உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ப்ளூம்பர்க்.
இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது யார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பதில் தவறு. அவர் நீண்டகாலமாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார் ஆனால் இப்போது நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சரி மீண்டும் கேள்விக்கு வருவோம்…முதல் இடம் யாருக்கு?
டெஸ்லா நிறுவனம் குறித்து நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்தான் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
அவரின் மொத்த சொத்த மதிப்பு 277பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
எலான் மஸ்கின் எதிர்கால திட்டம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடிவைப்பதுதான். அவர் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை கொண்டு அதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார்.
சமீபமாக அவர் பேசும்போதுகூட இன்னும் 5-10 வருடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் இவரின் சொத்து மதிப்பு 156பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் இந்த வருடம் அது 277பில்லியனாக உயர்ந்துள்ளது.
எலக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என உலகம் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் டெஸ்லாவின் பங்குகள் கடந்த வருடம் 60% வரை அதிகரித்திருந்தன.
சரி முதல் இடத்தில் எலான் மஸ்க் என்றால் இரண்டாம் இடத்தில் யார்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிஇஓ ஜெஃப் பெசோஸ் தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 195பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கடந்த ஜூலை மாதம் இவர் அமேசான் சிஇஓ பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது பெர்நாட் அர்நால்ட். இவரின் மொத்த சொத்து மதிப்பு 176 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ப்ரெஞ்ச் நிறுவனமான எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் சிஇஓ இவர். லூயி வுட்டான், கிறிஸ்டியன் டியோ உள்ளிட்ட விலையுயர்ந்த பிராண்ட்களை இந்த நிறுவனம்தான் நிர்வகிக்கிறது.
லூயி வுட்டான் பர்ஸுகளை வாங்க வேண்டும் என்றாலும்கூட நீங்கள் பல ஆயிரம் செலவு செய்யவேண்டியிருக்கும்.
அதேபோன்றுதான் கிறிஸ்டியன் டியா பொருட்களும். எனவே இந்த நிறுவனங்களின் தாய் நிறுவனமான எல்விஎம்ஹெச்-ன் சிஇஓ உலக பணக்காரர்களின் பட்டியலில் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
கிட்டதட்ட 10 இடங்களையும் தொழில்நுட்ப நிறுவனங்களை சார்ந்தவர்களே இடம்பெற்றிருக்க இவர் மட்டுமே நுகர்வோர் சார்ந்த தொழிலில் ஈடுபடும் நிறுவனத்தை சார்ந்தவராக உள்ளார்.
முன்னரே சொன்னதுபோல நான்காம் இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார்.
இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 138 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
தனது நண்பர் பால் அலேனுடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவிய பில் கேட்ஸ் விரைவிலேயே உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை பெற்றார். இருப்பினும் சமூகம் சார்ந்த தொண்டு காரியங்களுக்கு அவர் பணம் வழங்கி வருகிறார்.
இவரும் இவரது முன்னாள் மனைவியான மெலிண்டா கேட்ஸும் இணைந்து 2000ஆம் ஆண்டில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவினர் அதன்மூலம் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை நடத்தி வந்தனர்.
கடந்த வருடம் பில் கேட்ஸ் தம்பதியினர் தங்களது விவாகரத்து குறித்து அறிவித்த பிறகு இத்தனை சொத்துக்களை எப்படி பிரிப்பார்கள் என்று யூகங்களும் கேள்விகளும் எழுந்தன.
இது அத்தனைக்கு பிறகும் பில் கேட்ஸ் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐந்தாம் இடத்தில் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி பேஜ் உள்ளார். இவரின் மொத்த சொத்த மதிப்பு 130பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஆறாம் இடத்தில் மார்க் சக்கர்பர்க் இருக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 128 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர் குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றிப்போன முகநூலை நிறுவியவர் இவர்தான். இந்த பட்டியலில் 40 வயதுக்கு உட்பட்டவராக இவரே உள்ளர். மார்கிற்கு தற்போது 37 வயது.
கடந்த வருடம் ஃபேஸ்புக் என்ற பெயரை மெட்டா என்று மாற்றினார் மார்க். வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராமும் தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ்தான் செயல்படுகிறது.
ஏழாம் இடத்தில் கூகுளின் துணை நிறுவனர் செர்கே ப்ரின் உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
எட்டாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் இருக்கிறார். இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ. இவரின் மொத்த சொத்து மதிப்பு 122 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஒன்பதாவது இடத்தில் ஆரக்கல்லின் நிறுவனர் லாரி எல்லிசன் உள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 109 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பத்தாவது இடத்தில் வாரன் பஃபட் உள்ளார். இவர் அமெரிக்காவின் பன்னாட்டு பெருநிறுவனமான பெக்ஷைய்ர் ஹேத்வேயின் சி இ ஓ ஆவார்.
2006ஆம் ஆண்டு பாக்ஷையர் ஹேத்வேயில் உள்ள தனது பங்குகள் அனைத்தும் தானமாக வழங்குவதாக வாரன் பஃபட் தெரிவித்திருந்தார். அதேற்கேற்ப பெருந்தொகையை அவர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடையாக வழங்கிய பின் “எனது பணம் இந்த சமூகத்திற்கு தேவைப்படுகிறது. எனக்கு தேவையில்லை” என்று தெரிவித்திருந்தார்.
க்விங் ப்ளஜ்ட் (Giving Pledge) என்ற அமைப்பின் துணை நிறுவனராகவும் இவர் உள்ளார். இந்த அமைப்பு பெரும் பணம் படைத்தவர்கள் சமூகத்திற்கு தங்களின் பணத்தை தானமாக வழங்குவதை ஊக்குவிக்கிறது.
வாரன் பஃபட் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் ட்ரஸ்டியாகவும் இருந்தார்.
இது எல்லாம் சரி இந்த பட்டியலில் இந்தியர்கள் யாரும் இல்லையா என்று நீங்கள் யோசிக்கலாம். ஐம்பாதவது இடத்திற்குள் நான்கு இந்தியர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதில் முகேஷ் அம்பானி 12ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
14ஆவது இடத்தில் கெளதம் அதானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 76.5பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதானி குழுமத்தின் தலைவர் இவர்.
இந்தியாவை சேர்ந்த அஜிம் ப்ரேம்ஜி 33ஆவது இடத்தில் உள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 41 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர்தான் விப்ரோ நிறுவனத்தின் தலைவர். கொடையாளராகவும் அறியப்படுகிறார்.
44ஆவது இடத்தில் ஷிவ் நாடார் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 32.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நிறுவியர்.