இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை. மக்கள் போராட்டம், அமைச்சர்கள் ராஜிநாமா, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு என பல தொடர் நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகி உள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட டிவிட்டர் குறிப்பில், “அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ள சூழலில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு இப்படியான மோசமான சூழலில் சிக்கியதற்குக் காரணம் அதிபர் கோடாபய ராஜபக்ஷேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் என்று குற்றஞ்சாட்டி மக்கள் வீதி இறங்கித் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.
அந்நிய செலவாணி கையிருப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்ததால், அரசாங்கத்தாக் நாட்டின் முக்கிய தேவைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை, குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது. 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த தீவு தேசம், முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்படியான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
ஆட்சியாளர்கள் செய்வது அறியாமல் வெளிநாட்டு உதவிகளை வேண்டி நிற்கின்றனர்.
வட்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வர மத்திய வங்கி முடிவு செய்திருந்தது. இதற்கான அறிவிப்புகள் செவ்வாய்க்கிழமை வரும் என கூறப்பட்ட சூழலில், தேதி குறிப்பிடாமல் இந்த முடிவு ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கை கரன்சியை ஸ்திரப்படுத்துவதற்காக, வட்டி விகிதம் 2 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என ஏசியன் செக்யூரிட்டீஸ் அமைப்பை சேர்ந்த லக்ஷினி ஃபெர்னாண்டோ கூறுகிறார்.
டாலருக்கு எதிரான இலங்கை கரன்சியின் மதிப்பு ஏறத்தாழ 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அமைச்சரவை ராஜிநாமா செய்தது இலங்கை பங்கு சந்தையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், யார் புதிதாக பதவி ஏற்பார் என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும் என்கிறார் லக்ஷினி ஃபெர்னாண்டோ.