தென்னமெரிக்க நாடானா கொலம்பியாவின் தலைநகரம் பொகோட்டாவின் வடக்கில் இருக்கும் புறநகர்ப் பகுதி. அங்கே நகரின் கழிவுகள் மலை மலையாய்க் கொட்டப்படுகின்றன. நள்ளிரவில் கை வண்டிகளோடு ஒவ்வொரு குப்பைத் தொட்டியாய் தனக்குத் தேவையான கழிவுப் பொருட்களைத் தேடும் தொழிலாளிகள். இப்படி 25,000 பேர்கள் அங்கே பழைய பொருட்களைத் தேடி எடுத்து மறு சுழற்சிக்காக விற்று தமது வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார்கள்.
இத்தகைய முறைசாரா தொழிலாளிகள் அங்கே கொட்டப்படும் பணக்காரர்களின் குப்பைகளிலிருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டிகளைத் தேடி எடுக்கிறார்கள். அதைப் பழைய பொருள் வாங்கும் கடைகளில் விற்று சில கொலம்பிய பெசோஸ் நாணயங்களைப் பெறுகிறார்கள். பெசோஸ் என்பது கொலம்பியாவின் செலாவணியாகும்.
கொலம்பியாவின் நகரங்களில் வாழுவோருக்கு எட்டு பேரில் ஒருவருக்கு வேலை இல்லை. நாட்டின் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோரின் எண்ணிக்கை 40% ஐ தொடுகிறது. இந்த நிலையில் சில பெசோக்களுக்காக தொழிலாளிகள் அந்த குப்பைக் கிடங்கில் இடுப்பொடிய வேலை செய்கிறார்கள்.
வெனிசூலா நாட்டில் சமையல்காரராக பணிபுரிந்த 52 வயதான ஜீசஸ் மரியாவிற்கு தற்போது படியளப்பது இந்த குப்பை சேகரிக்கும் வேலைதான். இங்கே வாழ்க்கை கடுமையாக இருந்தாலும் பிழைப்பதற்கு இது ஒன்றே வழி என்கிறார் அவர்.
இந்தக் குப்பை சேகரிக்கும் தொழிலை அகற்றுவதாக கொலம்பியாவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கூறியிருக்கின்றனர். ஆனால் கள நிலவரப்படி ஆண்கள், பெண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட இந்த தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் கொலம்பியாவில் சமூக ஏற்றத்தாழ்வு மிக அதிகமாகும். அருகில் இருக்கும் வெனிசூலாவில் இருந்து 18 இலட்சம் மக்கள் கொலம்பியாவில் தங்களுக்கு ஏதும் ஒரு வாழ்க்கை கிடைக்குமா என்று புலம் பெயர்ந்திருக்கிறார்கள்.
பொகோட்டா நகர நிர்வாகம் 2020இல் எடுத்த கணக்கின்படி நகரில் 80 இலட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றால் அதில் 25,000 பேர்கள் குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சி கடைகளுக்கு விற்று வாழ்கிறார்கள்.
இவர்களுக்கு வருமானம் எவ்வளவு இருக்கும்? இந்திய ரூபாயில் சொல்வதாக இருந்தால் ரூ 230லிருந்து ரூ 340 வரை ஒரு தொழிலாளிக்கு வருமானமாகக் கிடைக்கும். இதற்காக அவர்கள் பலமணி நேரம் குப்பைகள் மத்தியில் பாடுபட வேண்டும்.
உலக வங்கியின் மதிப்பீட்டின் படி வருமானத்தில் அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. மேலும் லத்தின் அமெரிக்காவிலேயே முறைசாரா தொழிலாளிகள் இங்கு தான் அதிகம்.
கொலம்பிய தலைநகர் நாளொன்றுக்கு 7,500 டன் குப்பைகளைக் கழிவாய் வீசுகிறது. அதில் 16% பொருட்கள் மறுசுழற்சிக்கு விற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்தின் புள்ளிவிவரம் காட்டுகிறது.
குப்பை சேகரிக்கும் தொழிலாளிகளுக்கு ஒரு நாள் 780 ரூபாய் இருந்தால் மட்டுமே ஒரு வேளை உணவு, ஒரு படுக்கையில் ஓரிரவு தங்குவது மற்றும் தமது குப்பை சேகரிக்கும் வண்டிகளை நிறுத்தத்தில் நிறுத்துவது முடியும்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் வரை குப்பை சேகரிக்கும் தொழிலாளிகள் தமது குப்பை வண்டிகளை இழுப்பதற்குக் குதிரைகளையும், கழுதைகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால் மிருகவதை கூடாது என நகராட்சி நிர்வாகம் அதற்குத் தடை செய்து விட்டது. இப்போது வண்டிகளை மனிதர்கள் இழுக்கிறார்கள். மிருகவதை கூடாது என்று சொன்ன நிர்வாகம் இந்த மனித வதையை மட்டும் அனுமதிக்கிறது.
ஆயினும் சிலர் இந்த குப்பைகளைப் பெருமளவு எடுத்துக் கொண்டு நெடுந்தூரம் செல்வதற்குப் பழைய மோட்டார் வண்டிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளிகள் கைகளால்தான் வண்டிகளை இழுக்கிறார்கள்.
தொழிலாளிகள் எடுத்து வரும் மறுசுழற்சிக்கான பொருட்களை வாங்குவதற்கென்றே பொகொட்டாவில் 15 கடைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரான மார்த்தா முனோஸ், “இங்கு பழைய பொருட்களை விற்க வருபவர்கள் தெருவில்தான் வசிக்கிறார்கள். இந்த தொழிலால் அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் வருமானம் கிடைக்கிறது" என்கிறார்.
இது கொலம்பியாவிற்கு மட்டுமே உரிய யதார்த்தம் அல்ல. சென்னை மாநகநரின் குப்பைகள் கொட்டப்படும் பெருங்குடியில் கூட நாம் இத்தகைய காட்சிகளைக் காணலாம். காக்காய் முட்டை படம் கூட ஓடும் ரயில்களிலிருந்து விழும் நிலக்கரி துண்டுகளை பொறுக்கி வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை விவரித்திருந்தது.
ஷாப்பிங் மால்கள், பொழுது போக்கு பூங்காக்கள், மேம்பாலங்கள், மெட்ரோக்கள், மல்டிபிளக்ஸ் சினிமாக்கள் என்று நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கமும் அனுபவிக்கும் இந்நகரங்களில்தான் குப்பைகளை நம்பியே வாழும் பெருங்கூட்டமும் இருக்கிறது. இது நகரத்தின் அலங்காரத்தில் உள்ள அழுக்கா, இல்லை இருப்பவன் இல்லாதவனுக்கிடையில் உள்ள பள்ளத்தாக்கின் ஆபாசமா?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust