போதும் திறக்கப்படும் என அறிவித்தார். அப்போதும் மக்களுக்கு அதில் உடன்பாடில்லை.
நீரோவால் அந்த அரண்மனையை கட்டிமுடிக்க முடியாமலேயேப் போனது. அவர் மீது மக்களிடம் அதிருப்தி மற்றும் அவப் பெயர் உருவானது.
நீரோ ரோமுக்கு தீ வைக்காத போது, அவர் ஃபிடில் வாசித்தார் எனக் கூறுவது அபத்தமானது. ஃபிடில் என்ற கருவியே 8ம் நூற்றாண்டில் தான் காண்டுபிடிக்கப்பட்டது எனும் போது அவர் எப்படி வாசித்திருக்க முடியும் என்பது ஒருதரப்பு வாதம்.
நீரோ லைர் என்ற கருவியை வாசித்தார். காலப்போக்கில் ஃபிடில் பிரபலமானதால் ஃபிடில் என மாறிவிட்டது. ரோமில் நடப்பது குறித்து எந்த கவலையும் இல்லாமல் இசைத்துக்கொண்டிருந்தார் என்பது மற்றொரு தரப்பு ஆய்வாளர்களின் கருத்து.
நீரோவுக்கு 30 வயதை எட்டியபோது செனட் நீரோவை மக்களின் எதிரி என அறிவித்தது. அதாவது நீரோ இனி எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்.
தன்னைத் தேடிவரும் வீரர்களுக்கு அஞ்சிய நீரோ அரண்மனை ஒன்றில் ஒளிந்துகொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust