இலங்கை யாழ்ப்பாணத்தின் பழமையான நிறுவனங்களில் ஒன்றும் உலகளவில் பேசப்பட்டதும் யாழ்ப்பாணத்து நூலகமாகும்.
இந்த நூலகம் ஆரம்பத்தில் தனி நபர் ஒருவரால் துவங்கப்பட்டது. கனகசபை முதலித்தம்பி செல்லப்பா ( 1896 – 1958) என்னும் ஆர்வலரால்தான் முதன்முதலில் இந்த நூலகம் சிறிய அளவில் அவரது வீட்டில் துவங்கப்பட்டது. நவம்பர் 11, 1933 அன்று இவர் தனது வீட்டு அறை ஒன்றில் சில நூல்களுடன் இந்த நூல் நிலையத்தைத் துவக்கி நடத்தி வந்தார். செல்லப்பா அவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியவர்.
பின்னர் இதனைப் பலருக்கும் பயன்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தச் செல்லப்பாவும் வேறு சில பிரமுகர்களும் விரும்பினர். 1934ஆம் ஆண்டு ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபாய்தான் பொது நூலகத்தின் மூலதனமாக அமைந்தது. அக்காலத்தில் அது பெரிய தொகைதான். அதன்படி யாழ்ப்பாணத்து நகரின் மத்தியிலிருந்த மருத்துவமனை வீதியில் வாடகை அறை ஒன்றில் நூலகத்தை மாற்றினார்கள். அப்போது 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும் நூலகம் 1934ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1936க்குப் பின்னர் நூலகம் யாழ் நகரசபையிடம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு யாழ்ப்பாணத்துக் கோட்டையின் அருகே புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அருகிலுள்ள இடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது.
அப்போது யாழ்ப்பாண நகரம், மாநகரசபை அந்தஸ்துக்கு தரமுயர்த்தப்பட்டு புதிய சபை பதவியேற்ற பின் இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடம் கட்டும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென பல்வேறு வழிகளில் நிதி திரட்ட முயற்சி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
நூலகத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும், பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இதற்கென இந்திய நிபுணர்களின் உதவிகளையும் பெற்றுக் கொண்டது.
தமிழ்நாட்டின் கட்டிடக் கலைஞர் நரசிம்மனிடம் நூலகத்திற்கான புதிய கட்டிடத்தின் வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. அவர் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை வடிவமைத்தார்.
1959ஆம் ஆண்டில் கட்டிட வேலைகள் முற்றாக முடிந்தன. அதற்கு முன்னரே யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்பு விழவை நடத்தினார். 11.10.1959 அன்று நூலகம் அதி விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. அப்போது நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
1981 இல் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். 1981 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் இந்நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த வன்முறை 1981 மே 31 இரவு அன்று ஆரம்பமானது. அப்போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகியவை முற்றாக எரிக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு என்பது 20ஆம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. அப்போது நூலகத்தில் 97,000 நூல்கள் இருந்தன. அதில் பல அரிய நூல்களும் அடக்கம். மேலும் தென் கிழக்காசியாவிலேயே உள்ள பெரிய நூலகங்களில் யாழ்ப்பாணத்து நூலகமும் ஒன்றாகும். நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்திலிருந்தன.
இந்த நூலக எரிப்பு கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட பல்வேறு சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயத்தை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்த் தேசியப் போக்கிற்கும் உரத்தை ஊட்டியது.
யாழ் நூலகம் எரிக்கப் பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வந்தது. 1981 மே, ஜூன் கலவரங்களுக்கு காரணமானவர்களைக் கண்டறிவதற்கான விசாரணையை நடத்தவில்லை. இதை அமெரிக்காவைச் சேர்ந்தவரும், பன்னாட்டு மன்னிப்பு அவையின் 1981 இலங்கைக்கான உண்மை அறியும் ஆணைக்குழுவின் தலைவருமான ஓர்வில் எச். ஷெல் அப்போது பதிவு செய்திருக்கிறார். இக்குற்றங்களுக்காக எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
நூலகம் எரிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் 1982இல் யாழ் நூலக வாரம் ஒன்றை யாழ்ப்பாண சமூகம் முன்னெடுத்தது. இதன் மூலம் பொது மக்களிடம் இருந்து ஏராளமான நூல்கள் சேகரிக்கப்பட்டன. கட்டிடத்தைப் புனரமைக்கும் வேலைகளும் ஆரம்பமாயின. அதே வேலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான 1983 ஜூலை வன்முறைகள் தென்னிலங்கையில் ஆரம்பித்தது. இந்நிலையில் 1984இல் நூலகக் கட்டிடம் புனரமைக்கப்பட்டது. ஆனாலும் ஈழப்போர் தொடர்ந்து நடந்ததினாலும், கட்டிடம் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் சேதமடைய ஆரம்பித்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர். இதனால் நூலகம் நிரந்தரமாக மூடப்பட்டது.
1998ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்காவின் அரசு நூலகத்தை மீளக் கட்டியெழுப்ப முடிவெடுத்தது. வெளிநாட்டு அரசு உதவி கோரப்பட்டது. இதற்கென 1 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டு 25,000 நூல்கள் வரை சேகரிக்கப்பட்டன. இறுதியாக 2004ஆம் ஆண்டில் நூலகம் பொது மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த "The Jaffna Public Library rises from its ashes" என்ற பெயரில் ஓர் ஆவண நூலைக் கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்து நூலகம் கிரமமாக இயங்கி வந்தாலும் 1981 ஆம் ஆண்டில் அந்நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறாத ஒரு வடுவாக இன்றும் இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust