மால்கம் எக்ஸ்: ஒரு போராளியின் வாழ்க்கை வரலாறு

தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த ஒரு சமூகத்தால் மீண்டும் ஓர் வரலாற்றைப் படைக்கவே முடியாது என்று தன் இனவரலாற்றையே தன் சுழல் வாளாக மாற்றிக் கொண்ட மாவீரன் மால்கம் எக்ஸ்.
மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்Twitter

தகுந்தன மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்பது எல்லா உயிர்களுக்குமான பரிணாமவியல் தத்துவம் என்றாலும் தப்பிப்பிழைப்பதற்கான போட்டியின்பால் தன் சக இனத்தை கொன்றொழிப்பதில் மனித இனத்திற்கு நிகரான இன்னொரு இனம் இல்லை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.

மற்ற இனங்கள் எல்லாம் தங்களின் பசிக்காகவும் இனவிருத்திக்காகவும் மட்டுமே சக உயிரினங்களை வேட்டையாடியது, சண்டையிட்டது. ஆனால் மனிதன் மட்டும்தான் தன் சக இனத்தின் மீது ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்து அதன் பொருட்டு அவர்கள் மீது அதிகாரம் செய்ய ஆசைப்பட்டான்.

அப்படி மனித இனத்தில் மட்டுமே நிகழ்ந்தேறிய அப்படிப்பட்ட அநீதிகள் தான் வரலாற்றில் பெரும் புரட்சிகளும், தலைவர்களும் தோன்றக் காரணமாக இருந்தது.

அப்படி ஓர் புரட்சியின் வித்தாகத் தோன்றிய எழுச்சி மிக்க தலைவர் தான் மால்கம் எக்ஸ். ஒடுக்கப்பட்ட கறுப்பின சமூகத்தில் பிறந்த மால்கம் எக்ஸ் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சியாளராய் எழுந்து நின்றார்.

தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த ஒரு சமூகத்தால் மீண்டும் ஓர் வரலாற்றைப் படைக்கவே முடியாது என்று தன் இனவரலாற்றையே தன் சுழல் வாளாக மாற்றிக் கொண்ட மாவீரன்.

சுதந்திரம் சமத்துவம் சமநீதி என்பதை எல்லாம் யாரும் உங்களுக்கு வழங்க மாட்டார்கள் அது உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விடுதலை களத்தில் வீரம் விதைத்த ஓர் சுயமரியாதைக்காரன் மால்கம் எக்ஸ்.

பெற்றோர்
பெற்றோர்Twitter

போராட்டக்காரர்களின் குழந்தை

1925 ஆம் ஆண்டு மே 19 ஆம் நாள் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள ஒமாஹா என்னும் இடத்தில் ஏர்ல் லிட்டில் மற்றும் லூயிஸ் ஹெலன் லிட்டில் என்னும் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் மால்கம் எக்ஸ் . மால்கம் எக்சின் இயற்பெயர் மால்கம் லிட்டில் என்பதாகும் .

மால்கம் எக்ஸ் பிறந்த அந்த காலகட்டம் என்பது அமெரிக்காவில் நிறவெறி மேலோங்கிய காலகட்டம் என்பதால் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் மிக இயல்பாக நடந்து கொண்டிருந்தது. எனினும் கறுப்பின மக்கள் அவற்றை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தனர்.

மால்கம் எக்சின் தந்தையான ஏர்ல் லிட்டில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஓர் சமூக செயற்பாட்டாளராக இருந்து வந்தார் . மால்கம் எக்சின் தாயான லூயிஸ் ஹெலன் நீக்ரோ உலகம் என்னும் பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வந்தார் . மால்கம் எக்சின் தாய் தந்தை என இருவருமே சமூகத் தளத்தில் இயங்கி வந்ததால் தங்களின் குழந்தைகளுக்கும் கறுப்பின மக்களின் வரலாறு அரசியல் மற்றும் அவர்களின் உரிமைகள் ஆகியவற்றைச் சொல்லிக்கொடுத்து வளர்த்து வளர்த்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை

கறுப்பின மக்களின் உரிமைப்போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்ட மால்கம் எக்சின் தந்தை, பிளாக் லிஜியன் எனப்படும் வெள்ளை இன நிறவெறி குழுவால் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலையை இனவாத வெள்ளையர்கள் தற்கொலை என்று முடித்து மறைத்து வைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு மால்கம் எக்சின் தாயான லூயிஸ் ஹெலன் மனநலம் பாதிக்கப்பட்டு மன நலக் காப்பகத்தில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மால்கம் எக்ஸ் உட்பட அவர்களின் ஏழு குழந்தைகளும் போஸ்டர் ஹோம்ஸ் எனப்படும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி வளர்ந்தனர்.

மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்Twitter

தாய் தந்தையைப் பிரிந்து தனியாக வாழும் நிலை ஏற்பட்டாலும் கூட மால்கம் எக்ஸ் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடனேயே இருந்தார். குறிப்பாகச் சட்டம் படிப்பதே அவரின் இலட்சியமாக இருந்து வந்தது. ஆனால் அவரின் நிறவெறி கொண்ட ஆசிரியர், "கருப்பர்களால் சாதிக்க முடியாத இலக்கை அடைய முயற்சிக்கிறாய்" என்று ஏளனம் செய்தார். இதனால் அவரின் படிப்பு தடைபட்டது. அத்துடன், அவரின் வாழ்வின் திசை வழியே அதற்கு பிறகு மாறிவிடுகிறது.

மால்கம் எக்ஸ் - மார்டின் லூதர் கிங்

அமெரிக்கா முழுவதும் நிறவெறி நிறைந்திருந்த அந்த காலகட்டத்தில் வெள்ளை இன நிறவெறியர்கள் அமெரிக்கக் கறுப்பின மக்களை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்குவதுடன் மட்டுமல்லாமல் அவர்களை பல்வேறு குற்றச் செயல்களைச் செய்யத்தூண்டும் விதமாகவும் நடத்தி வந்தனர். கறுப்பின மக்கள் பலர் சட்டரீதியான தண்டனைகளுக்கும் உள்ளாகி வந்தனர்.

மால்கம் எக்சும் அப்படி ஓர் குற்ற வழக்கில் சிக்கி சிறைத் தண்டனைக்கு உள்ளானார். அப்போது அவருக்கு வயது 20. 1946 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரையிலான அவரின் அந்த சிறை வாழ்க்கைதான் மால்கம் எக்சின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. அதன் பிறகு தான் நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பில் இணைந்தார். இது இஸ்லாமிய மக்கள் மற்றும் கறுப்பின மக்களுக்கான அரசியல் விடுதலை இயக்கம்.

அதன் பிறகு மால்கம் எக்ஸ் தனது பெயரை மால்கம் லிட்டில் என்பதிலிருந்து மாலகம் எக்ஸ் என மாற்றிக்கொண்டார். "லிட்டில் என்பது அடிமைத்தனத்துக்கான குறியீடாக எங்கள் முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது" என பகுத்தறிவு மொழியுரைத்தார் மால்கம் எக்ஸ்.

மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்Twitter

இஸ்லாமிய மற்றும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்கான அரசியல் இயக்கமான நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பின் முன்னணி தலைவரான மால்கம் எக்ஸ் கறுப்பின மக்களின் வாழ்வில் பல சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். குறிப்பாக கறுப்பின மக்களிடையே நிலவிய போதை பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து அதன் மூலம் அந்த மக்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கினார்.

மால்கம் எக்சின் சம காலத்தில் அமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலை களத்தில் முன் நின்ற மற்றொரு முக்கிய தலைவராக இருந்தார் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். ஆனால் இந்த இரண்டு தலைவர்களின் கருத்துக்களும் அணுகுமுறைகளும் வெவ்வேறாக இருந்தன.

"கறுப்பின மக்களும் வெள்ளை இன மக்களுக்கு ஒரு நிகரான வாழ்வை வாழ வேண்டும் என்ற அடிப்படையான ஒரு கனவு எனக்கு இருக்கிறது" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகத்தை முற்றிலும் மறுத்தார் மால்கம் எக்ஸ்.

"நான் அமெரிக்கனாக வாழ விரும்பவில்லை, எனக்கு ஏற்பட்டதெல்லாம் அமெரிக்கா பற்றிய கொடுங் கனவுகள் மட்டுமே" என்று தான் ஒரு ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவன் என்பதில் உறுதியாக இருந்தார் மால்கம் எக்ஸ்.

வெள்ளை இனத்தவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பாத மால்கம் எக்ஸ் கறுப்பின மேட்டிமை வாதத்தை முன் வைத்தார். ஆனால் மார்ட்டின் லூதர் கிங் 'ஆதிக்கம் என்பது யார் செய்தாலும் தவறு தான்' வெள்ளை ஆதிக்கம் எப்படித் தவறானதோ அதே போல் கறுப்பின ஆதிக்கமும் தவறானதே என்ற நிலைப்பாட்டை எடுத்தார் மார்ட்டின் லூதர் கிங்.

அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்த மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மால்கம் எக்சின் அடிக்கு அடி, உதைக்கு உதை என்கிற தீவிர தன்மை கொண்ட அரசியல் கொள்கையிலும் மாற்றுக்கருத்து இருந்தது.

மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்Twitter

வீடு திரும்பிய மகன்

மால்கம் எக்ஸ் கறுப்பின மக்கள் அரசியல் பொருளாதாரம் கல்வி வாழ்வியல் என எல்லா தளங்களிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை மிகத் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். மேலும் கறுப்பின மக்களின் வாழ்வு மேம்படும் விதமான களச் செயல்பாடுகளையும் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் கறுப்பின மக்கள் மத்தியில் அவர் ஓர் கறுப்பின மக்களுக்கான சமூகப்போராளியாகவே அடையாளம் காணப்பட்டார்.

மால்கம் எக்சின் புரட்சிகர கருத்துக்கள் கறுப்பின மக்களிடையே நாளுக்குநாள் பெரும் வரவேற்பைப் பெற்றது. மால்கம் எக்சின் இந்த அபார அரசியல் வளர்ச்சி அவர் சார்ந்திருந்த இயக்கத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அந்த அமைப்பிலிருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார் மால்கம் எக்ஸ்.

தன்னை ஒரு சிறந்த பேச்சாளராகவும் சமூகப் போராளியாகவும் அடையாளம் காட்டிய நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்திலிருந்து கனத்த இதயத்தோடு விடைபெற்றார் மால்கம் எக்ஸ். நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தின் தலைவரான எலியா மொஹம்மத் மீது எழுந்த சில பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளும் மால்கம் எக்ஸ் அந்த இயக்கத்தை விட்டுப் பிரிந்ததற்கு காரணமாகச் சொல்லப்பட்டது

நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பிலிருந்து விலகிய பிறகு சன்னி என்ற இஸ்லாமிய மரபை ஏற்றுக்கொள்கிறார் மால்கம் எக்ஸ். இதனால் தன் பெயரை மாலிக் இல் ஷாபாஸ் என மாற்றிக்கொள்கிறார்.

1964 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் மால்கம் எக்ஸ். அதற்குப் பிறகுத் தனது அரசியல் பயணத்தில் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்குகிறார். அந்த காலகட்டத்தில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஒருமுறை நைஜீரிய பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகிறார். அவர்கள் மால்கம் எக்சிற்கு வீடு திரும்பிய மகன் என்று பட்டம் வழங்கி கவுரவிக்கின்றனர். அதை தன் வாழ்வின் சிறந்த அங்கீகாரமாகக் கருதுவதாக மால்கம் எக்ஸ் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்Twitter

மால்கம் எக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்

நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அரசியல் அமைப்பிலிருந்து விலகிய மால்கம் எக்ஸ் 1964 ஆம் ஆண்டு முஸ்லீம் மாஸ்க் மற்றும் பான் ஆப்ரிக்கன் ஆர்கனைசேஷன் ஆப் ஆப்ரோ அமெரிக்கன் யூனிட்டி என்ற இரண்டு புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கினார். இந்த அமைப்புகளின் மூலம் கறுப்பின மக்களுக்கான சிவில் உரிமை போராட்டங்களைத் தொடங்கப்போவதாக அறிவித்தார் மால்கம் எக்ஸ்.

மால்கம் எக்சின் இந்த தன்னிச்சையான அரசியல் எழுச்சியும் அதற்குக் கிடைத்த மக்கள் ஆதரவும் அவர் முன்பு அங்கம் வகித்த நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்திற்கு எரிச்சலூட்டியது. இதனால் மால்கம் எக்சிற்கு அந்த இயக்கத்திலிருந்து தொடர்ந்து பல அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் வரத்தொடங்கியது.

எதற்கும் அஞ்சாத களப்போராளியான மால்கம் எக்ஸ் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் சின்னஞ்சிறு கறையான்கள் சில நேரங்களில் பெரும் மரத்தை குடைந்து வேரோடு சாய்ப்பது போல் மாவீரர் மால்கம் எக்ஸும் சில குள்ளநரிகளின் கள்ளத்தனத்திற்குப் பலியானார்.

‘நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பிலிருந்து வெளியேறினாலும், மால்கம் எக்ஸ் மீதான கோபம் அந்த அமைப்பினருக்குக் குறையாமல் இருந்தது. பல மேடைகளில் அவை கொலை மிரட்டல்களாக வெளிப்பட்டன.

பிப்ரவரி 21, 1965 அன்று, மன்ஹாட்டன் நகரத்தில் உள்ள அரங்கில் பேசத் தொடங்கினார் மால்கம் எக்ஸ். பேச்சைத் தொடங்கிய சில நிமிடங்களிலே பார்வையாளர்களிலிருந்த ‘நேஷன் ஆப் இஸ்லாம்’ அமைப்பைச் சேர்ந்த மூவர், மால்கம் எக்ஸ் மீது சுடத் தொடங்கினர். மால்கம் எக்ஸ் அவ்விடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். அப்போது அவருக்கு வயது 39.

மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்த மார்டின் லூதர் கிங், "இனப் பிரச்னையை நாங்கள் இருவரும் ஒரே கண்ணில் பார்த்து அணுகாவிட்டாலும், மால்கம் எக்ஸ் இனப்பிரச்னையின் வேர் மீது விரல் வைத்துச் சுட்டிக் காட்டினார். ஒரு இனமாக நாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை உணர்ந்து, அவற்றுக்கு எதிராகச் செயல்பட்ட மால்கம் எக்ஸ் மீது யாரும் நிச்சயம் சந்தேகப்படவே முடியாது” எனக் கூறினார்.

மால்கம் எக்ஸ்
மால்கம் எக்ஸ்Twitter

Black Lives Matter வரை

மால்கம் எக்சின் மறைவிற்குப் பிறகு அவரின் அரசியல் கொள்கையை பின்பற்றி அமெரிக்காவில் பல்வேறு கறுப்பின மக்களுக்கான அரசியல் விடுதலை அமைப்புகள் தோன்றின. அந்த அளவிற்கு மக்களின் சிந்தனையில் ஓர் மிகப்பெரிய கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் மால்கம் எக்ஸ்.

மால்கம் எக்ஸ் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட தற்போது வரை அமெரிக்கக் கறுப்பின அரசியலின் ஒவ்வொரு முன் நகர்விலும் மால்கம் எக்சின் பங்களிப்பு ஏதாவது ஒரு வடிவிலிருந்து கொண்டுதான் இருக்கிறது.

மால்கம் எக்ஸ் கறுப்பின மக்களுக்காகப் போராடிய சிறந்த தலைவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். அவரது போராட்டம் அமெரிக்க வாழ் கறுப்பின மக்களிடையே சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்தது. மேலும், மால்கம் எக்ஸைப் பின்பற்றி, அவரது மரணத்துக்குப் பிறகு, பல அமைப்புகள் உருவாகின.

கடந்த 2013-ம் ஆண்டு, Black Lives Matter என்ற இயக்கம் அமெரிக்காவில் உருவானது. அமெரிக்கக் காவல்துறையினர் கறுப்பின மக்கள் மீது செலுத்தும் வன்முறைகளைக் கண்டித்து உருவான அந்த அமைப்பின் ஆதர்சமாக மால்கம் எக்ஸ் இருந்தார்.

மால்கம் எக்ஸ்
மார்ட்டின் லூதர் கிங் : "எனக்கொரு கனவு இருக்கிறது" - உலகை உலுக்கிய உரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com