Qatar : பெண்களை ஒடுக்கும் பணக்கார நாடு? - கால்பந்தாட்டம் எழுப்பிய கேள்விகள்!

"தாராளவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு கூட ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவைப்படும் பல பெண்கள் உள்ளனர். இது மிகப்பெரிய பிரச்னை." என்று பேராசிரியர் எலினி பொலிமெனோபௌலூ கூறுகிறார்.
கத்தாரில் வாழும் பெண் (Rep)
கத்தாரில் வாழும் பெண் (Rep)Twitter
Published on

கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள கடற்கரையில் பலதரப்பட்ட கலாசாரங்களை சேர்ந்த மக்கள் திரளைக் காண முடிகிறது.

கத்தார் நாட்டில் குளிர்காலத்திலேயே வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். வெப்பத்திலிருந்து மீள அல்லது தங்களை இளைப்பாற்றிக் கொள்ள, பல குடும்பங்கள், நண்பர்கள் கூட்டம் மற்றும் கால்பந்து ரசிகர்கள், தலைநகரின் கடற்கரைப் பகுதிகளில் கூடுகின்றனர்.

இந்த கடற்கரைப் பகுதியில், மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் கத்தார் குடும்பங்களுக்கும் இடையிலான வேறுபாடு தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

கத்தாரில் சுமார் முப்பது லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரத்திற்கும் மேல் இல்லை. இருந்தாலும் அந்நாட்டிலேயே சுமார் 65 சதவீத மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். கத்தார் ஓர் இஸ்லாமிய நாடு. இஸ்லாத்தை ஒட்டியே ஒட்டுமொத்த நாட்டின் அரசும், நிர்வாகமும் இயங்குகின்றன.

ஒருபுறம் பழமைவாத மற்றும் பாரம்பரிய குடும்பங்கள் இருக்கும் கத்தார் நாட்டில், முற்போக்கான மற்றும் தாராளவாத குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன.

கத்தார் நாட்டில் பெண்கள் பங்கு என்ன? அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் முக்கியத்துவம் என்ன?

கத்தார் நாட்டுக் கடற்கரைகளில் சில பெண்கள் வண்ணமயமான ஹிஜாப்களை அணிந்திருக்கும் அதே நேரத்தில், சில பெண்கள் கருப்பு புர்காவால் தங்கள் உடலை முழுமையாக மறைத்துள்ளனர்.

கத்தாரில் வாழும் பெண்கள் ஒருவிதமான ஆண்களைச் சார்ந்த அமைப்பு முறையின் கீழ், ஆண்களின் பாதுகாப்பில் (கவனிப்பு) வாழ்கின்றனர். இதை ஆங்கிலத்தில் Male Guardianship Concept என்று அழைக்கிறார்கள்.

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மைனர்களாகவே இருக்கிறார்களென இதற்கு பொருளென்று ஆண்களைச் சார்ந்து பெண்கள் வாழும் முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

"கத்தார் சட்டத்தில் உள்ள பல மதக்கூறுகள் என்னை மனரீதியாக துன்புறுத்தியதால் நான் தற்கொலை வரை சிந்திக்கத் தொடங்கினேன்" என்று கத்தாருக்கு வெளியே வசிக்கும் ஃபாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கத்தார் வம்சாவளி பெண் கூறுகிறார்.

ஒரு பெண், தன் வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியம் & அவசிய முடிவுகளுக்கு ஆண் பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறுவது கட்டாயம். இந்த அனுமதி உங்களிடம் இல்லையென்றால், கல்லூரியில் சேர, வெளிநாட்டில் படிக்க, திருமணம், விவாகரத்து என எந்த முடிவையும் ஒரு பெண் எடுக்கமுடியாது என்று கூறுகிறார் ஃபாத்திமா.

இதிலும் ஆச்சரியமான, முரண்படும் விஷயம் என்னவென்றால், கத்தாரில் உள்ள எல்லா குடும்பங்களும் இந்த வாழ்கை முறையை கண்டிப்போடு பின்பற்றுவதில்லை.

ஷைமா ஷெரீப், ‘எம்ப்ரஸ் தோஹா’ என்கிற கலாச்சார அமைப்பின் இணை நிறுவனராக இருக்கிறார். கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் வெளியில் இருந்து வரும் மக்களிடையே கத்தார் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது.

கத்தார் ஒரு இஸ்லாமிய நாடு

ஆண் பாதுகாவலரைச் சார்ந்து வாழும் கொள்கை, சட்டத்தின் கீழ் அல்ல, குடும்ப அமைப்பின் கீழ் செயல்படுகிறது என்கிறார் ஷைமா. ஒரு குடும்பம் எவ்வளவு பழமைவாதமானது என்பதைப் பொறுத்து ஆண்களைச் சார்ந்து வாழும் கொள்கை அக்குடும்பத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் ஷைமா கூறுகிறார். மறுபக்கம், கத்தார் பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணரும் தாராளமய சூழலும் கத்தாரில் நிலவுவதை சுட்டிக்காட்டுகிறார் ஷைமா ஷெரீப்.

தோஹாவின் பின் கலிஃபா பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பேராசிரியரான எலினி பொலிமெனோபௌலூ, கத்தார் ஒரு இஸ்லாமிய நாடு என்றும், ஷரியாதான் இங்கு சட்டத்தின் அடிப்படை ஆதாரம் என்கிறார்.

"ஆனால் ஷரியாவின் விதிகள் மிகவும் மாறுபட்டவை, அதைப் பற்றி பல சித்தாந்தங்கள் உள்ளன. சில விதிகள் மிகவும் கண்டிப்பானவை, சில விதிகள் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை, சில விதிகள் நவீன மற்றும் சீர்திருத்தவாதத்தை உட்கொள்ளக் கூடியவை,” என்று அவர் கூறுகிறார்,

கத்தார் அரசியலமைப்பின் 35 வது பிரிவின் கீழ், சட்டத்தின் முன் அனைவரும் சமம்... பாலினம், இனம், மொழி அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது என்கிறது.

கத்தாரில் வாழும் பெண் (Rep)
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

2019 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ஃபாத்திமா போன்ற பல பெண்களின் அனுபவங்கள் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையில், ஆண் பாதுகாவலர் அமைப்பு சட்டப்பூர்வமாக தெளிவாக இல்லை என்று HRW அமைப்பு கூறியிருந்தது.

தந்தை, சகோதரன், கணவன்... போன்றவர்களில் ஒருவர், பெண்ணின் ஆண் பாதுகாவலராக இருக்கலாம். "இது பல சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கலவையாக இருக்கிறது. இதன் கீழ் வயது வந்த பெண்கள் சில முக்கியமான செயல்களுக்கு ஆண் பாதுகாவலரின் அனுமதியைப் பெறுவது கட்டாயம்" என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இருப்பினும் HRW அறிக்கையை குறைபாடுடையது என கத்தார் அரசு கூறியது.

"தாராளவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு கூட ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவைப்படும் பல பெண்கள் உள்ளனர். இது மிகப்பெரிய பிரச்னை." என்று பேராசிரியர் எலினி பொலிமெனோபௌலூ கூறுகிறார்.

"இந்தச் சட்டத்தை எப்படி மாற்றுவது, அது ஏன் இப்படி செயல்படுகிறது, ஏன் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று என் மாணவர்கள் அடிக்கடி விவாதிப்பார்கள். இருப்பினும், பல மாணவர்கள் மிகவும் பழமை வாதிகளாகவும் இருக்கிறார்கள்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பேராசிரியர் எலினி பொலிமெனோபௌலோவின் பல மாணவிகளை நேர்காணல் செய்ய பிபிசி முயன்றது. ஆனால் யாரும் பேசவில்லை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி பற்றி செய்தி சேகரிக்க வந்துள்ள சர்வதேச ஊடகங்களுக்கு, கத்தாரின் உள்ளூர்வாசிகளுடன் பேசுவது சவாலாக மாறியுள்ளது.

ஃபாத்திமாவின் தந்தை ஒரு பழமைவாதி. இதன் காரணமாக ஃபாத்திமாவால் அவருக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ முடியவில்லை.

கத்தாரில் பெண்கள் சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது

இந்த ஆண் பாதுகாவலர் அமைப்பு, பெண்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத கத்தாரின் தாராளவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களால் உணரமுடியாது என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நடைமுறையால் கத்தாரில் பெண்கள் சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது என்கிறார் ஃபாத்திமா.

கத்தாரின் சட்டங்கள் பழமைவாத குடும்பங்களைத் திருப்திப்படுத்தவும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் செயல்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.

"பெண்களின் உரிமைகள் ஒரு மேற்கத்திய கருத்து என்றும் அது இஸ்லாத்தின் மதிப்புகள், மரபுகள், கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் பழமைவாதிகள் நம்புகிறார்கள்"என்றும் அவர் தரப்பிலிருந்து கூறுகிறார்.

இத்தனை விஷயங்களை வெளிப்படையாகச் சொன்ன அதே ஃபாத்திமா தனது கருத்துகள் காத்திரமாக பிரசுரமாவது குறித்து சற்று தயக்கம் காட்டினார், தன் அடையாளம் வெளியே தெரிவதைக் குறித்து கவலைப்பட்டார்.

தன்னைப் பற்றித் தெரிந்தால், தன் குடும்பத்தாரும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பது அவருடைய அச்சத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் கத்தாரோ தங்கள் வைக்கப்படும் விமர்சனங்கள் அடிப்படையற்றது என மறுத்து வருகிறது.

"மேற்கத்திய அமைப்புகள் இங்கு வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் தோஹாவின் கல்வி நகரத்தில் இருக்கும் மாணவர் மோஸ்லி. "இது எங்கள் நாடு. நாங்கள் நம்பும் திசையில் அதை வழிநடத்த எங்களுக்கு உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.

கத்தாரில் வாழும் பெண் (Rep)
உலகக் கோப்பை 2022: பாலைவனத்தை குளிர்ச்சியான மைதானமாக மாற்றும் கத்தார் - எப்படி சாத்தியம்?

இந்த முறை மீது நம்பிக்கை வைத்து அதை பின்பற்றும் பழமைவாத பெண்களும் இங்கு இருக்கிறார்கள் என்பதும் கத்தாரின் மற்றொரு உண்மை.

“கத்தாரில் பழமைவாத பெண்கள் பல முறை என் உடையை விமர்சித்துள்ளனர். என் உடை சரியில்லை எனக் கூறி பல இடங்களுக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்” என்று கத்தாரில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் கொலம்பியா பெண் ஒருவர் கூறினார்.

"அதிகாரிகள் வழக்கமாக அவர்களையே ஆதரிப்பார்கள். பழமைவாதிகள் இதை தங்கள் மதிப்புகளுக்கு எதிரான குற்றமாகப் பார்க்கிறார்கள்" என்று அவர் பகிர்ந்தார். நான் கத்தாரில் வசிக்கிறேன். எனவே அதைப் பற்றி நான் அதிகம் பேசக்கூடாது என்றும் தன் மெல்லிய அச்சத்தை வெளிப்படுத்தினார்.

தற்சார்பு பெற்ற தலைமுறை:

HRW அறிக்கைக்குப் பதிலளித்த கத்தார் அரசு, கத்தாரின் வெற்றி மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மையமாக பெண்களின் அதிகாரம் உள்ளது என்று கூறியது.

"கத்தாரில், அரசியல், பொருளாதாரம் மற்றும் முடிவெடுப்பது உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் முன்னணி பங்கு வகிக்கின்றனர். பாலின சமத்துவத்தின் அனைத்து குறியீடுகளிலும் கத்தார் முதலிடத்தில் உள்ளது. கத்தாரில் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. ஊதிய சமத்துவம் மற்றும் அரசு வேலைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். மேலும், கத்தார் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் பெண்களின் சதவீதமும் அதிகமாக உள்ளது" என கத்தார் பதிலடி கொடுத்துள்ளது.

ஷைமா ஷெரீப் கத்தாரின் அதிகாரம் பெற்ற பெண்களில் ஒருவர். மேலும் அவர் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறார்.

நிறைய பேருக்கு கத்தார் நாடு குறித்து தவறான எண்ணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது ​​அவர்கள் எண்ணம் மாறிவிடுகிறது.

பெண்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இதற்கு சாட்சி. கத்தாரில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஐவி லீக் பல்கலைக்கழகத்தை விட அதிகம்," என ஒரு முக்கிய தரவை முன்வைத்து நம்மை மலைக்கச் செய்கிறார்.

"கத்தார் பெண்கள் மிகவும் புத்திசாலிகள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாலின வேறுபாட்டைக் குறைக்க கத்தாரில் நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கத்தாரில் தாயாகும் பெண்களுக்கு நிறைய ஆதரவுகளும் சலுகைகளும் அளிக்கப்படுகிறது. பல மேற்கத்திய நாடுகளில்கூட இத்தகைய வசதிகள் இல்லை" என்கிறார் ஷைமா.

ஷமா ஷெரீப் ஒரு தொழில்முனைவோர் மற்றும் தொல்லியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். பெண்களின் உரிமைகள் பற்றி மேற்கத்திய ஊடகங்கள் பேசும்போது, ​​கத்தாரின் இந்தப் பக்கத்தையும் காட்ட வேண்டும் என்கிறார் அவர்.

"இங்கு எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்லமுடியாது. மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் இங்கும் தற்சார்பு பெற்ற பல பெண்கள் உள்ளனர். அவர்கள் தலைமையின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை அவர்கள் தள்ளி வைக்கின்றனர்,” என்கிறார் ஷமா ஷெரீஃப்.

கத்தாரில் வாழும் பெண் (Rep)
Qatar : பாலைவனம் டூ 'பணக்கார நாடு' - கத்தார் வளர்ச்சியின் 3 ரகசியங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com