சுவிஸ் உணவு நிறுவனமான, நெஸ்லே தனது பிரபலமான பிராண்டுகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுகிறது. ஆனால் இன்னும் அத்தியாவசிய உணவுகளைத் தொடர்ந்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.
நெஸ்லே நிறுவனம், இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் முதலீட்டை நிறுத்தியது. ஆனால், இப்போது KitKat மற்றும் Nesquik போன்ற பிராண்டுகளின் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக உக்ரேனிய அரசியல்வாதிகள், இந்நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனங்களைச் செய்து வருகின்றனர்.
போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல மேற்கத்திய பிராண்டுகள் ரஷ்யாவில் தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளை, விற்பனைகளை நிறுத்தியுள்ளன. ஆனால், ஒரு சில பிராண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
“உக்ரைனில் போர் சூழல் நிலவும் நிலையில், ரஷ்யாவில் எங்களது செயல்பாடுகள் அத்தியாவசிய உணவை வழங்குவதில் கவனம் செலுத்துமே தவிர லாபம் ஈட்டுவதில் அல்ல” என்கிறது நெஸ்லே நிறுவனம்.
"ரஷ்யா மீதான அனைத்து சர்வதேச தடைகளுக்கும் நாங்கள் முழுமையாக இணங்குகிறோம்," என்று ரஷ்யா அரசு கூறுகிறது.
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சனிக்கிழமையன்று எதிர்ப்பாளர்களுக்கு ஸ்ட்ரீம் செய்யப்பட்ட உரையில் நெஸ்லே நிறுவனம் இன்னும் ரஷ்யாவில் வணிகத்தை நடத்துவதைப் பற்றி விமர்சித்து இருந்தார்.
முன்னதாக, உக்ரைன் பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால், நெஸ்லே முதலாளி மார்க் ஷ்னீடருக்கு "எந்தவித புரிதலும் இல்லை" என்று ட்வீட் செய்திருந்தார்.
அவர் டிவட்டரில் எழுதியது, “ஒரு பயங்கரவாத நாட்டின் பட்ஜெட்டுக்கு வரி செலுத்துவது என்பது பாதுகாப்பற்ற குழந்தைகளையும் தாய்மார்களையும் கொல்வதாகும். நெஸ்லே நிறுவனம் விரைவில் மனதை மாற்றும் என நம்புகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
இது ட்விட்டரில் #BoycottNestle என்று ட்ரெண்டிங்கில் இருந்தது.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து நெஸ்லே நிறுவனம், படிப்படியாக ரஷ்யாவில் அதன் செயல்பாட்டைக் குறைத்து வருகிறது. ஆனால், முற்றிலும் வெளியேற வேண்டிய அழுத்தத்தில் தற்போது உள்ளது.
விளம்பரங்கள் மற்றும் மூலதன முதலீடுகளை நீக்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நெஸ்ப்ரஸ்ஸோ காபி காப்ஸ்யூல்கள் மற்றும் சான் பெலிகிரினோ வாட்டர் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது நெஸ்லே…
ஆனால், ரஷ்யாவில் பல பிராண்டுகள் இன்னமும் தொடர்ந்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது. "ரஷ்யாவில் உள்ள எங்கள் 7,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்காக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நாங்கள் நிறுவனத்தைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். காரணம், அவர்களில் பெரும்பாலானோர் சாமானிய மக்கள்" என்கிறது பல பிராண்டுகள்.
"எதிர்காலத்தில் ரஷ்ய நாட்டில் லாபம் ஈட்டவோ அல்லது இது தொடர்புடைய வரிகளைச் செலுத்தவோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், எந்த லாபமும் இன்றி மனிதாபிமான ரீதியில் நிவாரண அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்" என்று கூறியுள்ளது நெஸ்லே நிறுவனம்.
மேலும் அந்நிறுவனம், “நாங்கள் உக்ரைன் மக்கள் மற்றும் அங்குள்ள எங்கள் நிறுவனத்தின் 5,800 ஊழியர்களுடன்தான் நிற்கிறோம்” என்று கூறியுள்ளது.
இதுவரை சர்வதேச பிராண்டுகளான மெக்டொனால்ட்ஸ், அழகுசாதன நிறுவனமான லாரியல், பேஷன் விற்பனையாளர் H&M மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆப்பிள்’ ஆகியவை ரஷ்யாவில் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியும் நிறுத்தியும் உள்ளன.
சில சிறிய நிறுவனங்கள், ரஷ்ய நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றனர். அதே நேரத்தில் M&S மற்றும் பர்கர் கிங் போன்ற நிறுவனங்கள் சிக்கலான உரிமையாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பதால், ரஷ்யாவில் தங்கள் கடைகளை மூட முடியவில்லை என்றும் கூறுகின்றன.