வட கொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினாலும் வட கொரியா தன் சோதனையை நிறுத்துவதில்லை. இந்நிலையில், வட கொரியா ராணுவம் நிறுவப்பட்டதன் 90-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்," நம் அணுசக்தி படைகளின் அடிப்படை நோக்கம் போரைத் தடுப்பது. ஆனால் நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால், போரைத் தடுக்கும் பணியை மட்டும் கையிலெடுக்காது. எனவே நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்” என்றார். ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
தற்போது தமிழகச் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர் நடந்துவருகிறது. அப்போது, சட்டமன்றத்தில் 110- விதியின் கீழ் ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். முன்னாள் தி.மு.க தலைவரும் முதல்வருமான கருணாநிதிக்குச் சிலை அமைப்பது குறித்து முதல்வர் பேசினார். கருணாநிதியின் ஆட்சி குறித்துப் பாராட்டிப் பேசிய அவர், "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரத்துடன் கருணாநிதி கலைமிகு சிலை நிறுவப்படும்" என அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், அண்ணா சாலையில் கருணாநிதிக்குச் சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா பரவல் சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் கொரோனா சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறும். ஆலோசனையின்போது, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வழங்கவுள்ளார். டெல்லி, மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் திட்டமிடப்பட்டு நடைபெற உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு நடைபெறுகிறது. 18 வயது முடிந்து 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டவர்களுக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி, ‘முன்னெச்சரிக்கை டோஸ்’ என அரசு செலுத்துகிறது. இந்நிலையில், 12 முதல் 14 வயதான குழந்தைகளுக்குக் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த பட்டுவருகிறது. பள்ளிக்கூடங்கள் திறந்து, நேரடி வகுப்புகள் நடைபெறுகிற நிலையில், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.கோர்பேவாக்ஸ், கோவாக்சின் 2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் வழங்கி உள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய செய்தி உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக முன்பு விமர்சனம் செய்தார் எலான் மஸ்க். பின்னர், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.1 சதவிகித பங்குகளை அவர் வாங்கினார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க்கிற்கு விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பராக் அகர்வால் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர் நிறுவன ஊழியர்களின் கூட்டத்தில் பேசிய அவர், “ ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் அது எந்தத் திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com