உக்ரைன் மீதான ரஷ்யப் போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி இரண்டு மாதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த பகுதியையும் முழுமையாக கைப்பற்றாத ரஷ்ய இராணுவம் இன்று நிச்சயம் மரியுபோல் நகரைக் கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது.
நேட்டோ படையில் உக்ரைன் இணைவதைத் தடுப்பதற்காகப் பிப்ரவரி மாதம் போரில் இறங்கியது ரஷ்யா. ரஷ்யா சில நாட்களிலேயே உக்ரைனை கட்டுக்குள் கொண்டுவரும் என உலக நாடுகள் எண்ணிய நிலையில் ரஷ்யாவிடம் பணியப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி.
ரஷ்யா போரைத் தீவிரப்படுத்திய சில நாட்களில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டது. ஆனால் எந்த நாடும் உக்ரைனுடன் கைகோர்க்கத் தயாராக இல்லை. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்து ரஷ்யாவை அச்சுறுத்தி வருகின்றன உலக நாடுகள். ஒரு கட்டத்தில் உக்ரைன் நேட்டோவில் இணையாது என அறிவித்தார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த போரை மிகப் பெரிய உள்நோக்கத்துடன் இந்த போரைத் துவங்கியிருப்பதாக நிபுணர்கள் கூறினர். தற்போது 2014ம் ஆண்டு உக்ரைனிலிருந்து கைப்பற்றிய க்ரிமியா பகுதியை ரஷ்யாவுடன் நேரடியாக இணைக்கும் வேலையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் படி, ரஷ்ய எல்லை முதல் க்ரிமியா வரையிலான பகுதிகளை இணைப்பதற்கு முக்கிய தடையாக இருக்கும் மரியுபோல் நகரை ரஷ்யா இன்று கைப்பற்ற முடிவு செய்துள்ளது.
ரஷ்ய ஆதரவு பகுதியான கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு நாடான பெலாரஸ் வழியாகத் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய இராணுவம் எதிர்பார்த்திடாத பதிலடியைக் கொடுத்தது உக்ரைன் இராணுவம். கீவ் நகரை அடைந்த ரஷ்ய இராணுவம் அங்குப் பலத்த சேதமடைந்தது. ரஷ்யப் பீரங்கிகளை உக்ரைன் வீரர்கள் எளிதாகத் தாக்கினர்.
இதனால் கீவ் நகரிலிருந்து பின் வாங்கி தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் தாக்குதலை அதிகரித்துள்ளது ரஷ்யா.
இந்த போரினால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து அகதிகளாக போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். ரஷ்ய இராணுவம் உக்ரைன் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏராளமான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உலக பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கிறது
மரியுபோலில் பல இடங்களைக் கைப்பற்றிவிட்ட ரஷ்யப் படையினர் அங்கிருக்கும் உக்ரைன் இராணுவ வீரர்கள் நேற்று மதியத்திற்குள் (ரஷ்ய நேரம்) சரணடைய வேண்டும் எனக் காலக் கெடு விதித்தது. ஆனால், “நாங்கள் சரணடையத் தயாராக இல்லை. எங்களிடம் குறைந்த ஆயுதங்களே உள்ளன. அதிக மன உறுதியிருக்கிறது. எனினும் ரஷ்யப் படை எங்களை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கின்றன. சர்வதேச நாடுகள் எங்கள் உயிரைக் காக்க வேண்டும். இல்லை என்றால் இதுவே உலகிற்கு எங்கள் கடைசி அறிமுகமாக இருக்கும் ” எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் உக்ரைன் தளபதி சொர்ஹைன் வோலைனா. இவருடன் பல உக்ரைனிய வீரர்களும் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்களும் உள்ளனர். மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எனும் எஃகு ஆலையில் இருக்கும் இவர்கள் மீது இன்று ரஷ்யப் படையின் தீவிர தாக்குதல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மரியுபோலில் இருக்கும் மக்களை மீட்பதற்காகச் சிறப்புப் பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைப்பு விடுத்திருந்தது. இந்த பேச்சு வார்த்தை குறித்த ரஷ்யாவின் முடிவு என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com