இருண்டு போன கடற்கரை ஒளிர்கிறது. பாலைவனத்தில் நடப்படும் கோடிக்கணக்கான மரங்கள். ஓடும் ரயில்கள். ஒரு செயற்கை நிலா. கார் மற்றும் கார்பன் வாயு இல்லாத நகரம். நூறு மைல் பரப்பளவில் பாலைவனத்தில் உருவாக்கப்படும் மாநகரம். இதுதான் நியோம். பாலைவன சவுதி அரேபியா, பசுமையோடு உருவாக்க இருக்கும் சூழலியல் நகரம். எல்லாம் சரி, இது உண்மையிலேயே நிறைவேற முடியுமா?
சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான இந்த நியோம் நகரத்திற்கான உத்தேசச் செலவு திட்டம் 500 பில்லியன் டாலர். 26,500 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய நியோம் நகரம், குவைத் அல்லது இஸ்ரேல் நாடுகளை விடப் பெரியது. மேலும் இது சவுதி நீதித்துறையின் கீழ் வராத தன்னாட்சி பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நியோமின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் வங்கியாளரான அலி ஷிஹாபி இத்திட்டத்தின் அம்சங்கள் சிலவற்றை விளக்குகிறார்.
பார்சிலோனாவின் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சூப்பர் பிளாக்குகள் போலவே நியோமின் ஒவ்வொரு சதுக்கம் அல்லது பகுதி இருக்கும். ஒவ்வொரு சதுக்கத்திலும் தன்னிறைவு பெறும் வகையில் கடைகள், பள்ளிகள் அனைத்தும் இருக்கும். ஐந்து நிமிட நடை அல்லது சைக்கிள் பயணத்தில் மக்கள் இந்த வசதிகளை பெற முடியும் என்கிறார் அலி ஷிஹாபி.
நியோம் திட்டம் முடிந்ததும் அதிவேக ரயில்கள் இயங்கும். இவை நகரின் அதிகபட்ச தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்கும்.
நியோம் நகரத்தின் ஒரு பகுதியாக கடலில் ஆக்ஸகோன் எனும் மிதக்கும் நகரம் 7 கி.மீ பரப்பரளவில் உருவாக்கப்படும். இது உலகின் மிகப் பெரிய மிதக்கும் பகுதியாக இருக்கும்.
செங்கடல் பகுதிக்கு அருகில் இருக்கும் நியோம், உலகின் மிகப்பெரிய பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. நியோமின் முதல் கட்ட வேலை 2025 க்குள் முடியுமென்று கூறப்படுகிறது.
நியோம் திட்டத்தில் தற்போது என்ன முடிந்துள்ளது? செயற்கைக் கோள் படத்தைப் பார்த்தால் வரிசையாக இருக்கும் வீடுகள், இரண்டு நீச்சல் குளங்கள் மற்றும் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. இது நியோம் ஊழியர்களுக்கான முகாம் என்று அலி ஷிஹாபி கூறுகிறார்.
பாலைவனத்தின் நடுவில் பசுமையான சூழலில் ஒரு அதிநவீன நகரத்தை உருவாக்குவது சாத்தியமா?
ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஆற்றல் துறை வல்லுநர் முனைவர் ஷெஹாபி சில சந்தேகங்களை முன்வைக்கிறார். நியோம் உலகிலேயே உணவு தன்னிறைவு பெற்ற நகரமாக இருக்குமென அதன் இணையதளம் கூறுகிறது. தற்போது நாட்டில் 80% உணவை இறக்குமதி செய்யும் சவுதி அரேபியாவில் இது சாத்தியமா?
நியோம் எனும் இந்த கனவுத் திட்டத்தின் உந்து சக்தியாக இருப்பவர், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். பசுமை, சூழலியல் என்று யதார்த்திலிருந்து திசை திருப்பி பெரும் வாக்குறுதிகளை அவர் முன்வைக்கிறாரென விமர்சகர்கள் கூறுகின்றனர். காப் 26 காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாரம் முன்பு இளவரசர், 2060 ஆம் ஆண்டிற்க்குள் சவுதி அரேபியா கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக அமையும் என அறிவித்தார்.
நடைமுறையில் இது சாத்தியமா என்று கேள்வி எழுப்புகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலையின் ஜோனா டெப்லெட்ஜ். உலக வெப்பமயமாகுதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவாவது குறைப்பதற்கு கச்சா எண்ணெய் உற்பத்தி 2030 வரை ஆண்டுக்கு 5% குறைய வேண்டுமென அவர் கூறுகிறார்.
ஆனால் காப் 26 (COP 26) காலநிலை மாநாட்டில் உறுதி மொழியை வழங்கிய சவுதி அரேபியா சில வாரங்களிலேயே எண்ணைய் உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்தது. இது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் டெப்லெட்ஜ்.
கார்பன் வாயு உமிழ்வு என்பது எரிபொருளை எரிப்பதினால் வருகிறது. அதை உற்பத்தி செய்வதில் இருந்து வருவதில்லை. எனவே சவுதி அரேபியா ஆண்டுக்கு மில்லியன் கணக்கிலான பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறது. அதன் மூலம் எரிக்கப்படுவதினால் வரும் கார்பன் வாய் உமிழ்வை தன்கணக்காக அது கொள்வதில்லை.
தனது சொந்த நாட்டில் கூட 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பித்தக்க மின்சாரத்தை 50% ஆக மாற்றுவதாக சவுதி அரேபியா இலக்கு வைத்துள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் சுமார் 0.1% மட்டுமே இவ்வழியில் உற்பத்தி செய்துள்ளது. எனவே சவுதி பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.
நியோமின் திட்டமிடுபவர்கள் கார்பன் வாயு இல்லாத, கடல் நீரைக் குடிநீராக்கி, காற்று மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் நகரத்தை உருவாக்கப் போவதாக கூறுகிறார்கள்.
சவுதி ஒரு வறண்ட நாடு. தனது நீர் தேவையில் பாதி அளவை அது கடல்நீரிலிருந்து உப்பை நீக்கும் தொழில்துறை அமைப்பால் பெறுகிறது. இதன் செலவு மிக அதிகம். மற்றும் உப்புநீரின் கழிவு, நச்சு இரசாயனங்கள் மீண்டும் கடலில் செலுத்தப்படுகிறது. இது கடலின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகும்.
இதற்கு நியோம் ஆதரவாளர்கள் என்ன கூறுகிறார்கள்? உப்புநீர் கழிவை கடலில் கொட்டுவதற்கு பதில் மறுசுழறசி செய்து தொழில்துறைக்கு பயன்படுத்துவோம் என்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி இதுவரை எங்கும் வெற்றி பெறவில்லை. ஆகவே நிருபிக்கப்படாத தொழில்நுட்பங்கள் காலநிலையை இன்னும் கேடாக மாற்றுவதற்கே வழிவகுக்கும் என்று சூழலியில் வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள்.
செங்கடல் கடற்கரைக்கும், மலைகள் நிறைந்த ஜோர்டானிய எல்லைக்கும் இடையே உள்ள பாழடைந்த நிலப்பரப்புதான் நியோம் நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் பகுதி. ஆனால் அங்கே பழங்குடி மற்றும் நாடோடி மக்களான பெடோயின் ஹவைதாட் மக்கள் வாழ்கின்றனர். வழக்கமாக இது போன்ற பிரம்மாண்ட திட்டங்களுக்கு முதல் பலி அங்கு வாழ்கின்ற பாரம்ரிய மக்கள்தான். நியோம் நகரம் உருவாக்க இருக்கும் பகுதி மக்களுக்கு அங்கே வேலை வாய்ப்பு அளிப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வசதி மேம்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளூர் மக்கள் இதுவரை எந்த நன்மையையும் பெறவில்லை.
நியோம் மெகா சிட்டியை கட்டுவதற்காக இதுவரை இரண்டு சிறு நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 20,000 ஹவைய்தாட் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இப்படி பழங்குடி மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதாகும் என்று அரபுலக ஜனநாயக அமைப்பின் நிர்வாக இயக்குநர் சாரா லியா விட்சன் கூறுகிறார்.
இந்த பழங்குடி மக்கள் வெளியேற்றத்தை எதிர்த்த அப்துல் ரஹிம் என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார். இவர் தபூக் பகுதியில் இருக்கும் தனது வீட்டிலிருந்து வெளியேற மறுத்து இணையத்தில் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். சில நாட்களில் அவரை சவுதி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இப்படிக் கொல்லப்படலாம் என்பதையும் அவர் முன் கூட்டியே தெரிவித்திருந்தார். சூழலியல் நகரமான நியோம் இப்படித்தான் தனது நரபலியைத் துவங்கியிருக்கிறது.
வாஷிங்டனில் இருக்கும் சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹத் நாசர், பழங்குடி மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். ஆனால் அவர் அப்துல் ரஹீம்இன் படுகொலையை மறுக்கவில்லை. அது ஒரு சிறிய சம்பவம் என்று கடந்து செல்கிறார்.
நியோம் திட்டம் முதன்மையாக சுற்றுலா பயணிகளை ஈர்க்க முனைகிறது. அதன் மூலம் சவுதி பொருளாதாரத்தை எண்ணெய் தவிர்த்த பன்முகப் பாதையில் கொண்டு செல்ல விழைகிறது. நியோமின் விளம்பர வீடியோக்கள் சவுதி அரேபியாவின் கடுமையான சட்டங்கள் இல்லாத தன்னாட்சி பெற்ற ஒரு அழகான, கவர்ச்சியான மாநகரம்தான் நியோம் என்று காட்டுகின்றன.
ஆனால் பலர் இதை விமர்சிக்கின்றனர். இந்தத் திட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒன்று என்கின்றனர். தற்போது நியோம் திட்டத்தில் சவுதி அரச வம்சத்திற்காகன அரண்மனைகள், கோல்ஃப் மைதானங்கள், ஹெலிபேடுகள் போன்றவை மட்டுமே கட்டப்பட்டிருப்பதை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன.
நியோம் நகரம் தொழிலாளர் முதல் பில்லியனர் வரை அனைவருக்கமான நகரம் என்று அலி ஷிஹாபி என்பவர் சொல்கிறார். ஆனால் அது அவ்வாறு அறியப்படவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார். இது தொடர்பாக நியோமின் தகவல் தொடர்பு உத்தி தோல்வி அடைந்து விட்டது, மக்கள் இதை பணக்காரர்களின் பொம்மை என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு பசுமையான எதிர்காலப் பயணத்தை துவங்குவது எளிதல்ல என்று இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகிறார். பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், சூழலியலை பாதுகாப்பதற்கும் இடையே நாங்கள் ஒரு தவறான தெரிவை நிராகரிக்கிறோம் என்கிறார் அவர்.
நியோம் இந்த குறிக்கோளை கொண்டிருந்தாலும், சவுதி தனது எண்ணெய் உற்பத்தியிலிருந்து விலகும் எந்த கடினமான முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.
அதைத்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஆற்றலியல் வல்லுநர் மணால் ஷெஹாபியும் வலியுறுத்துகிறார்: “எண்ணெய் மற்றும் எரிவாயுவை முதன்மையாகச் சார்ந்திருக்கும் எந்த ஒரு நாடும் திடீரென அதை பயன்படுத்துவதை நிறுத்துவது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் கடினமாக இருக்குமென நினைக்கிறேன்".
உலகின் எரிசக்தி ஆற்றல் தேவையை சவுதிதான் பூர்த்தி செய்கிறது என்கிறார் சவுதி தூதரக செய்தித் தொடர்பாளர் ஃபஹத் நாசர். அப்படி இருக்கும் போது நியோம் போன்ற சூழலியல் திட்டம் ஒரு மாயமானாகத்தான் இருக்கும்.
காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலிருந்தே சவுதி அரேபியா இத்தகைய இரட்டை மொழியில் பேசி வருகிறது. ஒருபுறம் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டு மறுபுறம் சூழலியல் பாதுகாப்பையும் பேசுகிறது.
சவுதியின் அரசு செய்தித் தொடர்பாளர் ஃபஹத் நாசம் இந்தக் குற்றச்சாட்டுகுளை மறுக்கிறார். சவுதி அரேபியா பசுமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறதென வலியுறுத்துகிறார்.
ஆனால் சவுதி அரேபியாவின் நியோம் திட்டம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ற கேள்விக்கு அந்நாட்டின் எண்ணெய் பொருளாதார அடிப்படையைப் பார்த்தால் விடையில்லை!
கார்பன் வாயு உமிழ்வை வைத்து தனது செல்வவளத்தை பாதுகாக்கும் ஒரு நாடு சூழலியல் பாதுகாப்பைப் பற்ற பேசுவது ஒரு முரண் இல்லையா?