உலகின் மிக வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது போர் தொடுத்தது. தொடக்கத்தில் ரஷ்யா வெல்வது போல் ஒரு பிம்பம் தோன்றினாலும், போகப் போக உக்ரைனின் கை ஓங்கத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா வெற்றி பெற்றுக் கையகப்படுத்தி வைத்திருந்த பல பகுதிகளை உக்ரைன் துருப்புகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த சில முக்கிய அப்டேட்களை கீழே கொடுத்துள்ள இணைப்பில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இது மேற்கொண்டு கட்டுரையைப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
இப்படி ரஷ்யா மெல்லப் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்க, உக்ரைன் பல மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியோடு அடித்து ஆடத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவை கிரிமியா பகுதியோடு இணைக்கும் கெர்க் பாலம் (Kerch bridge) தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இதுவரை கிரிமியா பாலத்தை தாக்கியதற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உக்ரைன் கிரீமியா பாலத்தை தகர்த்துவிடுவேன் என ரஷ்யாவை அச்சுறுத்தி வந்தது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
இது வெறும் பாலம் மட்டுமல்ல, கிரிமியா பகுதிக்கு ரஷ்ய துருப்புகள் மற்றும் அதற்குத் தேவையான எல்லாவற்றையும் அனுப்பிவைக்கப் பயன்படுத்தப்படும் பிரதான சாலை இது.
கெர்ச் பாலம் தாக்கப்பட்டது, உக்ரைனின் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என விளாதிமிர் புதின் சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறினார். மேலும் இப்படிப்பட்ட மக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளைத் தாக்கி அழிப்பது ஒரு தீவிரவாத நடவடிக்கைதான் என்றும் கூறினார்.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைனின் தாக்குதலால் திணறிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து, அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் எச்சரித்து வருகிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
ஒருவேளை புதின் சொல்வது போல ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது, உலக பொருளாதாரத்திலும், பூமியின் சூழலியலிலும் மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தாது என்றே சர்வதேச சமூகம் நம்புகிறது.
கிரிமியா பாலம் தாக்கப்பட்ட பின், ரஷ்ய விமானப் படையின் ஜெனரல் செர்ஜி சுரொவிகின் (Sergei Surovikin) உக்ரைன் படை துருப்புகளின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். இவர் சிரியாவில் ரஷ்ய துருப்புகளுக்கு தலைமை தாங்கியவர். அதோடு அலெப்போ (Aleppo) பகுதியை அழித்த குண்டு வீச்சையும் மேற்பார்வை செய்தவர் என்கிற குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது.
கிரிமியா பாலம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா இரவு முழுக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தி சபோரிசியா (Zaporizhzhia) நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஐந்து தனியார் வீடுகள், 40 கட்டடங்கள் சேதமானதாகவும், 17 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் உக்ரைன் ராணுவத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் உலை சபோரிசியாவில் அமைந்திருக்கிறது. இந்த அணு உலை அமைந்திருக்கும் இடம் தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த உலைக்குத் தேவையான மின்சாரம் போரால் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவசரத் தேவைக்கான டீசல் ஜெனரேட்டர் மூலம் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா டுடேவில் செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யா சபோரிசியா மீது கனரக ஆயுதங்களைக் கொண்ட கமிகாஸ் (kamikaze) டிரோன்களை முதல் முறையாகப் பயன்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கொண்டு கிரிமியா பாலம் தாக்கப்படாமல் இருக்க, ரஷ்ய தரப்பு பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அதோடு தன் எரிவாயு குழாய்கள்களை கிரிமியா உடன் இணைக்கும் வழித்தடங்களையும் பாதுகாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ரஷ்ய அதிபர்.
உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ், கெர்சன், லைமென் போன்ற பல முக்கிய பகுதிகளை உக்ரைன் படைத் தரப்பு வென்றெடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், உக்ரைன் சர்வதேச பன்னாட்டு நிதியத்திடம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கேட்டிருந்தது. அதற்கு பன்னாட்டு நிதியக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust