பயணம் தான் மனிதனை இத்தனை காலமாக வளர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை மனிதன் தான் வாழ்ந்த பகுதியிலேயே அடைந்து கிடந்திருந்தால், இன்று மனித இனம் கண்டிருக்கும் வளர்ச்சியை கண்டிருக்க முடியாது.
அப்படி தங்களின் பிறந்த அல்லது பூர்விகமான பிலிப்பைன்ஸ் நாட்டை விடுத்து, செயின்ட் மலோ என்கிற பகுதியில் குடியேறி, அமெரிக்கா என்கிற நாட்டுக்கே பல புதிய உணவுக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய "மனிலா மென்" கதையைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
இன்றைய அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், செயின்ட் பெர்னார்ட் பரிஷ் பகுதியில் அமைந்திருக்கும் லேக் போர்னெவை (Lake Borgne) ஒட்டி அமைந்திருக்கிறது செயின்ட் மலோ என்கிற கிராமம். இது ஒரு காலத்தில் லூசியானாவின் கடல் உணவுப் போக்கையே மாற்றியமைக்கும் விதத்தில் சுறுசுறுப்போடு இயங்கி வந்தது.
18ஆம் நூற்றாண்டின் மத்தியில் (1760க்குப் பிறகு) அமெரிக்காவுக்கு வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள், அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழத் தொடங்கிய இடமும் அது தான். எனவே செயின்ட் மலோவை முதல் ஆசிய அமெரிக்க குடியேற்றப் பகுதி என்றழைக்கிறார்கள்.
இந்த பிலிப்பைன்ஸ் மக்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? என்கிற பல அடிப்படை கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் ஏதும் இல்லை. ஸ்பானிய அடிமைப் பிரச்னைகளில் இருந்து தப்பி வந்ததாக பல வலைதளங்கள் சொல்கின்றன.
இப்படி அமெரிக்காவில் குடியேறி வாழத் தொடங்கிய பிலிப்பைன்ஸ் மக்களை "மனிலா மென்" என்று அழைத்தனர். ஸ்பெயின் நாட்டவர்களிடமிருந்து தப்பி வந்த பிலிப்பைன்ஸ் மக்கள், செயின்ட் மலோவிலேயே தங்களுடைய மீன் சார்ந்த தொழிலைச் செய்யத் தொடங்கினர்.
இந்த மனிலா மென் என்றழைக்கப்படும் மக்கள், இயற்கையாகவே மீன் பிடித் தொழிலில் நல்ல திறனும், கப்பல் கட்டுவதில் நல்ல அறிவோடும் இருந்தனர்.
அவர்கள் கட்டமைக்கும் படகுகள் & கப்பல்கள் அப்போது அமெரிக்காவில் இருந்த மீன்பிடிப் படகுகளில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக இருந்தது என்கிறது பிபிசி வலைதளம்.
இவர்கள் லூசியானாவுக்கு வருவதற்கு தட்ப வெப்பநிலையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவிய காலநிலைக்கும், லூசியானா மாகாணத்தில் நிலவிய காலநிலைக்கும் பெரிய ஒற்றுமை நிலவியதாகவும், ஆகையால் தான் மனிலாமென் மக்கள் லூசியானாவைத் தேர்வு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த லூசியானா மாகாணத்துக்கே காய வைத்த ஷ்ரிம்ப் (Dried Shrimp) உணவை அறிமுகப்படுத்தியது இந்த மனிலா மென் மக்கள்தான்.
18 & 19 நூற்றாண்டுகளில் குளிர்சாதன வசதிகள் பெரிதாக உருவெடுக்காத காலத்தில் அவர்கள் அறிமுகப்படுத்திய உணவு அமெரிக்கர்கள் மத்தியிலேயே சக்கை போடுபோட்டது. இன்றளவும் லூசியானா மாகாணத்தில் காயவைத்த ஷ்ரிம்புகள் ஒரு முக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது.
உள்ளூரில் காயவைத்த ஷ்ரிம்புகளின் வெற்றியைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். 1870களில் லூசியானா மாகாணத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஷ்ரிம்புகளைக் காய வைக்கும் தளங்கள் உருவாயின என்றால், காய வைத்த ஷ்ரிம்ப் தொழில் எந்த அளவுக்கு பெரிதாக வளர்ந்து இருக்கும் என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மனிலாமென் மக்கள், சக அமெரிக்கர்களைப் போல செங்கல் சிமெண்ட் வைத்து உறுதியான நிலப்பகுதியில் வீடுகளைக் கட்டவில்லை. மாறாக செயின்ட் மலோ பகுதியில் இருந்த சதுப்பு நிலப்பரப்பில், வலுவான மரக் கம்புகளை நட்டு, அதன் மீது வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். அதை bahay kubo என்றழைத்தனர். இவர்கள் வாழ்ந்து வந்த பகுதியை மிதக்கும் கிராமம் என மற்றவர்கள் அழைத்தனர்.
இப்படி ஒரு இடம் இருந்ததாகவும், அப்பகுதியில் மனிலா மென் மக்கள் வாழ்ந்ததாகவும் ஹார்பர்'ஸ் வீக்லி என்கிற பத்திரிகையில் 1883ஆம் ஆண்டு கட்டுரை ஒன்று வெளியானது மீண்டும் உறுதி செய்கிறது.
செயின்ட் மலோவில் வாழ்ந்து வந்த மனிலா மென் சமூகம், ஒரு தற்சார்புச் சமூகமாக வாழ்ந்து வந்தது. அவர்கள் தங்களுக்கென தனி பள்ளிகள், கடைகள், சமூக & மத ரீதியிலான அமைப்புகளை வைத்திருந்தனர்.
என்ன தான் மனிலா மென் சமூகம் அமைதியாக தங்களுக்குள் வாழ்ந்து வந்தாலும், வெள்ளை இனவாத பிரச்னையை அவர்களும் சந்திக்க வேண்டி வந்தது. போதாக்குறைக்கு அவ்வப்போது பெரிய இயற்கைப் பேரிடர்களும் வந்து போயின. குறிப்பாக 1915ஆம் ஆண்டு வந்த மிகப்பெரிய சூறாவளிப் புயல் செயின்ட் மலோவை கிட்டத்தட்ட அழித்துவிட்டது எனலாம்.
19ஆம் நூற்றாண்டின் கடைசி காலம் & 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே, மனிலா மென் சமூகத்தைச் சேர்ந்த பலரும், அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கி இருந்தனர். மனிலா மென் சமூக மக்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் பலரும் லூசியானா மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்று செயின்ட் மலோவில் மிக மிகக் குறைவான மக்களே வசித்து வருகிறார்கள். இப்போதும் லூசியானாவின் கலாச்சார மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் மனிலா மென் சமூகத்தினருடைய பங்களிப்பும், பிரதிபலிப்புகளும் நிறையவே இருக்கின்றன. இது ஒரு தனி மனிதனின் கதையல்ல, ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் கதை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இனி காய வைத்த ஷ்ரிம்புகளைச் சாப்பிடும் போது மனிலா மென்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust