பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக, பொதுமக்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து மெகா போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரியே இந்த போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் நேற்று கூடிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் கடும் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
அப்போது திடீரென நம்பர் ப்ளேட் இல்லாத வாகனத்தில் ஆயுதங்களை கையில் ஏந்தியப்படி, முகக் கவசத்தினால் முகங்களை மூடிக் கொண்டு போராட்டம் நடக்கும் பகுதியின் குறுக்கே மர்ம நபர்கள் சென்றன. இதனால் ஏற்கனவே போராட்ட களமாக இருந்த அப்பகுதி மேலும் அமைதியில்லாமல் காணப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து கேள்வி கேட்க முயற்சித்த போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவர்களை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் ஏற்கனவே போராட்டங்கள் வெடித்து சிதறிக் கொண்டிருக்கும் சூழலில் திடீரென மர்ம நபர்கள் அப்பகுதியில் வந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென ராணுவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் அடங்கிய ராணுவ ரைடர்ஸ் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் யார் என்பது விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபையில் கேள்வி எழுப்பினார்.
இலக்கத் தகடுகள் இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் இரகசிய இராணுவமா? இல்லை மற்றொரு குழுவா.? இதற்கான பதிலை தெரிந்துக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.