சென்னையில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தேநீரின் விலை 12 ரூபாய். ஒரு நாளைக்கு 2 குடித்தால் மாதம் 288 ரூபாய் வருகிறது. இதில் பட்டர் பிஸ்கெட், பஜ்ஜி, வடை சாப்பிட்டால் ரூ. 500-ஐத் தாண்டும். விற்கிற விலைவாசியில் ஐந்துக்கும் பத்துக்கும் யோசித்து செலவழிக்கும் உலகில் ஒரு 9 வயதுச் சிறுவன் சொந்த விமானத்துடன் பயணம் செல்கிறான்.
நைஜீரியாவில் உள்ள லாகோஸைச் சேர்ந்த மொம்பா ஜூனியர், வயது ஒன்பது. அவன் ஆறு வயதில் தனது முதல் மாளிகையை அப்பாவிடமிருந்து பரிசாகப் பெற்றான். மற்றும் அவனது மல்டி மில்லியனர் அப்பாவால் பென்ட்லியை "முதல் காராக" பெற்றுக் கொண்டான். உலகம் முழுவதும் அதி பணக்காரர்களால் மட்டும் வாங்கப்படும் பென்ட்லி காரின் விலை என்ன தெரியுமா? ஒன்றே முக்கால் கோடி ரூபாய். இந்தப் பணத்தில் நம்மூரில் 20 மாருதி, ஹூண்டாய் கார்களை வாங்கி விடலாம்.
ஒரு தனியார் ஜெட் விமானத்தில் உலகம் முழுவதும் பயணம் செய்து, தனது பெயரில் பல மாளிகைகளை வைத்திருக்கும் இந்த சீமந்த புத்திரனுக்கு வயது ஒன்பதுதான். இந்த சிறிய வயதில் உலகிலேயே அதிகப் பணம் வைத்திருக்கும் பில்லியனர் இந்தச் சிறுவன்தான்.
நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த மோம்பா ஜூனியர், தனது ஆறு வயதில் தனது முதல் மாளிகையை வைத்திருந்தான். ஏற்கனவே ஆடம்பர, ரேஸ் சூப்பர் கார்களின் முழு அணிவகுப்பும் அவனிடம் உள்ளது. நம்மூரில் கொஞ்சம் வசதி இருந்தால் சேலைக்கேற்ற வண்ணத்தில் தோள் பை போட்டுக் கொண்டு செல்லும் பெண்களைப் பார்த்திருப்போம். இவன் ஆடைக்கேற்றவாறு காரை மாற்றுவானா தெரியவில்லை.
இவ்வளவு கார் இருந்தும் நமது பையனால் காரை ஓட்ட முடியாது. ஓட்டுநர் இருக்கையில் இருந்து கொண்டு பெடல்களை தொடுமளவு அவன் இன்னும் வளரவில்லை, வயதுமில்லை.
மோம்பாவின் இயற்பெயர் முகமது அவல் முஸ்தபா. இன்ஸ்டாகிராமில் இவனை 27,000 பேர் பின்தொடர்கிறார்கள். எதற்கு? அவனது ஆடம்பர வாழ்வைப் பார்த்து பொறாமைப் படுவதற்குத்தான். இங்கு அவன் ஒரு குழந்தை பிரபலம்.
அவனது இன்ஸ்டாகிராமில் பதிவுகளில் ஆடம்பரம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்த படம், ஆடம்பர விடுதியில் ஒய்யாரமாக உணவு அருந்தும் காட்சி, பென்ட்லி காரில் அமர்ந்து போஸ் கொடுக்கும் காட்சி இப்படியாக இன்ஸ்டாகிராமில் அலப்பறை செய்கிறான் இந்தக் குட்டிப் பையன்.
எப்போதும் அவன் அணியும் உடைகள் லண்டன், பாரிசின் டிசைனர் ஆடைகளைத் தோற்கடித்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு புகைப்படத்திற்கு "எனது முதல் பென்ட்லி கார் சவாரி, நன்றி அப்பா" என்று தலைப்பிட்டான்.
மற்றொரு புகைப்படத்தில் ஒரு டிசைனர் சூட் அணிந்து கொண்டு "ஒரு முதலாளி போல உணர்கிறேன்" என்று தலைப்பிட்டுள்ளான். ஏன் தம்பி எங்களை வெறுப்பேற்றுகிறாய்?
மோம்பாவின் கதைகள் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் வேண்டுமென்றே பிரபலப்படுத்தப்படுகின்றன. விரைவிலேயே வாஷிங்டன் முதல் உசிலம்பட்டி வரை பிரபலமாகிவிட்டான் இந்த சிறுவன். அவனது விளம்பரக் கதைகளில் அவன் ஆடம்பரக் கார்கள் முன்பு நிற்பது போன்றும், அமீரகத்தில் உள்ள லாகோஸ் மற்றும் துபாயில் உள்ள மாளிகை வீடுகளில் தனது அன்றாட வாழ்க்கைக் காட்சிகளை போஸ் கொடுப்பது போன்றும் இடம் பெறும்.
சமூக ஊடகங்களில் லேட்டஸ்ட்டான இந்த குட்டி நட்சத்திரம், இஸ்மாலியா முஸ்தபா எனும் நைஜிரியாவின் பில்லியனர் பிரபலத்தின் மகனாவான். இந்த குட்டிப் பையன் ஏதோ சிறிய வயதில் மாஜிக் செய்து சம்பாதித்தான் என்று நினைத்து விடாதீர்கள். எல்லாம் அப்பா அள்ளிக் கொடுக்கும் படிதான்.
அப்பா முஸ்தாபாவுக்கு இன்ஸ்டாகிராமில் 11 இலட்சம் பின்தொடர்வோர் இருக்கின்றனர். தனயனுக்கேற்ற தந்தை போல இவரும் தனது ஆடம்பர வாழ்க்கைக் காட்சிகளை அதில் பதிவிடுகிறார். கூடவே தனது குழந்தைகளையும் அப்படிப் பதிவிடுமாறு செய்து அந்தக் குழந்தைகளது உலகத்தை அழிக்கிறார்.
ஒரு பதிவில் மோம்பா ஜூனியர் மற்றும் அவனது இளைய சகோதரி பாத்திமா இருவரையும் ஆடம்பர உடையணியச் செய்து, “விலையுயர்ந்த குழந்தைகள்" என்று தலைப்பிட்டுள்ளார். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை!
மற்றொரு இடுகையில் குட்டி பாத்திமாவுக்கு பென்டி டி ஷர்ட்டை அணிந்து அவளது மூன்றவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பென்டி டி ஷர்ட்டின் விலை சராசரியாக ஒரு இலட்சம் ரூபாய் இருக்கும்.
மேலும் மகளுக்கு தந்தை இப்படி எழுதுகிறார்: "நீ பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் அற்புதமான ஒன்றைச் சேர்த்திருக்கிறாய். நீ இல்லாமல் என் வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது."
மகளுக்கு மட்டுமல்ல மனைவிக்கும் ஒரு பதிவில் அவரை "ரொக்க சீமாட்டி" என்று அழைக்கிறார். ஒரு பணக்காரர் தனது குடும்பத்தையே பணத்தில் குளிப்பாட்டுவதை உலகம் இப்போதுதான் கேள்விப்படுகிறது.
மோம்பா சொகுசு ஹோட்டல்களில் சுற்றித் திரிவதையும், விலை உயர்ந்த கார்களை ஓட்டுவதையும், ரூபாய் நோட்டுகளில் புரள்வதையும் மற்ற புகைப்படங்கள் காட்டுகின்றன.
ஒரு பதிவில், “இல்லம் என்பது வாழ்க்கையின் அன்றாட நெருக்கடியைத் தணிக்கச் செய்யும் ஒரு இடம். அன்றாட வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு ஒரு இடம் இருக்கிறது என்பதை வீடு உறுதியளிக்கிறது. உங்களை நியாயத் தராசில் நிறுத்தாமல் திறந்த கரங்களுடன் அழைப்பதில் வீட்டிற்கு இணை இல்லை", என்று இயக்குநர் விக்கிரமன் பாணியில் சென்டிமெண்டாக உருகியிருக்கிறார் இந்த பில்லியனர் தந்தை.
மற்றொரு பதிவில் தனது மகன் அவனது சாதனைகளுக்காகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிறார். மேலும் அவன் தனது இன்ஸ்டால்மெண்டுகளை முழுக்க கட்டிவிட்டான் என்கிறார். விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்து, அதிநவீன கார்களில் பவனி வருவதும்தான் சாதனை என்றால் சிறிய வயதில் விளையாட்டு, பாட்டு, படிப்பு என்று சாதனை படைக்கும் சிறுவர்களெல்லாம் இந்த தந்தையின் பார்வையில் வேஸ்ட்டுதான்.
தந்தை மோம்போ தனது மில்லியன் கணக்கான வருவாயை அமீரகத்தின் லாகோசில் போட்டிருக்கும் முதலீடுகள் மூலம் சம்பாதித்தார் என்று கருதப்படுகிறது. அப்பா என்னவென்று எதில் முதலீடு போட்டு சம்பாதித்தார் என்பது அந்த இல்லாத கடவுளுக்கே வெளிச்சம்.
சரி இத்தனை ஆடம்பர கதைகளுக்கும் ஒரு கிளைமாக்ஸ் இருக்க வேண்டுமே? கண்டிப்பாக இருக்கிறது. தந்தை மோம்பா கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பண மோசடிக்காக குற்றம் சாட்டப் பட்டிருக்கிறார். இந்த மாத ஆரம்பத்தில் அவர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவம், பண ஏமாற்று மோசடிக்காகவும் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த மாத ஆரம்பத்தில் அவர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும், பண ஏமாற்று மோசடிக்காகவும் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நைஜீரியாவில் உள்ள பொருளாதார மற்றும் நிதிக் குற்றங்கள் ஆணையத்தால் அவர் மீது 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் இப்போது தனது நிறுவனமான இஸ்மாலோப் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் உடன் இணைந்து இந்த விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். விசாரணை முடிவில் சிறைக் களியா, துபாய் ஆடம்பர ஓட்டல் கேளிக்கையா என்பது விரைவில் தெரியவரும்.
ஒன்பது வயதில் பில்லியனர் என்று வாய் பிளந்தவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய திடீர் பணக்காரர்களும் அவர்களது ஆடம்பரங்களும் எப்போதும் நேர்மையாக இருப்பதில்லை. இதில் தனது குழந்தைகளையும் அப்படிக் கெடுத்த தந்தைக்குக் கூடுதல் தண்டனை கொடுத்தால் வாய் பிளக்கும் மற்ற அப்பாக்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
ஏழைகள் அதிகம் வாழும் நைஜீரியாவிலிருந்து இப்படி ஒரு செய்தி! அதைப் பிலாக்கணம் வைத்துப் பாடுகின்றன உலக ஊடகங்கள்!