தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் இருக்கலாம் என்று தெரியவந்ததாக தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் தெரிவித்தது.
கீழடியில் கிடைத்த சில பொருட்களை அமெரிக்க ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அப்பொருட்கள் சுமார் கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வில் தெரிய வந்தது. கீழடியில் ஒரு நகர நாகரிகமே கூட இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க… நியூசிலாந்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மணியின் தலைப்பகுதி மட்டும் இருப்பதாக செய்தி ஒன்றில் பார்க்க முடிந்தது.
வில்லியம் கொலென்சோ (William Colenso) என்பவர், நியூசிலாந்தில் உள்ள வடக்கு தீவுக் காடுகளில் மவுரி கிராமத்தில் வாழும் மக்கள், ஒரு வித்தியாசமான பானையில் உருளைக்கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
சுமார் 6.5 இன்ச் உயரமும், 6 இன்ச் அகலமும் கொண்ட அதை உற்றுப் பார்த்த வில்லியம் கொலென்சோ, அதில் ஏதோ ஒரு மொழி சம்பந்தப்பட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.
ஒரு காஸ்ட் அயர்ன் பாத்திரத்துக்கு, இந்த கணமான உலோக பானையை பண்டமாற்று செய்து வாங்கி வந்தார்.
1899ஆம் ஆண்டு வில்லியன் கொலென்சோ இறப்பதற்கு முன், நியூசிலாந்தில் உள்ள காலனியல் மியூசியத்துக்கு அப்பொருளைக் கொடுத்தார். அது தான் இன்று வெல்லிங்டனில் உள்ள டி பாபா டொங்கரெவா (Te Papa Tongarewa) அருங்காட்சியகம் என்றழைக்கப்படுகிறது.
காலப் போக்கில் அது ஒரு மணி என்றும், அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் நம் தமிழ் மொழி எழுத்துக்கள் என்றும் அடையாளம் காணப்பட்டது.
ஆனால் கடந்த பல தசாப்த காலமாக, அந்த மணி எப்படி நியூசிலாந்துக்கு வந்தடைந்தது, யாருடைய மணி அது? என பல கேள்விக்கு எவராலும் விடை காண முடியவில்லை.
சிங்கப்பூரில் உள்ள இந்தியன் ஹெரிடேஜ் சென்டர் அமைப்பைச் சேர்ந்த நலினா கோபால் 2019ஆம் ஆண்டு அந்த மணியைப் பார்த்தார். அது தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினார்
அவர் மனதில், இந்த மணியின் பொருத்தமின்மைகள் தொடர்பாக அதிக கேள்விகள் எழுந்தன. நியூசிலாந்து நாட்டுக்கு தமிழ் கடலோடிகள் வந்து போனதாகவோ, வர்த்தகம் மேற்கொண்டதாகவே பதிவு ஏதும் இல்லை.
முதலில் இந்த மணி எந்த காலத்தைச் சேர்ந்தது என கண்டுபிடிக்க முற்பட்டார். பலரும் அந்த மணி மிகப் பழமையானது என்று கருதி வந்த போது, அதிலிருந்த தமிழ் எழுத்துக்களை ஆராய்ந்தார். அதோடு, சில அகழ்வாய்வாளர்களின் உதவியோடு, அந்த மணி 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தார்.
அதன் பின், அந்த மணியில் எழுதப்பட்டு இருப்பது என்ன? என்கிற கேள்விக்கு விடை தேடத் தொடங்கினார். “மொஹிதீன் பக்ஷ் உடைய கப்பலின் மணி" என்று பொருள்படும் வகையில் அந்த மணியில் எழுதப்பட்டிருந்ததாக சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
அப்போது தான் ஜே ராஜா மொஹம்மத் என்கிற ஆய்வாளரின் பணிகள், நலினா கோபாலின் கண்ணில் பட்டன. ராஜா மொஹம்மதும் 1980கள் முதல் அந்த மணி தொடர்பாக ஆராய்ந்து வருவது தெரிய வந்தது.
இதே ராஜா மொஹம்மத் தான், மொஹிதீன் பக்ஷ் என்பது ஒரு நபரின் பெயர் அல்லாமல் ஒரு கப்பலின் பெயராக இருக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறி வந்தார்.
நலினா கோபாலும், ராஜா மொஹம்மதும் இணைந்து பல்வேறு பதிவுகளை அலசி ஆராயத் தொடங்கினர். எல்லா பதிவுகளும் காகிதங்களில் இருப்பவை. எனவே பல மணி நேரங்களை இருவரும் செலவிட வேண்டி இருந்தது. இவர்களுடைய ஆய்வில் ஓர் எதிர்பாராத விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் இருந்த பல இஸ்லாமிய வணிக சமூகங்களும் மொஹிதீன் பக்ஷ் (ஒரு ஞானியின் பெயர்) என்பவரைத் மதித்து நடந்ததாகக் கண்டுபிடித்தனர்.
அதோடு தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற பல கப்பல்களுக்கு மொஹிதீன் பக்ஷ் என்கிற பெயர் பொதுவானது என்பதையும் கண்டுகொண்டனர். இந்த ஞானியின் பெயரை வைத்தால், கப்பல் பாதுகாப்பாக இருக்கும் என்று கடலோடிகள் நம்பியதாக கோபால் கூறுகிறார்.
கடைசியில், அந்த மணியில் “மொஹிதீன் பக்ஷ் உடைய, கப்பல் உடைய மணி" என்று எழுதப்பட்டு இருப்பதாக தெளிவுபடுத்தினார் நலினா கோபால்.
ஆனால், எந்த ஒரு தமிழ்நாட்டுக் கப்பலையும், நியூசிலாந்தோடு இணைக்க முடியவில்லை. அதே போல எந்த கப்பல் இந்த மணியை பயன்படுத்தியது என்கிற கேள்விக்கும் விடை தெரியவில்லை.
இப்போதும் அந்த மணி, நியூசிலாந்தின் வெல்லிங்டன் பகுதியில் உள்ள டி பாபா டொங்கரெவா (Te Papa Tongarewa) அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust