ஒரு வைரம். அந்த ஒரே ஒரு வைரத்திற்காக சாம்ராஜ்யங்கள் மோதிக்கொண்டன. அந்த ஒற்றை வைரத்திற்கு வரலாறு காணாத படையெடுப்புச் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின. அந்த ஒற்றை வைரக்கல்லுக்காக ஓர் அரச குமாரன் சிறைவைக்கப்பட்டார். இப்படி பல கைகள் மாறி கடைசியில் பிரிட்டன் அரச குடும்பத்தின் கையில் இருக்கும் அந்த வைரக் கல்லின் பெயர் கோஹினூர்.
சுமார் 3.6 சென்டிமீட்டர் நீளம், 3.2 சென்டிமீட்டர் அகலம், 1.3 செமி உயரம் கொண்ட இந்த நிறமற்ற கல் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக கேரட் கொண்ட வைரங்களில் ஒன்று. ஓவல் வடிவத்தில் இருக்கும் இந்த வைரம் உலகில் மிகப் பிரசித்திபெற்ற வைரங்களில் ஒன்று என்றால் அது மிகை அல்ல.
சுமார் 105.6 கேரட் தரமும் 21.12 கிராம் எடையும் கொண்ட இந்த வைரக் கல் தற்போது பிரிட்டனின் முன்னாள் மகாராணி எலிசபெத் அவர்களின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் என்று அழைக்கப்படும் மாவட்டத்தில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட கொல்லூர் சுரங்கத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க, உலகப் புகழ்பெற்ற வைரக்கல் கண்டெடுக்கப்பட்டது.
அன்று ஆந்திரப் பிரதேச நிலப்பரப்பு காகதீய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. காக்கத்தீயர்களின் குலதெய்வமாக வாரங்கல் நகரத்தில் உள்ள பத்ரகாளி அம்மன் இருந்ததாகவும், அந்த இறைவியின் ஒரு கண்ணாக இந்த கோஹினூர் வைரம் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்ததாகவும் சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது .
இவற்றையும் வாசித்துப் பாருங்கள்
Tipu Sultan History : மன்னிப்பு கேட்காமல் போராடிய மாவீரன் திப்பு
Rishi Sunak - Akshata Murty: பிரிட்டன் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய தம்பதி!
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!
14-வது நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜி என்கிற இஸ்லாமிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர், தென்னிந்தியாவின் பல பகுதிகளின் மீது படையெடுத்த போது காக்கத்தீய சாம்ராஜ்யத்திலிருந்து கோஹினூர் வைரத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இப்படி டெல்லியை ஆட்சி செய்து வந்த சுல்தான்களின் கைக்குச் சென்றடைந்த கோஹினூர் வைரம், நாளடைவில் முகலாய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் நிறுவிய ஆகச்சிறந்த மன்னர்களில் ஒருவராகக் கருதப்படும் பாபரின் கைக்குச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.
1530 ஆம் ஆண்டுவாக்கில் பாபர் காலமான பின், முகலாய சாம்ராஜ்யத்தின் அரசனாக ஹுமாயுன், அவரைத் தொடர்ந்து அக்பரும், அவருக்குப்பின் ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ஷாஜஹான் காலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மயிலாசனம் கோஹினூர் வைரம் பாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் செல்வ வளமும் மயிலாசனம் புகழையும் குறித்து அறிந்திருந்த பெர்ஷியா என்கிற நிலபரப்பை ஆட்சி செய்து வந்த நாதெர் ஷா பதினெட்டாம் நூற்றாண்டில் (1739ஆம் ஆண்டு என்கிறது பிபிசி) முகலாய சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்து கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்த மயிலாசனம் உட்பட, பல டன் கணக்கிலான செல்வ வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றார்.
நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்ற செல்வத்தை இழுத்துச் செல்ல மட்டும் சுமார் 700 யானைகள் 4 ஆயிரம் ஒட்டகங்கள் 12 ஆயிரம் குதிரைகள் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி வலைதளம் சொல்கிறது. ஆந்திர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட கோஹினூர் வைரம் முதல்முறையாக இந்தியாவை விட்டு வெளியே சென்றதும் அதுவே முதல் முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மயில் ஆசனத்தில் இருந்து கோகினூர் வைரத்தை கழட்டி தன் கையில் அணிந்து கொள்ளும் ஒரு ஆபரணத்தில் பதித்துக் கொண்டார் நாதெர் ஷா. அதன் பிறகு பல்வேறு நபர்களின் கை மாறி கடைசியில் 1813 ஆம் ஆண்டு இந்தியாவின் வடக்கு பகுதியில் வலிமையான சாம்ராஜ்யத்தை கட்டமைத்து பலருக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்த மகாராஜா ரஞ்சித் சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்.
தொடக்கத்தில் ரஞ்சித் சிங்குக்கு, கோஹினூர் வைரத்தின் மதிப்பு பெரிதாகத் தெரியவில்லை என்றும், நாடைவில் அதன் பெயர், புகழ், அதன் மதிப்பு தெரிய வந்த போது, கோஹினூர் வைரத்தை அத்தனை பத்திரமாக பார்த்துக் கொண்டதாக ச்ல வலைதளக் கட்டுரைகளில் பார்க்க முடிகிறது.
கோஹினூர் என்கிற பெயரில் ஒரு மிகப் பிரமாதமான வைரம் இருப்பதாகவும், அது அத்தனை அழகானது... என்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. உடனடியாக அந்த வைரத்தைக் கைப்பற்ற கிழக்கிந்தியக் கம்பெனி களத்தில் இறங்கியது.
பல்வேறு அரசர்கள் மற்றும் அரச குடும்பங்களின் கைகள் மாறிக்கொண்டிருந்த கோஹினூர் வைரம் ஒரு அதிகாரத்தின் குறியீடு என்று கருதினார். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசி. எனவே இந்த உலகின் மாபெரும் பொக்கிஷம், உலகையே ஆளும் பிரிட்டனிடம் தான் இருக்க வேண்டும் என்றும் கருதினார்.
டல்ஹவுசி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தருணம் 1849 ஆம் ஆண்டு வந்தது. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட மகாராஜா ரஞ்சித் சிங் காலமான பிறகு, சீக்கிய சாம்ராஜ்ஜியத்தில் கடும் குழப்பமும், அரச பதவியைப் பிடிக்கப் போட்டியும் நிலவி வந்தது. கடைசியாக அவருடைய மகன் தலிப் சிங் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு சுமார் பத்து வயது இருக்கலாம்.
இதுதான் சமயமென தன் அதிகாரத்தைக் கையில் எடுத்த டல்ஹவுசி, தலிப் சிங்கின் அம்மாவைச் சிறை வைத்ததாகவும், ஒரு பச்சிளம் பாலகன் தன்னுடைய அம்மாவை விடுவிக்குமாறு ஆங்கிலேயே சாம்ராஜ்யத்தையே டம் கேட்டபோது கோஹினூர் வைரத்தைக் கொடுக்குமாறு வற்புறுத்தியதாகவும், கடைசியில் வேறு வழியின்றி இரண்டாம் ஆங்கிலேய - சீக்கியப் போருக்குப்பிறகு பஞ்சாப் சாம்ராஜ்யம் ஆங்கிலேய அரசுடன் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோஹினூர் வைரம் அரசி விக்டோரியாவுக்கு வழங்கப்பட்டது. இப்படித்தான் இந்தியாவின் பொக்கிஷமாக இருந்த கோகினூர் வைரம் மகாராணி விக்டோரியாவின் கைக்குச் சென்றடைந்து, மணிமகுடத்தில் இடம் பிடித்தது.
கடைசியாகக் கடந்த 2022ஆம் ஆண்டில் காலமான பிரிட்டன் மகாராணி எலிசபெத் வசம் கோஹினூர் வைரத்தைப் பார்க்க முடிந்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியா, இரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளும் கோஹினூர் வைரத்திற்குச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரிட்டன் அரசோ, கோஹினூர் வைரத்தை லாகூர் உடன்படிக்கையின் படி பிரிட்டன் சாம்ராஜ்ஜியம் கைப்பற்றிய சொத்து என்றும், எனவே சட்டப்படி கோஹினூர் வைரம் தங்களுக்குத்தான் சொந்தம் என்றும் கூறி மறுக்கிறது.
சமீபத்தில் பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமான பிறகுகூட இப்போதாவது கோகினூர் வைரம் இந்தியாவிற்கு கொடுக்கப்படுமா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஆனால் அதற்சாக சாத்தியக் கூறு மிகக் குறைவு என்பது போலவே தெரிகிறது. அடுத்து இந்த வைரம் அரசர் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலாவின் கைக்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோஹினூர் வைரம் முதன்முதலில் காக்கத்தீய சாம்ராஜ்யத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தங்கள் குல தெய்வத்தின் கண்ணாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதில் தொடங்கி, டெல்லி சுல்தனத் சாம்ராஜ்ஜியம், முகலாய சாம்ராஜ்யம், பெர்ஷியாவை ஆட்சி செய்து வந்த நாதெர் ஷாவின் அரச பரம்பரை, சீக்கியப் பேரரசின் கீழான சாம்ராஜ்யம், பிரிட்டனின் நவீனகால சாம்ராஜ்யம் என யார் கைகளுக்கு எல்லாம் இந்த கோஹினூர் வைரம் சென்றடைந்ததோ, அந்த சாம்ராஜ்யங்கள் அனைத்தும் கோஹினூரின் வருகைக்குப் பிறகு சரிவைக் கண்டதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த பிரம்மாண்ட கோஹினூர் வைரம் ஒரு சபிக்கப்பட்ட வைரமாகவே பலரும் பார்க்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust