உலக அளவில் நான்காவது பணக்கார நாடாக கத்தார் முன்னேறியுள்ளது. செல்வந்த நாடுகளில் இடம்பிடித்த முதல் அரபு நாடு இதுவாகும்.
Global Finance இன் சமீபத்திய அறிக்கை, UAE, பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமன் போன்ற அரபு நாடுகளை கத்தாருக்கு அடுத்தபடியாக வரிசைப்படுத்துகிறது.
தரவுகளின்படி, கத்தாரின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 4.9% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி செல்வந்த நாடாக இருக்கும், கத்தார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எப்படி இருந்தது என்று தெரியுமா?
1922 ஆம் ஆண்டில் கத்தார் 30 லட்சம் மக்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடாக இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பாலானோர் பாலைவனங்களில் இருந்து நாடோடியாக வந்து குடியேறியவர்களாகவும், மீன் பிடித்தல், முத்து சேகரிப்பது என்பதை தொழிலாகக் கொண்டிருந்தனர்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கத்தார் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. ஜப்பானியர்கள் முத்துகள் வளர்ப்பு பண்ணை முறையை கண்டறிந்து, பெரும் அளவில் உற்பத்தியை தொடங்கிய பின்பு கத்தார் பொருளாதாரத்தில் சரிவை சந்தித்தது.
1930- 1940 இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் கத்தார் தனது குடிமக்களில் 30% பேரை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அயல்நாடுகளுக்கு வேலைத்தேடி மக்கள் குடிபெயர்ந்தனர்.
பத்து ஆண்டுகள் கழித்து 1950ஆம் ஆண்டு 24,000க்கும் மேற்பட்ட கத்தார் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதாக ஐ.நா கூறியிருந்தது.
ஆனால் தற்போது கத்தார் ஒரு பொருளாதார முன்னேற்ற நாடாக மட்டுமில்லாமல் பணக்கார நாடாகவும் மாறியுள்ளது. பணக்கார நாடுகளில் ஒன்றாக கத்தார் திகழ 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
அவை
எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு
இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு
அரண்மனை ஆட்சி கவிழ்ப்பு
1916ஆம் ஆண்டில் இருந்து கத்தார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் செயல்பட்டது.
பல ஆண்டு தொடர் ஆய்வுக்கு பின்னர் தோஹாவிலிருந்து 80 கி.மீ தொலைவில் கத்தார் நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போரின் போது கண்டிபிடிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
என்னதான் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் 1949ஆம் ஆண்டு வரை ஏற்றுமதிக்கு தடை இருந்து வந்திருக்கிறது.
நீண்ட காத்திருப்புக்கு பின்னர் எண்ணெய் ஏற்றுமதிக்கு கத்தார் அனுமதிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் பல மாற்றங்களைச் சந்தித்தது கத்தார்!
எண்ணெய் தொழில் வளர்ச்சியின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருகை அதிகரித்தது. முதலீட்டாளர்களும் கத்தாருக்கு வரத்தொடங்கினர். மக்கள்தொகையும் அதிகரித்தது.
1950ஆம் ஆண்டு 25,000க்கும் குறைவாக இருந்த மக்கள்தொகை அடுத்த 20 ஆண்டுக்கு முன்பே ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஆனது.
மீனவர்கள், முத்து சேகரிப்பாளர்களை கொண்டதாக நாடாக இருந்த கத்தார் 1970ஆம் ஆண்டில் பெரும் வளர்ச்சி அடைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி 300 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொண்ட நாடாக மாறியது. ஒரு வருடத்திற்கு பின்பு பிரிட்டிஷ் ஆட்சி இருந்து விடுபட்டு சுதந்திர நாடானது கத்தார்.
1971ஆம் ஆண்டு கத்தார் கடலின் வடகிழக்கு பகுதியில் இயற்கை எரிவாயு அதிகம் இருப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
12க்கும் மேற்பட்ட கிணறுகளை தோண்டி புவியுடன் தொடர்புபடுத்தப்படாத இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர்.
பெரிய நாடுகளான ரஷ்யா, ஈரான் ஆகியவற்றுக்கு அடுத்து கத்தார் உலகின் பெரிய எரிவாயு இருப்பு உள்ள நாடாக கருதப்பட்டது.
கத்தார் கேஸ் என்ற நிறுவனம் உலகிலேயே இயற்கை எரிவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்தது. எண்ணைய் ஏற்றுமதியைப் போல எரிவாயு ஏற்றுமதியிலும் பெரும் அளவிலான வளர்ச்சி வரத்தொடங்கியது.
1996ஆம் ஆண்டு ஜப்பானுக்கு திரவ இயற்கை எரிவாயு அனுப்பப்பட்டது. இது கத்தாரின் முதலாவது பெரிய ஏற்றுமதியாக கருதப்பட்டது.
பல பில்லியன் டாலர் தொழிலின் ஆரம்பமாக கத்தாரின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தை தொட்டது.
21ம் நூற்றாண்டில் கத்தாரின் பொருளாதாரம் வளர்ந்ததுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் தற்போதைய அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனி. தந்தை ஹமத் பின் கலீஃபா அல் தானி சுச்சர்லாந்து பயணம் மேற்கொண்டிருந்த போது ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பதவியேற்றார். அரசியல் ரீதியில் இது விமர்சனத்துக்குள்ளானது என்றாலும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது.
அதன் பின்னர் வளங்கள் அதிகம் இருந்த நாடாக பார்க்கப்பட்ட கத்தார் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2003 - 2004 ஆண்டுகளில் 3.7 சதவிகிதத்தில் இருந்து 19.2 சதவிகிதமாக வளர்ச்சியடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டில் பொருளாதாரம் மேலும் விரிவடைந்து 26.2 சதவிகிதமாக இருந்தது.
கத்தார் நாட்டின் சிறிய மக்கள் தொகை, மிக அதிமான வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது. 30 லட்சம் பேர் வரை கத்தார் மக்கள் தொகையாக கொண்டிருக்கிறது. அதிலும் 30 லட்சம் பேரில் 10 சதவிகிதம் பேர் அயல்நாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust