நவ்ரூ : வளமான நாடு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை - இருண்ட வரலாறு

பாஸ்பேட் தாது சீக்கிரமே காலியாகவிடும் என அறிந்த நவ்ரு அரசு 400 வெளிநாட்டு வங்கிகளுக்கு தீவில் தொழில் செய்ய 90களில் உரிமம் வழங்கியது. மேலும் இந்த உரிமங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்பட்டது. விரைவிலேயே சட்டவிரோத பணம் தீவின் வங்கிகளில் குவிந்தது.
நவ்ரூ
நவ்ரூNewsSense

ஆஸ்திரேலியாவிற்கும் ஹவாய்க்கும் இடையில் அமைந்துள்ளது நவ்ரு தீவு. இது உலகின அனைத்து நாடுகளிலிருந்தும் வெகு தூரத்தில் அமைந்துள்ளது. 1798 ஆம் ஆண்டில் ஸ்னோ ஹண்டர் என்று அழைக்கப்படும் ஒரு பிரிட்டீஷ் கப்பல் சீனக்கடல் வழியாகச் செல்லும் போதுதான் இத்தீவு முதன்முறையாக கண்டறியப்பட்டது.

நூற்றுக்கணக்கான நவுருவாசிகள் கப்பலை நோக்கி வரவேற்கச் சென்றாலும் பிரிட்டீஷ் கப்பல் ஆட்கள் தீவில் இறங்கவில்லை. இருப்பினும் கப்பலின் காப்டன் ஜான் ஃபியர்ன் அத்தீவிற்கு "இன்பமான தீவு" என்று பெயரிட்டார். சூடான காற்றும், தீவின் பச்சை பீடபூமியும், பனைமரங்களும், அழகான வெள்ளை மணல் கடற்கரைகளும் அவர் அப்படி ஒரு பெயரை சூட்ட வைத்தன.

இப்படி ஒரு கப்பலில் புதிய மனிதர்கள் வந்தது நவுருவாசிகளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதற்கு முன் அவர்கள் வேறு யாரையும் பார்த்ததில்லை. அந்த தீவில் வாழ்க்கை அமைதியாகவே இருந்தது. சில சமயம் நவ்ரூவில் உள்ள 12 குலங்களுக்குடையில் அவ்வப்போது சண்டைகள் நடக்கும்.

தீவின் ஒரே மேற்பரப்பு நீர் உப்பு நிறைந்ததாகவும், ஆழமற்றும் இருந்தது. இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நவுருக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்ந்து வந்தார்கள். சமூகக் கொடுமைகள் இருந்தாலும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆங்கிலம் பேசும் உலகிற்கு கேப்டன் ஃபியர்ன் இத்தீவை அறிமுகப்படுத்தியது ஒரு இருண்ட காலத்தின் சகுனமாக இருந்தது. பின்னர் நடந்த வரலாறு அதை உறுதிப்படுத்தியது.

நவ்ரூ
இலவசங்களால் இந்தியாவில் இலங்கை போன்றதொரு நிலை வருமா? - Analysis
NewsSense

இந்நிலையில் 1830 களின் முற்பகுதியில் முதல் வெளிநாட்டு பயணிகள் நவ்ருவிற்கு வந்தனர். அவர்கள் கற்பனை செய்தது போல வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. அவர்களின் ஒருவரான ஜான் ஜோன்ஸ் நவ்ரு தீவின் கடற்கரையில் வாழ்ந்த மக்களை கொடூரமாக ஆட்சி செய்தார். பலரைக் கொன்றார். தீவின் பன்றிகள் மற்றும் தேங்காய்களுக்கு பதிலாக புகையிலை, மதுபானம், துப்பாக்கிளை வர்த்தகம் செய்யம் தரகர் வேலையை செய்தார். இறுதியில் ஜோன்ஸ் நவ்ரு தீவின் தலைவர்களோடு சண்டையிட்டார். 1841 இல் அவர்கள் அவரை நவுருவின் கிழக்கே தொலைவில் உள்ள பனாபாவுக்கு நாடு கடத்தினார்கள்.

இதற்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு கிழக்கே 900 மைல் தொலைவில் உள்ள பிரிட்டிஷ் தண்டனைக் காலனியான நோர்போக் தீவில் இருந்து தப்பிய வில்லியம் ஹாரிஸ் 1842 இல் நவுருவில் தரையைத் தொட்டார். ஒரு தண்டனைக் கைதியான அவர் வணிகம் செய்ய அங்கு வரவில்லை. சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழவே வந்தார். அவர் நவ்ரூ பெண் ஒருவரைத் திருமண் செய்து கொண்டு ஒரு பெரிய குடும்பத் தலைவராக ஒரு உள்ளூர்வாசியாக மாறினார். தீவை கடந்து செல்லும் ஐரோப்பியர்களுடன் பரிமாற்றங்களை செய்து கொள்ள நவ்ரு மக்களுக்கு உதவினார். 50 ஆண்டுகள் வாழ்ந்த ஹாரிஸ் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நவ்ருக்களின் வாழ்க்கையை பல வழிகளின் முன்னேற்றினார்.

1870களில் தீவு முழுவதும் நவ்ரூக்களின் வீடுகளில் துப்பாக்கிகள் இருந்தன. மேலும் அவர்கள் புகை, குடிப்பழக்கத்திற்கும் ஆளாகினர். குடிபோதையில் நவ்ரு தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட பிறகு அவர்களிடையே பெரும் வன்முறை நிகழ்ந்தது. குலங்களுக்கிடையே முன்பு வன்முறை நடந்தால் அது தீர்க்கப்படும் நடைமுறைகள் இப்போது பயன்படவில்லை. தீவே இரத்தக்களறியானது. 1881 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் கடற்படைக் கப்பல் தீவிற்கு வந்தது. ஹாரிஸ் கப்பல் காப்னிடம் தீவில் பெரும் உள்நாட்டுச் சண்டை நடப்பதாக தெரிவித்தார். தீவில் ஒன்றும் பொருள் கிடைக்கவில்லை என்பதால் அக்கப்பல் அலட்டிக்கொள்ளாமல் சென்று விட்டது.

NewsSense

தீவின் இயற்கை வளத்தை அழித்த பாஸ்பேட் தாது சுரங்கம்

அந்நேரத்தில் பசிபிக் கடல் பயணத்தில் ஒரு வழிநிறுத்தமாக நவ்ரு தீவு ஓரளவுக்கு முக்கியத்துவம் உடையதாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பசிபிக் தீவுகள் எனும் வணிக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் எல்லீஸ், ஒரு புவியியலாளர் ஆவார். அவர் 1899 இல் நவ்ரு தீவில் உயர்தரமான பாஸ்பேட் தாது வளம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

1901 இல் நவ்ருவுக்கு பயணம் செய்த எல்லீஸ் முழுத்தீவிலும் 80% சுண்ணாம்பு பாஸ்பேட் இருப்பதைக் கண்டறிந்தார். இதன் பிறகு அவரது நிறுவனம் பசிபிக் பாஸ்பேட் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அந்நிறுவனம் 1905 இல் ஜெர்மனியோடு நவ்ரு தீவில் பாஸ்பேட் எடுக்க ஒப்பந்தம் போட்டது. அடுத்த பத்தாண்டுகளில் நவ்ருவில் இருந்து ஆயிரக்கணக்கான டன் பாஸ்பேட் தாது ஏற்றுமதி செய்யப்பட்டது.

நவ்ரு மக்கள் தமது வீடுகளை குளிரான கடற்கரையில்தான் அமைத்தருந்தனர். தீவின் மேட்டுப்பகுதியில் வாழ்வதில்லை. அனால் அப்பகுதியில்தான் அரியவகை மரங்கள், பறவைகள், புதர் காடுகள் நிறைந்திருந்தன. சுரங்க நிறுவனமோ அதை அத்தனையும் அழித்து விட்டு சுரங்கம் தோண்டினர். இப்படியாக நவ்ருவின் இயற்கை வளம் அழிக்கப்பட்டது.

முதல் உலகப்போரின் துவக்கத்தில் ஜெர்மனியிடமிருந்த நவ்ரு தீவை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அங்கே சுரங்கத்தை நவீனமாக்கி ஏற்றுமதியை அதிகரிப்பதில் ஆஸ்திரேலியர்கள் கவனம் செலுத்தத் துவங்கினர். 1920 களில் நவ்ரு 2,00,000 டன் பாஸ்பேட் தாதுவை ஏற்றுமதி செய்தது. இருபது வருடங்களுக்குள் அது நான்கு மடங்காக அதிகரித்தது. உலக சராசரி விலைக்கும் குறைவாகவே அது ஏற்றுமதி செய்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளில் உள்ளள விவசாயிகளுக்கு அதனால் பாஸ்பேட் உரத்தை குறைந்த விலையில் மானியமாக கொடுக்க முடிந்தது.

1942 இல் ஜப்பான் நவ்ரூவை ஆக்கிரமித்த பிறகு பாஸ்பேட் சுரங்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நவ்ரு மக்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 1945 ஆம் ஆண்டில் கால்பங்கு நவ்ரு மக்கள் கொல்லப்பட்டு 600க்கும் குறைவானவர்களே இருந்தனர். மீண்டும் இத்தீவு ஆஸ்திரேலியாவால் நிர்வகிக்கப்பட்டது.

மீண்டும் பாஸ்பேட் தொழில் வேகம் பிடித்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து விவசாயிகள் 1963 வரை சந்தை விலையை விட குறைவாகவே செலுத்தி வந்தனர். நவ்ரு 1968 இல் சுதந்திரம் அடைந்த போது தீவிலிருந்து 35 மில்லியன் மெட்ரிக் டன் பாஸ்பேட் சுரண்டப்பட்டிருந்தது. அது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது.

சுதந்திரம்

1968ற்குள் நவ்ரூ தீவின் மூன்றில் ஒரு பகுதி சுரங்கத்தால் தோண்டப்பட்டிருந்தது. நவ்ரு மக்கள் தீவின் ஓரத்தில் சிறிய பகுதிகளில் வாழுமாறு துரத்தப்பட்டனர். பிறகு நவ்ரூ தீவு சுதந்திரமடைந்தாலும் நவ்ரு அரசு மிச்சமிருக்கும் பாஸ்பேட் தாதுவை ஏற்றுமதி செய்ய தீர்மானித்தது. ஆனால் அது ஓரிரு தலைமுறைக்குள் காலியாகிவிடும் என்று தெரிந்தே அரசு அதில் இறங்கியது.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் நவ்ருக்கள் செல்வந்தர்கள் ஆனார்கள். நவுருவின் பாஸ்பேட் ராயல்டி அறக்கட்டளையில் 1 பில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் இருந்தது. நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக இருந்தது. பெரும்பாலான மக்கள் ஆடம்பரமாக வாழவில்லை. ஆனால் அரசு இலவசக் கலவி, சுகாதாரம் வழங்கியது. மாறாக அரசாங்கம், அதன் அதிகாரிகள் உல்லாசக் கப்பல்கள், விமானங்கள், ஓட்டல்களை வாங்கியது. நவ்ரு அரசியல்வாதிகள் தனி விமானங்களில் அயல்நாடு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்கள். தீவைச் சுற்றிவருவதற்கு 20 நிமிடம் போதுமானது என்றாலும் அவர்கள் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கினார்கள். ஒரு போலீஸ் அதிகாரி லம்பார்கினி காரையே வாங்கினார்.

1967க்கு முன்பு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நவ்ருவின் சுரங்கத்தை சுரண்டியதற்கு இழப்பு கோரப்பட்டது. இதற்காக 1989 இல் நவ்ரு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா 50 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர்களையும், அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் 50 மில்லியன் டாலர்களை தருவதாகவும் ஒப்புக் கொண்டது. அதில் பிரிட்டனும், நியூசிலாந்தும் தலா 12 மில்லியன் டாலரை தருவதாக ஒப்புக் கொண்டன. இது நவ்ரூ அரசுக்கு ஒரு தாரமீக வெற்றி என்றாலும் தீவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு இந்த நிவாரணம் அற்பமானது ஆகும்.

NewsSense

ஒரு சகாப்தத்தின் முடிவு

பாஸ்பேட் தாது சீக்கிரமே காலியாகவிடும் என அறிந்த நவ்ரு அரசு 400 வெளிநாட்டு வங்கிகளுக்கு தீவில் தொழில் செய்ய 90களில் உரிமம் வழங்கியது. மேலும் இந்த உரிமங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வழங்கப்பட்டது. விரைவிலேயே சட்டவிரோத பணம் தீவின் வங்கிகளில் குவிந்தது. 90 களின் மத்தியல் நவ்ரு பொருளாதார குடியுரிமையை வழங்கியது. இப்படி இரண்டு வகைகளிலும் வரி ஏய்ப்பு, பண மோசடி மூலம் நவ்ரூவில் பில்லியன் கணக்கிலான டாலர் இலாபம் குவிந்தது.

மேலும் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வருவோருக்கான தடுப்பு முகாம்கள் நவ்ரு தீவில் அமைக்கப்பட்டன. இதில் ஈராக், ஆப்கானைச் சேர்ந்த மக்கள் அடைக்கப்பட்டனர். இதற்கென பணத்தை ஆஸ்திரேலியாவிடமிருந்து நவ்ரு அரசு வசூலித்தது. இன்னொரு புறம் பாஸ்பேட் தாது ஏற்றுமதி 2004 இல் 22,000 டன்களாக குறைந்து போனது. அந்த அளவிற்கு இத்தாது காலியாகிவிட்டது.

கடல் கடந்த வங்கிகள், காலியான தாது இவையெல்லாம் நவ்ரூவின் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்ய முடியவில்லை. அரசுக்கு வருமானம் இல்லை. எனவே அதிக அளவில் கடன் வாங்கப்பட்டது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது நவ்ரு அரசாங்கம் தனது நிதித்துறையை நிர்வகிக்க ஆஸ்திரேலியாவை அனுமதிக்க ஒப்புக் கொண்டது.

பணமோசடி செய்வதை நிறுத்த அமெரிக்கா முதலான சர்வதேசநாடுகள் நவ்ருவுக்கு அழுத்தம் கொடுத்தன. இதனால் நவ்ரு வங்கி விவகாரங்களின் பின்வாங்கியது. தற்போது தீவில் இரண்டாம் தர பாஸ்பேட் தாது சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் இருக்கிறது. இதை ஏற்றுமதி செய்தாலும் அதன் பொருளாதாரச் சிக்கல் தீர்வதாக இல்லை.

நவ்ரூ
உக்ரைன் ரஷ்யா: புச்சா நகரத்தில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்கள், பதற வைக்கும் செய்தி

அகதிகளின் காலனி

இறுதியில் நவ்ரு தீவு ஆஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகளின் காலனியாக மாறியது. 2014 இல் 1,200க்கும் மேற்பட்ட அகதிகள் அங்கே எந்த வசதியுமின்றி வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமது உரிமைகளைக் கோரி கலவரமும் செய்தனர். கிட்டத்தட்ட பாலைவனத்தில் வாழ்வது போன்றது அவர்களது வாழ்க்கை. சிலர் தற்கொலைக்கும் முயன்றனர்.

இன்று நவ்ரூ தீவு மேற்குலக நாடுகளால் சூறையாடப்பட்ட தீவு தேசமாக விளங்குகிறது. வேலையின்மை, ஒரு சில உணவகங்கள், துருப்பிடித்த் கார்கள், அழுக்கான வீடுகள், குப்பைகள் போன்றவைதான் தீவில் இருக்கின்றன. அகதிகள் தவிர நவ்ரு தீவில் இன்று 10,000 பேர் வசிக்கின்றனர். உணவு வகைகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. குடிநீர் கூட இறக்குமதியாகிறது. உடல்பருமன், நீரிழிவு நோயால் நவ்ரு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிப்பழக்கம் அங்கே அதிகமுள்ளது.

1900 களில் இருந்து நவ்ரு தனது தாவர வகைகளில் 80% த்தை இழந்திருந்தது. இப்படியாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஒரு தீவு அன்னிய நாடுகளின் சுரங்கத் தொழிலால் இயற்கை வளத்தையும், வாழ்க்கையையும் இழந்து ஒரு சிறைத் தீவு நாடாக மாறிவிட்டது.

ஒரு அழகான சிறிய தீவு நாட்டின் ஒளிமயமான காலம் ஒரு நூற்றாண்டிற்குள் இருண்ட காலமாக மாறிவிட்டது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com