உக்ரைன் ரஷ்யா நாடுகளின் இடையே கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரு நாட்டு இராணுவமும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போரில் உக்ரைனுக்கு உதவுமாறு உலக நாடுகளை உக்ரைன் கேட்டுக்கொண்டது. ஆனால் உலக நாடுகள் நேரடியாகப் போரிடாமல் உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் அளித்து வருகின்றன. அத்துடன் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களையும் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதனால் எரிபொருள் விற்பனையில் ரஷ்யா திணறி வருகிறது. ரஷ்யா அதன் பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ளக் கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது. ஆனால் அதில் சில தடங்கல்கள் இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். சர்வதேச நிதி பரிமாற்றத்தில் ரஷ்யா தடை செய்யப்பட்டிருப்பதால் நிதி பரிமாற்றம் மேற் கொள்வது மற்றும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு வருவது உள்ளிட்டவற்றை எப்படி மேற்கொள்ளலாம் என்பதையும் ஆலோசித்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
அமெரிக்க எண்ணெய் தேவையில் ரஷ்யா 10% அளித்து வந்தது. ஐரோப்பாவின் பல நாடுகள் எண்ணெய் வளத்திற்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் போர் சூழலில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்வது மறைமுகமாக ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாக கருதப்படலாம். அது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா மீது அதிருப்தியை உருவாக்கும்.