தைவான் வரலாறு : இந்த நாடு உருவானது எப்படி? இந்த தீவுக்கு சீனாவுடன் என்ன பகை?

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா தைவானை ஆதரித்து வருகிறது. தனது கடற்படையைத் தைவானை அருகே அனுப்பி வருகிறது. இப்படி அமெரிக்க – சீன இராணுவங்கள் ஒத்திகை என்ற பெயரில் தைவான் ஜலசந்தி கடலில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தைவான்
தைவான் Twitter
Published on

அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி, செவ்வாயன்று தைவான் நாட்டிற்குச் சென்றதை அடுத்து சீன – தைவான் பதட்டம் அதிகரித்துள்ளது. சீனாவின் முப்படைகளும் தைவான் தீவு நாட்டைச் சுற்றிப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றன. தைவான் நாடு தனக்குரியது என்று சீனா நெடுங்காலமாகத் தெரிவித்து வருகிறது. தைவான் அதை ஏற்கவில்லை. பெரும்பாலான உலக நாடுகள் தைவானை அங்கீகரிக்கவில்லை என்றாலும் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா தைவானை ஆதரித்து வருகிறது. தனது கடற்படையைத் தைவானை அருகே அனுப்பி வருகிறது. இப்படி அமெரிக்க – சீன இராணுவங்கள் ஒத்திகை என்ற பெயரில் தைவான் ஜலசந்தி கடலில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த தைவான் நாடு எப்படி உருவானது என்ற வரலாற்றைப் பார்ப்போம்.

தைவானுக்கு வந்த சியாங் காய் ஷேக்

நவீன சீனக் குடியரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தைவான் தீவு வேறு ஒரு பெயரான இல்ஹா ஃபார்மோசா என்றும் அழைக்கப்படுகிறது. இது சீனாவின் புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தைவானைத் தவிர, இங்கே கின்மென் (க்யூமோய்), மாட்சு, பெங்கு தீவுக்கூட்டம் (பெஸ்கடோர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு சர்ச்சைக்குரிய தீவுப் பிரதேசங்களும் அடங்கும்.

1949 வாக்கில், சியாங் காய்-ஷேக் தலைமையிலான கோமிண்டாங் (KMT), சீனாவில் மக்கள் ஆதரவை இழந்து, அரசையும் பறிகொடுத்தது. தைவான் தீவு, முன்னர் கிங் வம்சத்திலிருந்து ஜப்பானிய காலணியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளுக்குப் பிறகு சீனா வசம் மீண்டும் திரும்பியது. சீனக் கம்யூனிசக் கட்சியிடம் தோற்ற கோமிண்டாங் அரசாங்கமும், சியாக் காய் ஷேக்கும் தைவானுக்கு 1949 வாக்கில் தப்பிச் சென்றனர்.

சியாக் காய் ஷேக்
சியாக் காய் ஷேக்Twitter

மேலும் கோமிண்டாங் கட்சி தைவானிலிருந்து கொண்டு மீண்டும் சீனாவைக் கைப்பற்றலாம் என்று முடிவு செய்து, தைபேயில் ஒரு தற்காலிக தலைநகரை நிறுவியது. புதையல்கள், தங்கம், மற்றும் வெளிநாட்டு செலாவணிகள் ஆகியவற்றைத் தைவானுக்குக் கொண்டு சென்ற கோமிண்டாங் கட்சி, சீனாவை மீட்டெடுக்கலாம் என்று நினைத்தது. கோமிண்டாங் கட்சி ஆதரவாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ ஊழியர்கள் சீனாவிலிருந்து தைவானுக்குத் தப்பிச் சென்ற போது 13 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை இருந்தனர். பின்னர் இவர்கள் தைவானிலேயே குடியேறினர். அங்கிருந்து கொண்டு தாங்கள் தான் சீன அரசு என்று அறிவித்தனர்.

சீனாவை உரிமை கோரும் இரண்டு அரசுகள்

தைவானில் தப்பிச் சென்று வாழ்ந்த கோமிண்டாங் ஆதரவாளர்கள் தங்கள் அரசை சீனக் குடியரசு the Republic of China அல்லது ROC என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம், தைவான் அரசு, பிஆர்சி என்று அழைக்கப்படும் சீன நாடு, அத்துடன் மங்கோலியா மற்றும் சீனாவின் மேற்கு எல்லையில் உள்ள சில பிரதேசங்களையும் உரிமை கோருகிறது. நடைமுறையில், ROC தைவான் பகுதிகளை மட்டுமே நிர்வகிக்கிறது. ROC 1950களில் செய்தது போல் பிரதான சீனாவின் நிலப்பகுதியை மீட்பதில் தீவிரமாக ஈடுபடவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் சீனாவில் வெற்றி பெற்ற மாசேதுங் தலைமையிலான அரசு தன்னை People's Republic of China சீன மக்கள் குடியரசு என்று அழைத்துக் கண்டது. இதை PRC என்று அழைக்கின்றனர்.

தைவான்
சீனா அதிபர் ஷி - ரஷ்ய அதிபர் புதின் நட்பு எவ்வாறு உருவானது? அது எப்படிப்பட்டது?

ஆரம்பத்தில் தைவானிலும் ஜனநாயகம் இல்லை

தைவானுக்கு தப்பிச் சென்று அரசாங்கத்தை நிறுவிய, அதிபர் சியாங் காய்-ஷேக் தைவானில் இராணுவச் சட்டத்தை இயற்றினார். இன்னும் சீனாவுடனான உள்நாட்டுப் போரில் வெற்றி பெறும் ஆர்வத்தில் தைவான் நாட்டில் சிவில் உரிமைகள் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். தைவான் ஜலசந்தி மற்றும் சிறிய பிரதேச மாற்றங்கள் முழுவதும் பல மோதல்களுக்குப் பிறகு, 1987 வரை தைவான் இராணுவச் சட்டத்தின் கீழ் இருந்தது. சியாங்கின் மகன் (பின்னர் தைவானின் அதிபரானாவர்) சியாங் சிங்-குவோ, வருங்கால அதிபர் லீ டெங்-ஹுய் ஆதரவுடன் தைவானின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் தொடங்கினார். இதன் விளைவாக தைவான் முழு ஜனநாயகமயமாக்கப்பட்டது. சியாங் சிங்-குவோவின் ஆட்சி தேசிய நெடுஞ்சாலைகள், அதிகரித்த வீட்டுவசதி, மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு மற்றும் தேசிய நலனுக்காக பல பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களையும் உருவாக்கியது.

DPP
DPPTwitter

சீனக் கலாச்சாரத்தை விடுத்து தைவான் கலாச்சாரம் முன்னெடுக்கப்பட்டது

அவருக்குப் பிறகு லீ டெங்-ஹுய் வாரிசு அதிபராக நியமிக்கப்பட்ட பிறகு, தைவானில் ஜனநாயக செயல்முறையை முழுமையாகத் திறக்க லீ முயன்றார். மேலும் 2000 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்ளூர் தைவானிய கலாச்சார விழுமியங்கள் மற்றும் மொழி (முன்னர் இராணுவச் சட்டத்தின் கீழ் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது) இணைந்து ஊக்குவிக்கப்பட்டது மற்றும் சீன கலாச்சாரத்தை விடத் தைவான் மண் சார்ந்த கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டது. மற்ற சீர்திருத்தங்களில் ROC க்கு சீனாவின் பிரதான நிலப்பகுதியின் மீது எந்த அதிகாரமும் அல்லது கட்டுப்பாடும் இல்லை என்ற யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரசாங்கம் நெறிப்படுத்தியது.

பிறகு தைவானில் பழைய அரசின் ஊழல் பிரச்சினை வெளியான பிறகு, பொதுமக்கள் ஜனநாயக மக்கள் கட்சி (டிபிபி) வேட்பாளரான சென் ஷுய்-பியானை தைவானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். 2000-2008 வரையிலான அவரது பதவிக் காலத்தில், தைவான் உள்ளூர் மயமாக்கல் இயக்கம் தொடர்ந்தது மற்றும் செழித்தது. மேலும் அரசு நிர்வாகம் பல சீர்திருத்தங்களைச் செய்ததின் மூலம் தைவானுக்கும் சீனாவிற்கும் இடையே தூரத்தை உருவாக்க முயன்றது. மற்றும் தைவான் அதன் சொந்த அடையாளத்தை உருவாக்க முயன்றது. இவை அனைத்தும் PRC எனப்படும் சீன அரசிற்குக் கோபத்தை அளித்தன. இப்படித்தான் தைவான் மீதான தனது உரிமையைச் சீனா அதிக குரல் கொடுத்து எழுப்ப ஆரம்பித்தது. இதனால் தைவான் ஜலசந்தியில் அடிக்கடி போர் பதட்டங்கள் ஏற்பட்டன.

தைவான் அதிபர்
தைவான் அதிபர்Twitter

இருநாடுகளுக்கும் ஏற்பட்ட அமைதிக்கால உறவு

மற்றொரு ஊழல் வெளியான பிறகு 2008 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட KMT கட்சி வேட்பாளர் மா யிங்-ஜியோவின் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்தத் தேர்தல் PRC – சீன அரசால் கொண்டாடப்பட்டது. மற்றும் இரு தரப்பும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளைப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கின. பதட்டங்களை மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டு வந்தன. 2009 ஆம் ஆண்டு தைவான் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு இடையே நேரடியாக விமானங்கள் முழு, தடையற்ற சேவையில் பறக்கும் வகையில் அனுமதிக்கப்பட்டன.


முன்னதாக, பயணிகள் முதலில் ஹாங்காங் போன்ற மூன்றாவது இடத்திலிருந்து தைவானுக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. தைவானில் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் கணிசமாகத் தளர்த்தப்பட்டன. பிரதான சீனாவின் நாணயமான ரென்மின்பி இப்போது தைவானில் வெளிப்படையாக வர்த்தகம் செய்யப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதே போன்று புதிய தைவான் டாலர் சீனாவில் மிகவும் பரவலாகப் பரிமாறப்படுகிறது.


அத்துடன் பல வங்கி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, ஊடக உற்பத்தி மற்றும் விநியோகம் , மற்றும் இரு தரப்பிலும் வர்த்தக கட்டணங்களை தாராளமயமாக்கல் போன்றவற்றை இரு தரப்புக்கும் இடையே அதிகரித்த ஒத்துழைப்பின் சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

சீனாவின் பிரதான நிலப்பரப்புடனான சிறந்த உறவுகளை வைத்திருக்கும் ஜனாதிபதி மா 2012ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2014 இல் அவரது செல்வாக்கு பல்வேறு ஊழல்கள் மற்றும் பிரச்சினைகள் காரணமாகச் சரிந்தன.

தைவான்
இந்தியா, சீனா, அமெரிக்கா : அதிபர் மாளிகைகளும், அதன் மதிப்பும் - வியக்க வைக்கும் தகவல்

குறிப்பாகச் சீனாவிலிருந்து சுதந்திரத்தை விரும்பும் கருத்து தைவானிய மக்களிடையே அதிகரிக்க ஆரம்பித்தது. மற்றும் சீனாவுடன் அதிகரித்த பொருளாதார உறவுகளை மக்கள் விரும்பவில்லை. குறிப்பாகச் சீனாவுடன் தைவானின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட வணிக உறவுகளைக் கருத்தில் கொண்டு, தைவான் அதிபர் மா மற்றும் சீனாவின் தலைவர் ஷி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நவம்பர், 2015 இல் சிங்கப்பூரில் முதல் முறையாக நடந்தது. இது சியாங் கை ஷேக் மற்றும் மாவோ சகாப்தத்திலிருந்து வெகுகாலத்திற்குப் பிறகு நடந்த முதல் சந்திப்பாகும்.

எந்தவொரு அரசியல் குறிப்பையும் தவிர்க்க இரு தரப்பினரும் ஒருவரையொருவர் "மிஸ்டர்" என்று அழைத்துக் கொண்டனர்., "ஒரே சீனக் கொள்கை" யின் கீழ் ஜலசந்தி முழுவதும் அமைதியைப் பற்றிப் பேசும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் தைவான் மக்கள் இந்த ஒரே சீனக் கொள்கையை ஏற்கவில்லை. அவர்கள் தைவானது இறையாண்மையை மட்டுமே விரும்புகின்றனர்.

ஜனவரி 2016 இல், DPP கட்சி மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன், சாய் இங்-வென் வென்று அதிபரானார். அதிபர் சாய் 2020 ஜனவரியில் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தைவான்
இலங்கை - சீன உளவுக் கப்பல்: இந்தியாவுக்கு மிரட்டலா? சீனாவின் திட்டம் என்ன?

தைவான் தற்போது இரண்டு கோடியே 32 இலட்சம் மக்கள் வாழக்கூடிய நாடாக இருக்கிறது. தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறது. முக்கியமாக தாராளமயமும், ஜனநாயகமும் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் தைவானைத் தனிநாடாகவே கருதுகின்றனர்.

சீனாவோடு ஒப்பிடும் போது தைவான் மிகச்சிறிய நாடு என்றாலும் அங்கேயும் 3 இலட்சம் இராணுவ வீரர்கள் உள்ளனர்.தற்போது நான்சி பெலோசி வருகையை வைத்து சீன இராணுவம் தைவானை முற்றுகையிட்டு இராணுவப் பயிற்சி எடுத்து வருகிறது. அமெரிக்கக் கப்பல்களும் போட்டியாக ஒத்திகைப் பயிற்சி எடுக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது போலச் சீனா தைவானைப் படையெடுக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அதற்கான அபாயம் இன்றுவரை தொடர்கிறது.

தைவான்
தைவானை முன்வைத்து எழும் அமெரிக்க – சீன நெருக்கடி : போர் மூளுமா? - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com