உப்பு முதல் உலோகம் வரை, வாட்டர் கேன் முதல் விமான சேவை வரை கொடிகட்டிப் பறக்கும் டாடா, ஒரு காலத்தில், ஒரு நபரின் பேச்சைக் கேட்டு ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிய கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அக்கதையின் பெயர் TOMCO
1907 - 08 காலகட்டத்தில் டாடா இரும்பு ஆலைப் பணிகள் தொடங்கின, உற்பத்தி தொடங்க 1912 பிப்ரவரி மாதமாகிவிட்டது. இந்தியாவின் பல சமஸ்தானங்களிலிருந்தும் பல முக்கியஸ்தர்களும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உட்பட பல பெருந்தலைவர்களும் டாடா ஆலைக்கு வந்து பார்த்து வியந்தார்கள்.
மறுபக்கம், 1914ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் வெடித்தது. உக்கிரமாக அப்போரை எதிர்கொண்டிருந்த பிரிட்டனுக்கு மலைமலையாக இரும்பு தேவைப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இரும்பு ஆலையா? என நகைத்த பிரிட்டன், இப்போது டாடா இரும்பு ஆலையின் கதவைத் தட்டியது. டாடாவும் தன் வியாபாரத்தை அதிகரிக்க ராப்பகலாக ஆலையை இயக்கி உற்பத்தி செய்த இரும்பு, இரான், எகிப்து, பாலஸ்தீனத்தின் ரயில்வே பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
'என் காலை உணவுக்கு எல்லா இரும்பையும் எடுத்துக் கொள்வேன்' என்று ரயில்வேயின் ஆணையராக இருந்த ஃப்ரெடரிக் அப்காட் கூறிய வார்த்தைகளை நாம் மறந்திருக்கலாம், ஆனால் டாடா மறக்கவில்லை. அவருக்கு எங்கள் இரும்பைச் சாப்பிட்டு அஜீரணமாகலாம், எனவே அவர் எங்களை சந்திக்கமாட்டார் என்று கருதுகிறேன் என வேடிக்கையாகக் கூறினார் தொராப்ஜி டாடா.
உலகப் போர் முடிவுக்கு வருவதற்கு முன்பே, 1917ஆம் ஆண்டு டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி (TOMCO) என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, டாடா குழுமம் ஆழம் தெரியாமல் காலைவிட்டு சிக்கியது.
தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வது தான் இதன் நோக்கம். இந்த நிறுவனத்தைக் குறித்து பார்பபதற்கு முன், புர்ஜோர்ஜி பாட்ஷா என்கிற நபரைக் குறித்து பார்த்துவிடுவோம்.
ஜாம்சாட்ஜி டாடாவின் நம்பிக்கைக்குரிய உறவினர். மெத்தப் படித்தவர். கேம்பிரிட்ஜில் கணிதப் பிரிவில் படித்துவிட்டு, கராச்சியில் ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு, பேராசிரியர் பணிக்கான தேர்வில் ஒரு பிட்டிஷ்காரருக்கு முன்னுரிமை கொடுத்தது தெரிய வர, ராஜினாமா செய்து வெளியேறியவர் சமூக சேவை செய்யப் போகிறேன் என கிளம்பினார்.
அவர் கல்வி மற்றும் திறன் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்த ஜாம்செட்ஜி டாடா, அவரை மெல்ல பேசி டாடா நிறுவனத்தில் பணியாற்ற சம்மதிக்க வைத்தார். ஜாம்செட்ஜி தன் சொந்த மகன் ரத்தன் ஜி டாட்டாவையே புர்ஜோர்ஜியிடம் கல்வி பயில அனுப்பினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
விஷயத்துக்கு வருவோம். எண்களில் புகுந்து விளையாடும் பேராற்றல் கொண்ட புர்ஜோர்ஜியை உலகத்தை சுற்றிப் பார்த்து, இந்திய அறிவியல் மையத்துக்கு உயிர் கொடுக்கச் சொன்னார் ஜாம்செட்ஜி. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாக வைத்து இந்திய அறிவியல் நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கு இவர் தான் காரணம்.
ஒரு வியாபாரத்தின் சிக்கலான பொருளாதார விவகாரங்கள் குறித்து விளக்கம் பெற, டாடா குழுமத்தின் ஊழியர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் நாடிய நபரும் புர்ஜோர்ஜி பாட்ஷா தான். அந்த அளவுக்கு கணிதத்திலும் பொருளாதாரத்தில் பண்டித்தியம் பெற்றிருந்தார் பாட்ஷா. கிட்டத்தட்ட ஜாம்செட்ஜியின் எல்லா திட்டங்களிலும் அவருக்கு வலது கரமாக உயர்ந்தார். ஜாம்செட்ஜியின் மறைவுக்குப் பிறகு கூட, தொராப்ஜி மற்றும் ரத்தன் ஜி டாடாவுக்கு புர்ஜோர்ஜி இருந்தது பேருதவியாக இருந்தது.
உலகம் முழுக்க சுற்றித் திரிந்து டாடா குழுமத்தை அப்டேட்டாக வைத்திருக்கும் பணியிலிருந்த புர்ஜோர்ஜி, அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்த போது எட்வர்ட் தாம்சன் என்கிற சமையல் எண்ணெய் துறை ஆலோசகரோடு நண்பரானார். தேங்காய் எண்ணெய் வியாபாரத்தை அமெரிக்கர்கள் விரும்புவதாகவும், கிட்டத்தட்ட 70% லாபம் கிடைப்பதாகவும் கூறினார் எட்வர்ட் தாம்சன்.
கோடிக்கணக்கான தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் இந்தியாவில், எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்றால் எப்படி? நாம் எண்ணெய் உற்பத்தியில் இறங்க வேண்டும் என ஒரு முறை ஜாம்செட்ஜி கூறியது, புர்ஜோர்ஜி பாட்ஷாவின் நினைவுக்கு வந்தது.
இந்தியாவில் எண்ணெய் ஆலை தொடங்குவதற்கான திட்டத்தை சமர்பிக்குமாறு தாம்சனிடம் கூறினார் புர்ஜோர்ஜி. ஒன்றுக்கு மூன்று ஆலைகளை நிறுவ தன் திட்டத்தை சமர்பித்தார் தாம்சன். மேற்கூரியது போல, 1917ஆம் ஆண்டு கேரளாவில் டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி தொடங்கப்பட்டது.
தேவை, லாபம் போன்றவைகளை எல்லாம் விளக்கிய தாம்சன், அமெரிக்கா பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்திருப்பதையும், அமெரிக்கா பிலிம்ப்பைன்ஸ் நாட்டு தேங்காய்களையே அதிகம் விரும்புவதையும் டாடா நிறுவனத்திடமிருந்து மறைத்துவிட்டார் எட்வர்ட் தாம்சன்.
பகுதி 7 ஐப் படிக்க
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust