ஏழு வருட கால போரால் சின்னாபின்னாமாகி இருக்கும் ஏமனுக்கு உதவ சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
ஏமனில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரால் ஏமன் அரபு நாடுகளில் மிகவும் ஏழ்மையாக நாடாகவுள்ளது. பொருளாதாரம் நலிந்துகிடக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளால் பல குழந்தைகள் தினந்தோறும் உயிரிழக்கின்றன.
2011ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரத்தில் ஏமனின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சாலே துணை அதிபர் அப்த்ரப்பா மன்சூர் ஹடியிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் ஏமனின் ஆயுதப்படைகள் சாலேவிற்கே விசுவாசமாக இருந்தன. ஏமனில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் தலைவிரித்து ஆடின. இதுதான் சமயம் என காத்திருந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒரு கட்டத்தில் ஏமனின் தலைநகரை கைப்பற்றினர். இதனால் அதிபர் ஹடி வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.
ஏமனின் அண்டை நாடு சவுதி. சவுதி இரானை தனது எதிரி நாடாக கருதுகிறது. எனவே தனது பக்கத்து நாடான ஏமனை கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள் இரானுக்கு துணை போகக் கூடும் என நினைத்தது.
பிற அரபு நாடுகளுடன் சேர்ந்து ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதலை தொடுத்தது.
போர் என்றால் அதில் அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் எப்படி இருக்கும். அதுவும் சவுதி, அமெரிக்காவின் கூட்டாளி. எனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் சவுதி தலைமையில் சண்டையிட அமைக்கப்பட்ட கூட்டணிக்கு உதவின.
சவுதி பல தாக்குதலை நடத்தினாலும் தலைநகர் சனாவிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை விரட்ட முடியவில்லை. அந்த சமயத்தில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சாலே ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் சாலேவுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் முட்டிக் கொண்டது. சாலே கொல்லப்பட்டார். அவரின் படைகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தோற்கடித்தனர்.
தற்போது வரையில் ஹூதிக்கும் சவுதி கூட்டணிக்கும் கடுமையான போர் நிலவிக் கொண்டிருக்கிறது. சவுதி அரேபியா ஹூதி கிளர்ச்சியாளர்களை நோக்கி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவு வழங்குவதாக சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சுமத்தின. சவுதி எண்ணெய் கிடங்குகளில் தாக்குதல் நடத்தியது ஹூதி. சவுதி தலைமையிலான கூட்டணிக்குள் இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதன்முறையாக கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தியது ஹூதி.
ஏமனை தாக்கிக் கொண்டிருக்கும் அதே சவுதிதான் ஏமனுக்கு நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அதிபர் ஹடி தனது அதிகாரத்தை புதிய அதிபர் கவுன்சிலுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். அதிபர் ஹடிக்கு ஆலோசகராக இருந்தவர்தான் இந்த கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய அதிபர் கவுன்சில் போர் நிறுத்தம் குறித்து ஹூதி கிளர்ச்சியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகே சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏமனுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்தது. போரால் சிதைந்து கிடக்கும் ஏமனுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பில்லையன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது. இது பொருளாதாரம் நசுக்கப்பட்டிருக்கும் ஏமனுக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
தற்காலிகமாக ஏமனில் இரண்டு மாதத்திற்கு போர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் போர் தொடுத்து பொதுமக்களை கொல்லும் சவுதி அரேபியா மறுப்பக்கம் ஏமனுக்கு உதவி கரம் நீட்டியுள்ளது. இதுவே ஒரு பெரும் நேர்மறையான முன்னேற்றம்தான். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போர் நிரந்திரமாக நிறுத்தப்படுவதற்கான நம்பிக்கை ஒளிக்கீற்றாக இது உள்ளது. ஆனால் அது நிஜத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.