உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உக்ரைன் அதிபர் விளோடமிர் ஜெலென்ஸ்கி-உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “85 மணி நேரமாகப் போராடி வருகிறோம். எங்களைப் படைகளைத் தாண்டி வர முடியாது. எங்கள் ஆயுங்கள் கீழே போட வைக்க முடியாது. இது கடினமான காலம்தான். ஆனால், இதுவும் கடந்து போகும். நாங்கள் முன்பே வெல்லத் தொடங்கிவிட்டோம். ஆக்கிரமிப்பாளர்கள் வீட்டிற்குச் செல்லலாம். நேரம் கடந்துவிடவில்லை,” என்று கூறி உள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக ஆயுதம் வாங்க மற்றும் விநியோகம் செய்ய நிதி வழங்கி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வன், “ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதம் வாங்க, விநியோகம் செய்ய நிதி ஒதுக்கி உள்ளது. ஐரோப்பிய வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது,” என்று கூறி உள்ளார்.
இந்த போரில் எங்களுக்குத் துருக்கியிடம் இருந்து வாங்கப்பட்ட ஆள் இல்லா விமானங்கள் பேருதவியாக இருக்கிறது என உக்ரைன் கூறி உள்ளது. TB2 ட்ரோன்களை உக்ரைன் துருக்கியிடம் இருந்து வாங்கி இருந்தது.
உலகின் பெரிய விமானமான AN-225 ‘மிர்யா’ ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டது என்று உக்ரைன் கூறி உள்ளது. உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிர்ரோ, “அவர்கள் எங்கள் விமானத்தை அழிக்கலாம். ஆனால், எங்கள் கனவுகளை அழிக்க முடியாது,” என்று கூறி உள்ளார்.
ரஷ்யா அழைத்துள்ளது போல நாங்கள் பேச்சுவார்த்தை தயார். ஆனால், பெலாரஸில் அல்ல என உக்ரைன் அதிபர் கூறி உள்ளார். ஆக்கிரமிப்புக்கு பெலாரஸை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. அதனால் அங்குப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இஸ்தான்புல், புடாபஸ்ட் ஆகிய நாடுகளில் வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைன் அதிபர் கூறி உள்ளார்.
உக்ரனைவிட்டு வெளியேறவிடாமல் உக்ரைன் படை தங்களைத் தடுப்பதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களை உக்ரைன் படை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது குறித்துப் பேசிய ஏஞ்சல் எனும் மாணவி, “இது சரியல்ல… இப்படியா வெளிநாட்டு மாணவர்களை உக்ரைன் நடத்தும்?,” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
உக்ரைன் போர் உச்சம் தொட்ட உள்ள சூழலில், தமது உக்ரைன் வீட்டு உரிமையாளரைத் தவிக்க விட்டு வர மாட்டேன் என ஹரியானா மாணவி கூறி உள்ளார். இது தொடர்பாக மாணவி நேஹா, “ நான் இருப்பேனா அல்லது இறப்பேனா என்று தெரியாது. ஆனால், இந்த சூழலில் நான் இவர்களைத் தவிக்கவிட்டு வர மாட்டேன்,” எனக் கூறி உள்ளார்.