
Kazakhstan
எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் மக்கள் போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எல்பிஜிக்கு அரசு கொடுத்து வந்த மானியத்தை நீக்கி விலை இரண்டு மடங்காக அதிகரித்த காரணத்தால் அங்கு மக்கள் வீதியில் இறங்கி போராடினர். இது வெறும் எரிபொருள் விலையேற்றத்துக்கான போராட்டமாக மட்டும் பார்க்கப்படவில்லை. பல ஆண்டுகளாக கஜகஸ்தான் மக்களின் உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதே இந்த போராட்டத்திற்கான காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
மறுபுறம் நாட்டின் மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரப் போட்டியின் காரணமாக தூண்டிவிடப்பட்ட போராட்டம் இது என்றும் கூறப்படுகிறது.
மத்திய ஆசியாவில் சினா மற்றும் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நாடுதான் கஜகஸ்தான். இதன் மக்கள் தொகை வெறும் 1.9 கோடி.
உலகிலேயே எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் கஜகஸ்தானும் ஒன்று. நாள் ஒன்றுக்கு அந்நாடு 16 லட்சம் பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது.
எண்ணெய் வளம் மிக்க ஒரு நாடு, மக்கள் தொகையும் வெறும் 1. 9 கோடிதான் என்றால் பின்பு என்ன பிரச்னை ?
இருப்பினும் இந்த வளம் மக்களைச் சென்று சேருவதில்லை. அதுதான் சமீபத்திய போராட்டத்திற்கான முக்கிய காரணம்.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு உருவான ஒரு நாடுதான் கஜகஸ்தான். 1991ஆம் ஆண்டில்தான் அந்நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது. கிட்டதட்ட முப்பது வருடங்களாக நாட்டின் அதிபராக நூர்சுல்தான் நசர்பாயேய்தான் அதிகாரத்தில் இருந்து வருகிறார். இவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Protest
Newssense
பெட்ரோல் விலையேற்றத்தால் பெரும்பாலும் எல்பிஜிக்கு மாறிய மக்களுக்கு எல்பிஜியின் விலையேற்றம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வேறு. எனவே போராட்டம் வெடித்தது.
நாட்டின் முன்னாள் தலைநகரான ஆல்மாட்டியில் உள்ள சிட்டி ஹால் கட்டடத்திற்கு தீ வைத்தனர் போராட்டக்காரர்கள். காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்தனர். உயிரிழந்தவர்களில் காவல்துறையினரும் அடக்கம்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட ரஷ்ய தலைமையிலான ராணுவப் படையை வரவழைத்தார் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ்.
கடந்த வாரம் தொடங்கிய போராட்டத்தில் இதுவரை 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 8000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தனது அமைச்சரவையை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ். பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்த புதிய அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் குறித்தான போராட்டமாக இது பார்க்கப்பட்டாலும், அதன் ஆழமான காரணம் அதிகாரத்தை நோக்கிய ஒரு போராட்டம்தான். முன்னரே சொன்னது போல எண்ணெய் வளமும் கனிம வளமும் நிறைந்த ஒரு நாடுதான் கஜகஸ்தான் ஆனால் அதன் மக்கள் தொகையின் சராசரி மாத வருமானம் 570அமெரிக்க டாலர்கள்.
பரந்துகிடக்கும் சமூகம் மற்றும் பொருளாதார சமநிலையற்ற தன்மைக்கான ஒரு போராட்டமாகத்தான் இது பார்க்கப்படுகிறது.
Nursultan Nazarbayev
கஜகஸ்தான் சோவியத் யூனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் நூர்சுல்தான் நசர்பாயேய் அந்நாட்டின் அதிபர் பொறுப்பிலிருந்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொலிட் பூரோ உறுப்பினர் இவர்.
தனக்கு தானே சிலை வைத்து கொள்வது, அரசுக்கு எதிரான போராட்டங்களை கண்மூடித்தனமாக ஒடுக்குவது, நாட்டின் தலைநகரை மாற்றுவது அதற்கு தனது பெயரை வைத்து கொள்வது என கஜகஸ்தானின் ஒட்டு மொத்த அதிகார மையமாக இவர் இருந்தார். அதன்பின் 2019ஆம் ஆண்டு அவரே பதியிலிருந்து விலகி தற்போது அதிபராக இருக்கும் காசிம் ஜோமார்ட் டோகாயேவிடம் பதிவையை கொடுத்தார். அவர் பதவியிலிருந்து விலகியது பலருக்கு ஆச்சரியத்தை வழங்கியது. பதிவியிலிருந்து விலகினாலும் ஆட்சியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
Karim Massimov
நாட்டின் அதிபர் டோகாயேவ் இந்த போராட்டத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடியதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளது என்று கூறப்படுகிறது. ஒன்று நாட்டின் பாதுகாப்பு படையால் அதிகரித்த கலவரத்தை ஒடுக்க முடியவில்லை.
இரண்டாவது ரஷ்யாவின் ஆதரவை பெறுவதற்கான ஒரு தூதாகவும் இது பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தனது ஆட்சிக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் அரசியல் ரீதியாகவும் இதன்மூலம் ரஷ்யாவிடமிருந்து ஒரு உதவியை பெற்று கொள்ளலாம். ஆனால் இது நாட்டிற்குள் பெரும் விமர்சனங்களையே உருவாக்கும்.
ஏனென்றால் பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட ஒரு நாடு கஜகஸ்தான். எனவே ரஷ்ய படைகளின் தலையீடு அங்கு உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே பார்க்கப்படுகிறது.
மேலும் அந்த பிராந்தியத்தில் தனது அதிகார வளையத்தை ரஷ்ய நிறுவும் ஒரு செயலாகவும் இது பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த பிராந்தியத்தில் எந்த ஒரு புரட்சிக்கும் இடமில்லை என்று புதின் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கஜகஸ்தானில் ரஷ்ய தலையீட்டிற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆட்சியைக் கவிழ்க்க நிகழ்த்தப்பட்ட சதியா?
கஜகஸ்தான் அதிபர் மற்றும் புதின் ஆகியோர் ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளின் சதியே இந்த போராட்டங்கள் என தெரிவித்துள்ளனர்.
மூன்று தினங்களுக்கு முன்பு நாட்டின் முன்னாள் உளவுத் துறை தலைவர் கரிம் மசிமோவ் நாட்டிற்கு எதிராக சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இவர் முன்னாள் அதிபர் நூர் சுல்தானுக்கு நெருக்கமானவர். நூர் சுல்தான் அதிபராக இருந்த சமயத்தில் இருமுறை நாட்டின் பிரதமராக இருந்தவர் கரிம் மசிமோவ். முன்னர் குறிப்பிட்டது போல நாட்டின் மேல் மட்டத்தில் எழுந்த அதிகார போட்டியின் ஒரு அங்கமாக கூட இந்த கைது இருக்கலாம் ஆனால் உறுதியாக கூற முடியாது