இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அதுகுறித்து தகவல்களை இங்கு பார்க்கலாம்!
1. பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று இலங்கை அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்தது. 26 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷேவிடம் வழங்கினர்.
2. அதிபர் கோத்தபாயா, அந்த ராஜினாமாக்களை ஏற்றார். அதோடு, இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து புதிய அமைச்சரவையை அமைக்க வருமாறும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தார்.
3. இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அனைத்துக் கட்சி அமைச்சரவையை நிராகரித்திருக்கிறார். ராஜபக்ஷேக்கள் இருக்கும் அரசில் பங்குவகிக்க மாட்டோம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
4. இதற்கிடையே தற்காலிக அமைச்சகம் பொறுப்பேற்றது. 4 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஆளும் ”இலங்கை பொதுஜன பெரமுனா” கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
5. புதிய நிதியமைச்சராக அலி சேப்ரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சட்டத்துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல்.பெய்ரிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
6. எதிர்க்கட்சிகள் ஏற்கும்பட்சத்தில், இதர அமைச்சர் பதவிகள் எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7. இருப்பினும் இலங்கையின் தற்போதைய சூழலை சமாளிக்கத் தேவையான முக்கிய அமைச்சகங்களான நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள், ஆளும் கட்சியினரே வைத்திருப்பதால், எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சி அமைச்சரவை குறித்து எந்தத் தெளிவும் அரசு கொடுக்கவில்லை.
8. அமைச்சரவை ராஜினாமா செய்தாலும், பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷே, அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் என்பதே இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நிபந்தனையாக இருக்கிறது.
9. அதனால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்களும், எதிர்க்கட்சிகளும் ராஜபக்ஷே குடும்பத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10. இன்று பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷேவின் இல்லத்தை நோக்கி பெரும் திரளான மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீஸாரின் தடைகளால் மக்களை தடுக்க முடியவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றமான அரசியல் சூழல் நிலவுகிறது!