மார்ட்டின் லூதர் கிங் 94வது பிறந்தநாள்: "எனக்கொரு கனவு இருக்கிறது" - உலகை உலுக்கிய உரை

1963, ஆகஸ்ட் 28 அன்று வாஷிங்டனிலுள்ள ஆபிரஹாம் லிங்கன் நினைவகத்துக்கு முன்பாக மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய உரையை இங்கு முழுமையாக தருகிறோம்.
Martin Luther King Jr

Martin Luther King Jr

Newssense

Published on

1963-லிங்கன் சதுக்கம்… ஓர் உரை… ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ரத்தத்தில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடத் தூண்டியது. தங்கள் விடுதலைக்காகக் கனவு காணச் சொன்னது. அமெரிக்காவில் நடந்த இனப்போராட்டத்தின் முடிவைத் தொடங்கிவைத்ததில் அந்த உரைக்கும், அந்த உரையை ஆற்றிய மனிதருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், அதைத் தேடிச் சென்று தனது போராட்டத்தில் வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர் மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம் இன்று.

Abraham Lincoln

Abraham Lincoln

Twitter

நான் ஒரு கனவு காண்கிறேன்!

1963, ஆகஸ்ட் 28 அன்று வாஷிங்டனிலுள்ள ஆபிரஹாம் லிங்கன் நினைவகத்துக்கு முன்பாக மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய உரை:

நம் நாட்டின் வரலாற்றிலேயே சுதந்தரத்துக்காக நடைபெற்ற மாபெரும் போராட்டம் என்று பேசப்படப்போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில், இன்று உங்களோடு இணைந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நாம் யாருடைய நினைவகத்தில் நின்றுகொண்டிருக்கிறோமோ, அந்த மாபெரும் அமெரிக்கத் தலைவர், நூறாண்டுகளுக்கு முன்பு அடிமை ஒழிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அந்தப் பிரகடனம், அநீதித் தீயில் வாடி வதங்கி அடிமைகளாக இருந்த லட்சக்கணக்கான கறுப்பின மக்களுக்கு நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கமாக அமைந்தது. இருண்ட சிறையில் பல காலமாக அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விடியலாக அது இருந்தது.

Martin Luther King Jr

America உண்மையில் பணக்கார நாடா?

வேண்டும் விடுதலை

வேண்டும் விடுதலை

Twitter

கருப்பின மக்கள் இன்னமும் விடுதலை பெறவில்லை

நூறாண்டுகள் கழிந்துவிட்டன. நீக்ரோ இன்னமும் விடுதலை பெறவில்லை. நூறாண்டுகள் கடந்துவிட்டன. நீக்ரோவின் வாழ்க்கை, இன்னமும் இன ஒதுக்கல் என்ற தீமையாலும் இனப்பாகுபாடு என்ற சங்கிலியாலும் மிக மோசமாக முடக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகள் கழிந்துவிட்டன. செழிப்பு என்ற ஒரு பெரிய கடலுக்கு நடுவே, வறுமை என்ற தனிமைத் தீவில் நீக்ரோ வாழ்ந்துகொண்டிருக்கிறான். நூறாண்டுகள் கழிந்தும் கூட, நீக்ரோ அமெரிக்க சமூகத்தின் ஒரு மூலையில் வதைபட்டுக்கொண்டிருக்கிறான். சொந்த மண்ணிலேயே அகதியாக உணர்கிறான். இந்த வெட்கக்கேடான நிலைமையை வெளிச்சம்போட்டுக் காட்டவே நாம் இங்கு ஒன்றுகூடியிருக்கிறோம்.

ஒரு விதத்தில் பார்த்தால், ஒரு காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுவதற்காக, நாம் நமது நாட்டின் தலைநகருக்கு வந்திருக்கிறோம். நமது குடியரசை நிர்மாணித்த சிற்பிகள், அரசியலமைப்புச் சட்டத்தையும் சுதந்தரப் பிரகடனத்தையும் வீரம் மிக்க வார்த்தைகளால் எழுதியபோது, தங்களுடைய வாரிசுகளான ஒவ்வோர் அமெரிக்கருக்கும், ஒரு பிராமிசரி நோட்டாகவே அதைப் பாவித்துக் கையெழுத்திட்டார்கள். இந்த பிராமிசரி நோட், அனைத்து மக்களுக்கும் - ஆம், வெள்ளையர்களுக்கு மட்டுமல்ல, கறுப்பர்களுக்கும் கூடத்தான் - வாழ்வுரிமை, சுதந்தரம், மகிழ்ச்சியைத் தேடிப் பெறும் உரிமை போன்ற மீற முடியாத சில உரிமைகளை வழங்கியது.

ஆனால், கறுப்பின மக்களைப் பொருத்தவரை, அமெரிக்கா இந்த பிராமிசரி நோட்டில் மோசடி செய்துவிட்டது என்பது வெளிப்படை. இந்தப் புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஒரு மோசடிக் காசோலையை அமெரிக்கா கறுப்பின மக்களுக்குத் தந்திருக்கிறது. அந்தக் காசோலை, ‘போதுமான நிதி இல்லை’ என்ற காரணம் காட்டித் திரும்பி வந்துவிட்டது.

ஆனால், நீதி என்ற வங்கி திவாலாகிவிட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஏராளமான வாய்ப்புகள் பூத்துக்குலுங்கும் இந்த நாட்டில், எங்கள் காசோலைக்குமட்டும் வழங்க நிதியில்லை என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். ஆகவே, அந்தக் காசோலையைக் கொடுத்துப் பணத்தைப் பெற நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். அந்தக் காசோலையை நாங்கள் நீட்டும்போது, சுதந்தரம், நீதியின் பாதுகாப்பு போன்ற செல்வங்கள் எங்களுக்குக் கிடைக்கும்.

Martin Luther King Jr

கியூபா Vs அமெரிக்கா : ஃபிடல் காஸ்ட்ரோவை ஆதரித்த அமெரிக்கர்கள் | Cuba History 2

Step Forward

Step Forward

Facebook

நமது பயணம் முன்னோக்கித்தான் இருக்க வேண்டும்

செயலில் இறங்கவேண்டிய தருணம் இதுதான் என்பதை அமெரிக்காவுக்கு நினைவூட்டவே இந்தப் பரிசுத்தமான இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். பிரச்னையை ஆறப்போடுவதற்கோ அல்லது படிப்படியான சிறுசிறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு திருப்தியடைவதற்கோ இது நேரமல்ல. ஜனநாயகம் தந்த வாக்குறுதியை மெய்ப்பித்துக் காட்டவேண்டிய தருணம் இது. இன ஒதுக்கல் என்ற இருண்டதும் துக்ககரமானதுமான பள்ளத்தாக்கிலிருந்து வீறுகொண்டு எழுந்து, இனச் சமத்துவம் என்ற ஒளி வீசும் பாதையில் நடைபோட வேண்டிய தருணம் இது. இன அநீதி என்ற புதைகுழியிலிருந்து நமது நாட்டை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற உறுதியான அடித்தளத்தில் அதை நிலைநிறுத்த வேண்டிய தருணம் இது. கடவுளின் குழந்தைகள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.

இந்தத் தருணத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நாடே பேரழிவைச் சந்திக்கும். கறுப்பின மக்களின் நியாயமான மனக்குறை என்னும் இந்தத் தகிக்கும் கோடைக்காலம், சுதந்தரம், சமத்துவம் என்ற உயிர்ப்பு தரும் இலையுதிர்காலம் வரும்வரை நீடிக்கும். 1963-ம் ஆண்டு முடிவல்ல; அது ஒரு தொடக்கம். ‘இந்தக் கறுப்பர்களின் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேவை என்பதால் இந்தப் பேரணியை நடத்துகிறார்கள். பேரணிக்குப் பின் மீண்டும் அமைதியாகி விடுவார்கள்' என்று நம்புபவர்கள், நாட்டைப் பழைய நிலைமையிலேயே நீடிக்குமாறு செய்தால் அதிர்ச்சியே அடைவார்கள். கறுப்பின மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கும்வரை அமெரிக்காவில் அமைதிக்கோ, நிம்மதிக்கோ இடமில்லை. நீதி என்ற பிரகாசமான நாள் உதயமாகும்வரை இந்தக் கலகம் என்னும் சூறாவளிக் காற்று நமது நாட்டின் அஸ்திவாரத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும்.

நீதிதேவனின் மாளிகை வாசலில் நின்றுகொண்டிருக்கும் என்னுடைய மக்களுக்கு நான் சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும். நமக்கான இடத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில், தீஞ்செயல்களைச் செய்யும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. வெறுப்பையும் கசப்புணர்வையும் குடித்து, நம் சுதந்தர தாகத்தைத் தணித்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது. கண்ணியமும் கட்டுப்பாட்டுடனுமான மேன்மையான பாதையில் நமது போராட்டம் தொடரவேண்டும். நமது நூதனமான எதிர்ப்பு, வன்முறையால் சீரழிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. வன்முறையை எதிர்கொள்ள, மீண்டும் மீண்டும் ஆன்மிக வலிமையின் துணையை மட்டுமே நாம் நாடவேண்டும்.

கறுப்பின மக்களைப் பற்றியிருக்கும் இந்த அற்புதமான, புதிய போர்க்குணம், அனைத்து வெள்ளையர்களையும் நம் எதிரிகளாக நினைக்கும் நிலைக்குத் நம்மைத் தள்ளிவிடக் கூடாது. பல வெள்ளையினச் சகோதரர்களும், அவர்களது எதிர்காலமானது, பிரிக்கமுடியாத வகையில் நமது எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். இங்கே பெருந்திரளாக அவர்கள் கூடியிருப்பதே இதற்குச் சான்றாகும். நமது விடுதலையோடு, அவர்களது விடுதலையும் பிரிக்கமுடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நாம் மட்டும் தனியே நடைபோட முடியாது.

நாம் மேற்கொண்டு நடக்கும்போது, நமது பயணம் முன்னோக்கித்தான் இருக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.

Martin Luther King Jr

கியூபா Vs அமெரிக்கா : உலகின் பெரியண்ணனை வீழ்த்திய தீவு தேசத்தின் வரலாறு

Thirst for Freedom

Thirst for Freedom

Twitter

நிராசை என்னும் பள்ளத்தாக்கில் உழலவேண்டாம்

நாம் பின்னோக்கித் திரும்ப முடியாது.

சிவில் உரிமைமீது தீவிரப் பற்றுடையவர்களைப் பார்த்து, ‘நீங்கள் எப்போதுதான் திருப்தி அடைவீர்கள்?’ என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். காவல்துறையின் கொடுமைகளுக்குக் கறுப்பர்கள் பலியாவது நிற்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நீண்ட பயணம் செய்து களைப்படைந்திருக்கும் கறுப்பர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓட்டல்களிலும் நகர விடுதிகளிலும் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. அதிகபட்சம், சின்ன சேரியிலிருந்து பெரிய சேரிக்கு மட்டும்தான் கறுப்பின மக்களால் குடிபெயர முடியும் என்ற நிலை நீடிக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற பலகைகள், எங்கள் குழந்தைகளின் அடையாளத்தைச் சூறையாடுவதும் அவர்களது கண்ணியத்தைக் களவாடுவதும் நீடிக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. மிசிசிப்பியிலிருக்கும் கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நியூ யார்க் கறுப்பர்கள் தாம் வாக்களித்து எதைச் சாதித்துவிடப்போகிறோம் எனற அதிருப்தியுடன் இருக்கும்வரை எங்களால் திருப்தியடைய முடியாது. நாங்கள் திருப்தி அடையவில்லை. அடையவும் மாட்டோம்... நீதி, மழையைப்போலப் பொழியும்வரை. நியாயம், ஆற்றைப்போலப் பாயும்வரை!

உங்களில் ஒரு சிலர், மாபெரும் அக்னிச் சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. உங்களில் ஒரு சிலர், சிறைச் சாலையின் குறுகிய அறைகளிலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களில் ஒரு சிலர், விடுதலை தாகத்தால் அடுக்கடுக்கான சித்திரவதைகளையும் காவல்துறையின் கொடுமைகளையும் சந்தித்த பகுதிகளிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நூதனமான முறையில் துன்பங்களை எதிர்கொண்டீர்கள். தேடாமல் கிடைத்த துன்பங்களுக்கு மீட்சி நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பணியாற்றுங்கள். ஏதாவது ஒரு வழியில் இந்தச் சூழ்நிலை நிச்சயம் மாறும்; மாற்றப்படும் என்ற புரிதலோடு மிசிசிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள்; அலபாமாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; தெற்கு கரோலினாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; ஜார்ஜியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்; நமது வடக்குப் பகுதி நகரங்களில் இருக்கும் சேரிகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

நண்பர்களே, நிராசை என்னும் பள்ளத்தாக்கில் உழலவேண்டாம் என்று உங்களிடம் இன்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்றும் நாளையும் நம்மை இன்னல்கள் எதிர்கொண்டாலும், நான் ஒரு கனவு காண்கிறேன் என்பதை இன்று உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தக் கனவு அமெரிக்கக் கனவில் ஆழமாக வேர் கொண்டுள்ளது.

இந்த நாடு ஒரு நாள் எழுச்சிபெற்று, ‘அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்; இந்த உண்மை அனைவராலும் தெள்ளத்தெளிவாகக் காணக்கூடியது’ என்ற (அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட) உண்மைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

ஜார்ஜியாவின் சிவப்பு மலைகளில் முன்னாள் அடிமைகளின் புதல்வர்களும் அடிமைகளை வைத்திருந்த முன்னாள் எஜமானர்களின் புதல்வர்களும் சகோதரத்துவம் என்ற மேஜையில் ஒன்றாக அமரும் நாள் ஒன்று வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

அநீதி, அடக்குமுறை என்ற கொடுமைகளில் புழுங்கிக்கொண்டிருக்கும் மிசிசிப்பி மாநிலம்கூட,சுதந்தரமும் நீதியும் பூத்துக் குலுங்கும் சோலையாக நிச்சயம் ஒரு நாள் மாறும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

நிறத்தை வைத்து மதிப்பிடாமல், தங்களது நடத்தைகளை வைத்து மதிக்கப்படும் ஒரு நாட்டில் எனது சின்னக்குழந்தைகள் நான்கும் வாழும் நாளொன்று வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

Freedom for Black Peoples

Freedom for Black Peoples

Facebook

ஒலிக்கட்டும் விடுதலை கீதம்

நான் இன்று ஒரு கனவு காண்கிறேன்.

இனவெறி பிடித்தோர் அலையும் அலபாமாவில், வெற்று வார்த்தைகளை வீசும் ஆளுநரைக் கொண்ட அலபாமாவில், கறுப்பினச் சிறுவர், சிறுமிகள், வெள்ளையினச் சிறுவர், சிறுமிகளோடு கரம்கோக்கும் நாள் ஒன்று நிச்சயம் வரும் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

நான் இன்று ஒரு கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படும்; ஒவ்வொரு குன்றும் மலையும் பெயர்த்தெறியப்படும்; மேடு பள்ளங்கள் சமதளமாக்கப்படும்; கோணல்மாணலான பாதைகள் நேராக்கப்படும்; தேவனின் மகிமை வெளிப்படும்; தேவனின் மாமிசமாக விளங்கும் அனைவரும் ஒன்றாக அதைக் காண்பார்கள் என்று நான் ஒரு கனவு காண்கிறேன்.

இதுதான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடுதான் நான் தென்பகுதிக்குச் செல்லப்போகிறேன்.

இந்த நம்பிக்கையைக் கொண்டுதான், நிராசை என்ற மலையிலிருந்து ஆசை என்ற சிற்பத்தைச் செதுக்கப்போகிறேன். இந்த நம்பிக்கையைக் கொண்டுதான் கருத்து வேற்றுமை என்ற அபசுரத்தைச் சகோதரத்துவம் என்ற அழகான சேர்ந்திசையாக மாற்றப் போகிறேன். இந்த நம்பிக்கையோடுதான் நாம் அனைவரும் ஒன்றாகப் பணியாற்றப் போகிறோம்; ஒன்றாக விளையாடப்போகிறோம்; ஒன்றாகப் போராடப்போகிறோம்; ஒன்றாகச் சிறை செல்லப்போகிறோம். ஒரு நாள் நிச்சயம் நமக்கு விடுதலை கிடைக்கும் என்ற புரிதலோடு சுதந்தரத்துக்காக போராடப்போகிறோம்...

கடவுளின் குழந்தைகள் அனைவரும் இந்தப் பாடலைப் புதிய அர்த்தத்தோடு பாடும் நாளாக அது இருக்கும்.

என் நாடே

விடுதலை தவழும் அற்புத நாடே

உன்னைப் பாடுகிறேன்

என் தந்தையர்கள் உயிர் நீத்த பூமியில்

என் முன்னோர்கள் குடியேறிய

பெருமைமிக்க தேசத்தில்

ஒவ்வொரு மலையிலிருந்தும்

ஒலிக்கட்டும் விடுதலை கீதம்!

அமெரிக்கா ஒரு மாபெரும் தேசம் ஆகவேண்டும் என்றால், இது நடக்கவேண்டும்.

நியூ ஹேம்ப்ஷயரின் கம்பீரமான மலைச் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

நியூ யார்க்கின் மாபெரும் மலைகளிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

பென்சில்வேனியாவின் உயரமான அலெகெனீஸ் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

பனிமூடிய கொலராடோவின் ராக்கி மலைச் சிகரங்களிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

கலிபோர்னியாவின் வளைந்த மலைச்சரிவிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

அது மட்டுமல்ல.

ஜார்ஜியாவின் ஸ்டோன் மலையிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

டென்னெசியின் லுக்அவுட் மலையிலிருந்து விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் ஒவ்வொரு குன்றிலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

எல்லா மலைகளிலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கட்டும்.

இது நடக்கும்போது, விடுதலை கீதம் ஒலிக்கும்போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொரு குக்கிராமத்திலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் விடுதலை கீதம் ஒலிக்கும்போது... அப்போது,

கறுப்பர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், யூதரல்லாதவர்கள், ப்ராட்டஸ்டண்ட்டுகள், கத்தோலிக்கர்கள் எனத் தேவனின் குழந்தைகள் அனைவரும் கரம்கோத்துக்கொண்டு கீழே உள்ள நீக்ரோ ஆன்மிகப் பாடலைப் பாடும் நாள் அப்போது உதயமாகும்:

விடுதலை பெற்றுவிட்டோம்! விடுதலை பெற்றுவிட்டோம்!

எல்லாம் வல்ல தேவனே, நன்றி! இறுதியாக நாங்கள் விடுதலை பெற்றுவிட்டோம்!

Martin Luther King Jr

யோகி ஆதித்யநாத் : நரேந்திர மோடிக்குப் பின் பிரதமர் நாற்காலியை பிடிப்பாரா? - விரிவான அலசல்

Martin Luther King Jr

உத்தர பிரதேசம்: யோகி ஆதித்யநாத் செல்வாக்கு சரிகிறதா? அகிலேஷ் முந்துகிறாரா?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com