1987ஆம் ஆண்டு விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தார் ஜோய். முகத்தில் உருவான கவலை, பிறருக்கு தெரியுமளவுக்கு இருந்தது. புதிய நகரத்திற்கு போகிறோம். அங்கு சென்று வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள முடியுமா என யோசித்தவர் மனதில் அவநம்பிக்கை உருவானது. என்னதான் நடக்கிறது என போய் பார்த்துவிடுவோமே என தானே தன்னைத் தைரியப்படுத்திக்கொண்டார். விமானநிலையத்தில் இறங்கினார். நடைமுறையாக எழுந்த சவால்களை உறுதியான மனத்துடன் சந்தித்து வென்றார். மனதில் இருந்த லட்சிய வெறியை மெல்ல நிஜமாக்கினார். அதனால்தான் இன்று, பொன்னிற எழுத்துக்களில் ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி என்ற எழுத்துகள் பார்க்கும் இடமெல்லாம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
நான்கு சகோதரர்களுக்கு கூட்டாக கொடுக்கப்பட்டதுதான் நகைக்கடை தொழில். ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிறகு சகோதரர்கள் தனித்தனியாக பிரிந்து தொழில் செய்ய விரும்ப ஜோயும் அதனை ஏற்றுக்கொண்டார். இன்று அவரின் பெயரில் அமைந்த நகைக்கடைகள் மூலமாக சேர்த்துள்ள சொத்து மதிப்பு 1300 கோடி ரூபாய்க்கும் அதிகம். பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கடைகள் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாயைத் தொடுகிறது.
கேரளாவைத் சேர்ந்த ஜோய் ஆலுக்காஸின் குடும்பத்தொழில் குடைகளை உற்பத்தி செய்து விற்பதுதான். அங்கு மழைப்பொழிவு அதிகம் என்பதால், குடை விற்பனை சிறப்பாக நடந்து வந்தது. கூடவே, ஸ்டேஷனரி கடையும் இருந்தது. அவர்களது குடும்பத்தில் மொத்தம் 18 பிள்ளைகள். புதிதாக தொழில் தொடங்குவது என ஜோயின் அப்பா முடிவு செய்தார. அப்போதுதான், பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்திருந்த ஜோயையு்ம் தொழிலுக்கு அழைத்துக்கொண்டார். கல்லூரியில் இடைநின்றாலும் தொழிலில் சறுக்கவில்லை என்பதே ஜோயின் சாமர்த்தியம்.
1956ஆம் ஆண்டு ஜோயின் அப்பா, திருச்சூரில் முதல் நகைக்கடையை தொடங்கினார். பிறகுதான் கடையை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசை முளைவிட்டிருக்கிறது. அதை ஜோய் ஆலுக்காஸ் தனது தளராத உழைப்பின் மூலம் சாத்தியப்படுத்தினார். ‘’’இந்தியர்களுக்கு தங்கமும், வைரமும் முக்கியமான ஆபரணப் பொருட்கள். இவை வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல முதலீட்டுப் பொருட்கள் என்றும் மக்கள் அறிவார்கள். இதேபோலத்தான் அரபு அமீரகத்திலும் மக்கள் வாடிக்கையாளர்களாக எங்களைத் தேடி வந்தனர். அதற்கேற்ப நாங்கள் நகைகளை வடிவமைத்து வழங்கி வருகிறோம். தொழிலில் ஜெயிக்கவேண்டும் என்ற வெறிதான் என்னை இயக்கியது. அதற்கேற்ப திட்டமிட்டு பல்வேறு ஐடியாக்களை நாங்கள் செயல்படுத்தினோம். அப்படித்தான் ஜோய் ஆலுக்காஸ் இன்று பெற்றுள்ள உச்ச அந்தஸ்தை அடைந்தது. தியேட்டர்களில் விளம்பரம் செய்யும் முறையை நாங்கள்தான் முதலில் கையில் எடுத்தோம். பல்வேறு சினிமா பிரபலங்கள் எங்கள் நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளனர்’ என்றார் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவரான ஜோய்.
1987ஆம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்தடுத்து அபுதாபி, துபாய், ஷார்ஜா என பல்வேறு இடங்களில் நகைக்கடைகளை தொடங்கினார் ஜோய். சகோதரர்கள் ஒன்றாக வியாபாரம் செய்தபோது பிராண்டின் பெயர் ஆலுக்காஸ் இன்டர்நேஷனல். அவர்கள் பிரிந்துசென்றபிறகு, தனது நிறுவனத்திற்கென விளம்பரங்களை தனித்துவமாக வடிவமைக்க யோசித்தார். காரில் செல்லும்போது, பில்போர்ட் ஒன்றைப் பார்த்த ஜோய், நகைக்கடை விளம்பரம் எப்படி இருக்கவேண்டுமென அப்போதே யோசித்து முடிவு செய்துவிட்டார். அதனால்தான், இன்றும் ஜோய் ஆலுக்காஸ் விளம்பரங்கள் தனித்துவமாக இருக்கின்றன. அவர்களின் கடைப்பெயரும் நகைகளின் வடிவமைப்பும் மக்கள் நினைவில் எப்போதும் நிற்கிறது.