இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் முக்கிய தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
"பிரதமர் தொடர்ந்து செயல்படுவார், மற்ற அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர்," என உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் பல பத்தாண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் மொத்தமாக தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.
நேற்று மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டதாகவும் அடுத்த பிரதமராக தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்தன பதவி ஏற்பார் என்றும் செய்திகள் வெளியாகின.ஆனால், இப்போது மகிந்த ராஜபக்சே பதவியில் தொடர்வார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மஹிந்தவின் அமைச்சர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ராஜிநாமா செய்தவர்களில் பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார், "மக்கள் மற்றும் அரசாங்கத்தை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு" ராஜபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கை உதவும் என்று நம்புவதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தவறான நிர்வாகமே காரணம் என்று கூறி எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள், ராஜபக்ஷ சகோதரர்களின் பதவி விலகலை வலியுறுத்தி வந்தனர்.
ராஜபக்ஷ குடும்பத்தை ராஜிநாமா செய்யக் கோரி வந்த பலரும் சமீபத்திய அமைச்சர்கள் ராஜிநாமா முடிவால் திருப்தியடைவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலரும், 'அமைச்சர்களின் ராஜிநாமா நடவடிக்கை அர்த்தமற்றது' என்று கூறுகின்றனர்.
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியிடம் அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்ட உள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.