நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி, ரஷ்யாவுடனான அனைத்து பரிவர்த்தனைகளையும் முடக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல் நடத்தி வருவதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கியும் ரஷ்ய நிறுவனங்கள் இடையிலான பரிவர்த்தனைகளை நிறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமெரிக்கா, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள நிறுவனங்கள், வங்கிகள், கப்பல் நிறுவனங்கள், துறைமுகங்கள் உடன் எந்த பரிவர்த்தனையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டதுடன். அந்த நிறுவனங்களுடன் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்த நிறுவனங்கள் மாற்று வழிகளை உபயோகிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கமர்ஷியல் இந்தோ வங்கி என்ற பெயரில் எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. இதில் 40% பங்கு தாரராக கனரா வங்கியுள்ளது. ஆனால் பரிவர்த்தனை தடை செய்யப்பட்டது குறித்து கனரா வங்கி எதுவும் தெரிவிக்கவில்லை.
தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக தி.மு.க.வை சேர்ந்தவரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்தி சென்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார்; புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயகுமார் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயகுமாருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார் திருச்சியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் திங்கள் புதன் வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகும்படி நிபந்தனை விதித்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என உக்ரைன் பிரதிநிதி மிகெய்லோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.
“சமீபத்திய பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இருதரப்பும் மிக விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த படையெடுப்பால் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி குறித்து நாங்கள் விரிவாக பேசினோம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 153 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று, மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 74-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஆர்.பிரியா(28) மேயர் வேட்பாளராகவும், 169-வது வார்டில் வென்ற மு.மகேஷ்குமார் துணை மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று ரிப்பன் மாளிகையில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இவர்களது வெற்றி 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேயராகப் பதவியேற்க உள்ள ஆர்.பிரியா, மாநகராட்சி முதல் தலித் மேயரும், 3-வது பெண் மேயருமாவார். இவர் எம்.காம். படித்துள்ளார். இவரது கணவர் கே.ராஜா திரு.வி.க.நகர் பகுதி செயலராக உள்ளார்.
துணை மேயராகப் பதவியேற்க உள்ள மு.மகேஷ்குமார், பி.ஏ. படித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஆதரவாளரான இவர் 1998 முதல் திமுகவில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சைதாப்பேட்டை யில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதேபோல, 2001, 2006-ல் மாமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 2006 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
உக்ரைன் -ரஷியா போர் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், இரண்டாம் நிலை நகரம் கார்கிவ் என ஒவ்வொரு இலக்காக குறிவைத்து ரஷிய படைகள் அதிரடியாக முன்னேறி வருகின்றன.
இதனையடுத்து கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அதிரடியா க உத்தரவிட்டிருந்தது. உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா வந்தடையும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனின் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் எல்லை நாடுகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தப் பணியை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் சிலர் தென்னிந்திய மாணவர்களை, குறிப்பாக தமிழக மாணவர்களை பேருந்தில் ஏற்றுவதில் பாரபட்சம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளை இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வசதியாக, தமிழக எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது
இந்த குழுவில் திமுக எம்பி திருச்சி சிவா, எம்எல்ஏ டிஆர்பி ராஜா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாக்கி ஆகிய நாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தமிழக மாணவர்களை தாயகம் திரும்ப அழைத்து வரும் பணியை மேற்கொள்வார்கள் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர் கல்வி, பணிநிமித்தம் போன்ற காரணங்களுக்காக உக்ரைனில் தமிழர்கள் 5,000 பேர் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இந்தியர்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.