அமேசான் ஜெஃப் பெசோஸ் உல்லாச கப்பல் : உடைக்கப்படும் வரலாற்று பாலம் - கிளர்ந்தெழுந்த மக்கள்

பெசோஸின் ஆசைப்படி, புதிய உல்லாச சொகுசுப் படகில் என்னென்ன வசதிகள் இடம்பெற வேண்டும் என கேட்டுக் கேட்டு அதை உருவாக்கினார்கள், ரோட்டர்டாம் படகு நிறுவனத்தினர். 417 அடி நீளமான சொகுசுப் படகு ஒருவழியாக நிறைவுக் கட்டத்தை அடைந்துவிட்டது.
Jeff Bezos
Jeff BezosTwitter
Published on

உலகின் முதல் மூன்று செல்வந்தர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் பெசோஸ் பற்றிய அண்மைத் தகவல் இது... ஆனாலும் பல மாதங்களாக இழுத்துக்கொண்டே இருக்கும் ஒரு விவகாரமும்கூட!

ஒரு பக்கம், எலான் மஸ்க் விண்வெளிக்குப் பயணம் போவதற்கும் மற்றவர்களை விண்வெளிக்குக் கூட்டிச்செல்லவும் தனியாக ஸ்பேஸ் எக்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தையே தொடங்கினார். கையோடு அதன் மூலம் தன் விண்வெளிப் பயண ஆசையையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டார்.

செல்வந்தர் போட்டியில் அவருக்கு ஈடுகொடுப்பவர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் பெசோஸுக்கும் இப்படி பெரிய ஆசை இல்லாமல் இருக்குமா என்ன?

Elon Musk
Elon MuskTwitter

உலகின் அதிசொகுசு வசதிகளைக் கொண்ட உல்லாசப் படகு ஒன்றை உருவாக்கி, அதில் கடல் கடலாக கண்டம் கண்டமாகச் சுற்றிவர வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதைச் செயல்படுத்தும் வகையில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாமில் உள்ள படகு கட்டும் நிறுவனத்தில், 500 மில்லியன் டாலர் செலவில் தனக்கான படகைக் கட்டித் தர ஆர்டரும் கொடுத்துவிட்டார்.

காசு தந்தால் எந்த வேலையும் நிற்குமா என்ன? காரியங்கள் மளமளவென நடக்கத் தொடங்கின. பெசோஸின் ஆசைப்படி, புதிய உல்லாச சொகுசுப் படகில் என்னென்ன வசதிகள் இடம்பெற வேண்டும் என கேட்டுக் கேட்டு அதை உருவாக்கினார்கள், ரோட்டர்டாம் படகு நிறுவனத்தினர். 417 அடி நீளமான சொகுசுப் படகு ஒருவழியாக நிறைவுக் கட்டத்தை அடைந்துவிட்டது.

Bezos'Yacht
Bezos'YachtTwitter

படகைக் கட்டி முடித்த பின்னர் அதைக் கடலுக்குள் விடுவது எப்படி என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் அல்லவா? ஓசேன்கோ எனும் டச்சு நாட்டின் அந்தப் படகு நிறுவனம், ரோட்டர்டாம் நகரின் உள்ளாட்சி அமைப்பிடம் முறைப்படி ஒரு கோரிக்கை மனுவை அளித்தது. உள்ளாட்சி அமைப்பிடம் மனு அளிப்பதற்கான அவசியம் என்ன என்று இயல்பாக ஒரு கேள்வி எழக்கூடும்.

படகு கட்டும் துறையிலிருந்து படகை கடலுக்கு விடவேண்டும் என்றால் கோனிங்சேவன் கால்வாய் வழியாகச் செல்லவேண்டும். அந்தக் கால்வாயின் குறுக்கே பழமையான பாலம் ஒன்று இருக்கிறது. அதன் வழியாக பெசோஸ் கட்டிய படகைக் கொண்டுசெல்ல முடியாதபடி, அதன் அமைப்பு இருக்கிறது. ஒரே வழி, பாலத்தின் மையப் பகுதியை தற்காலிகமாகவாவது கழற்றி எடுத்தால் உண்டு.

அதுதான் விவகாரமே!

Rotterdam Bridge- Bezos'Yacht
Rotterdam Bridge- Bezos'YachtTwitter

இதைத் தெரியாமலா படகைக் கட்டுவதற்கு ஆர்டர் கொடுத்தார்கள்? ஆர்டர் தருவதற்கு முன்னர் இப்படி ஒரு பிரச்னை வருமென்று தெரியாதா எனக் கேட்டால், நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதுதான் பதில்! தெரிந்தும் செய்தார்கள் என்றால், பாலத்தைப் பிரித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தைத் தவிர, வேறென்ன இருக்கமுடியும்?

1878ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மீது, 1940களில் இரண்டாம் உலகப் போரின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. நாசி படைகளால் அப்போது ஏற்பட்ட சேதாரத்தைச் சரிசெய்து மீண்டும் கட்டியமைக்கப்பட்டது. அதற்கடுத்து கடந்த 2017ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாலமானது பிரிக்கப்பட்டதற்கே நகர மக்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Jeff Bezos
எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பர்க் : இவர்களுக்கு இவ்வளவு சொத்தா?

அதனால், ரோட்டர்டாம் நகர நிர்வாகத்தின் சார்பில், மேற்கொண்டு இந்தப் பாலத்தை எந்தக் காரணத்துக்காகவும் பிரிக்கப் போவதில்லை என மக்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி கடந்த பிப்ரவரியில், பெசோஸின் படகுக்காக விதிவிலக்கு அளிக்க உள்ளூராட்சி அமைப்பு தீர்மானித்தது. நகர மக்களோ கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இடையில் 1993இல் மொத்தப் பாலத்தையும் இடித்துவிடுவது என்றுகூட முடிவெடுக்கப்பட்டது. அதுவும் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

“ ரோட்டர்டாம் நகரத்தில் வரலாற்றுக் கட்டடங்களென அதிகமாக இல்லை. உலகப் போரின்போது பல நினைவிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆகவே, இந்தப் பாலத்தின் மீது நாங்கள் பிடிப்போடு இருக்கிறோம்.” என்பது டோட்டர்டாம் வரலாற்று அமைப்பின் தலைவர் டோன் வெசெலிங்கின் கருத்து.

Bezos' Yacht
Bezos' YachtTwitter

சில ஆண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி, ஒரே படகு செல்லவேண்டும் என்பதற்காக, பாலத்தைப் பிரிக்கவேண்டும் என போகிறபோக்கில் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால் பாலம் சேதமடைய வாய்ப்பு உண்டு என்பது டோன் போன்றவர்களின் கவலை.

தனியார் விண்வெளிப் பயணத்தில் கோடிகோடியாகக் கொட்டிவரும் பெசோஸ், தன்னுடைய புளூ ஆரிஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்வெளிக்கே போய்விட்டு வந்துவிட்டார். இந்த பூமியில் தடையில்லாமல் தண்ணீரில் போய்விட முடியாதா என்கிற அவரின் முனைப்புக்கு சாதகம் அமையவே, காரியத்தை சட்டெனத் தொடங்கிவிட்டார். ஆனால் வேலையை முடித்த பின்னர் அது அவ்வளவு எளிதானதாக இல்லை என்பது அவருக்குக் கசப்பான யதார்த்தம்.

முதலில் ஜெஃப் பெசோஸின் அதிநீளப் படகுக்கு அனுமதி அளிக்கும் முடிவை உள்ளூராட்சி அமைப்பு அறிவித்ததும், எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இந்தப் படகைக் கட்டியதால் உள்ளூரில் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு உருவானது என ரோட்டர்டாம் மேயர் அலுவலகம் விளக்கம் அளித்தது. ஆனாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒருவேளை பாலத்தைப் பிரித்து, அதன் ஊடாக பெசோஸின் படகு செல்லுமானால், அதன் மீது முட்டைகளை வீசும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காகவே சமூக ஊடகப் பக்கமும் தொடங்கப்பட்டது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதற்குத் தயாரென ஒப்புதல் அளித்துள்ளனர். 16ஆயிரம் பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

பாலத்தின் உயரத்துக்கு கீழே உங்கள் படகு போகவில்லை என்றால் அந்த அளவுக்கு படகைக் கட்டவேண்டும்; உலகத்திலேயே பெரிய செல்வந்தர் என்பதற்காக ஊரின் நினைவுச்சின்னத்தைச் சேதமாக்கிவிட முடியுமா என்கின்றனர், எதிர்ப்பவர்கள்.

Rotterdam Koningshaven Bridge
Rotterdam Koningshaven BridgeTwitter
Bezos' Yacht
Bezos' YachtTwitter

ஒய்721 எனப் பெயரிடப்பட்டுள்ள புதுப்படகின் அதிகபட்ச உயரம் 152 அடியாக இருக்கும் எனும் நிலையில், அந்தப் படகு பாலத்தின் கீழ்ப் பகுதியில் நிச்சயம் மாட்டிக்கொள்ளும். உலகின் மற்ற பகுதியினரைவிட, ஐரோப்பியர்களுக்கு நினைவுச்சின்னங்களைவிட தனி மனிதர்கள் பெரிதில்லை என்பது இதிலும் பக்காவாக வெளிப்படுகிறது.

படகுக்காகப் பாலத்தைப் பிரித்து சேர்ப்பதெல்லாம் கூடாது எனும் எதிர்ப்பியக்கத்தில், ஒருவர், “ வேண்டுமானால் அவரின் ராக்கெட்டில் வைத்து படகைத் தூக்கிச் செல்லட்டுமே!” என வேற லெவலுக்கு ஆவேசத்தைக் காட்டியிருக்கிறார்.

இப்படி எதிர்ப்பு வலுக்கவலுக்க ஒருவழியாக, இப்போதைக்கு ஜெஃப் பெசோஸின் அதிசொகுசுக் கப்பலுக்காக பாலத்தைப் பிரிக்க வேண்டாம் என முடிவை எடுக்கப்பட்டுள்ளது. காரணம், சம்பந்தப்பட்ட படகு கட்டும் நிறுவனத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பிடம் தரப்பட்ட விண்ணப்பத்தை வாங்கிக்கொள்வதாகக் கூறியுள்ளது. தகவலறிந்த பசுமை அமைப்பினர், தொல்லியல் ஆர்வலர்கள் முதல்கட்ட வெற்றி என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெசோஸோ, அல்லது, படகுக் கட்டுமான நிறுவனமான ஓசேன்கோவோ இதுகுறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

அப்படியென்றால், அவ்வளவு உயரத்துக்குக் கட்டிய படகை எப்படி கடலுக்குள் கொண்டுசெல்வார்கள்?

எதிர்ப்பியக்கத்துக்காரர் ஆவேசப்பட்டு சொல்லும் யோசனைப்படியும் அந்தப் படகை ராக்கெட்டில் எடுத்துச்சென்றுவிட முடியாது என்பது மட்டும் உறுதி!

வேறென்ன சொல்ல?

Jeff Bezos
அமேசான் நிறுவனம் : எகிறி அடித்த ஊழியர்கள், அடிபணிந்த நிறுவனம் - என்ன நடந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com