வடகொரியாவிலிருந்து வரும் செய்திகள் நாளுக்கு நாள் அதிர்ச்சிகரமானதாகவே அமைகின்றன. அப்படி சமீபத்தில் வந்த செய்திதான். பூக்கள் பூக்காததற்காகத் தோட்டக்காரர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி.
அதிபர் கிம்-ன் தந்தை கிம் ஜாங் இல்-ன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் அந்த பூ சரியான நேரத்தில் கொண்டாட்டத்திற்கு கிடைக்காமல் போனதே தோட்டக்காரர்களுக்குத் தண்டனை கிடைக்காததற்குக் காரணம். அவரது பெயரைக் கொண்டுள்ள 'கிம்ஜோங்கிலியா' பெகோனியாஸ் என்ற பூ தலைவர்கள் பிறந்த நாள் விழாவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
'கிம்ஜோங்கிலியா' பூவானது அழியாத மலர் என்றும் அறியப்படுகிறது. இது 1988 ஆம் ஆண்டில் ஜப்பானியத் தாவரவியலாளர் கமோ மோட்டோடெருவால் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு கிம் ஜங் இல் இறந்ததிலிருந்து இந்த பூ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒளிரும் நட்சத்திர தினத்திலும் சூரிய தினத்திலும் இந்த மலர்கள் பயன்படுத்தப்படும்.
கிம் ஜாங் உன்-ன் தந்தை கிம் ஜாங் இல் பிறந்த தினம் ஒளிரும் நட்சத்திர தினமாகவும் அவரது தந்தையும் வடகொரியாவை நிறுவியவருமான கிம் இல் சங் பிறந்த தினம் சூரிய தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பூக்கள் இல்லாததால் அதிபர் கிம் ஜாங் உன் கடும் கோபமடைந்துள்ளார். இந்த பூக்களைச் சரியாக பராமரிக்காததற்காகப் பசுமை இல்லத்தை நிர்வகிக்கும் குழுவினர் 6 மாத காலத்திற்குத் தொழிலாளர் முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.