எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கடந்த ஜூன் 21ஆம் தேதி அபுதாபி நகரத்தில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மாபெரும் யோகா பயிற்சி நடைபெற்றது.
சுமார் 5,000 பேர் இப்பயிற்சியில் பங்கெடுத்தனர். அதில் அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் (Sheikh Nahyan bin Mubarak Al Nahyan), அமீரகத்துக்கான இந்தியத் தூதர் சஞ்ஜெய் சுதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இந்தியன் பீபிள்'ஸ் ஃபாரம், அபுதாபி விளையாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தன.
இன்று நாம் பல தேசங்கள், கலாச்சாரங்கள், மதங்கள், இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கூடியுள்ளோம். இது ஒரு பன்முகத்தன்மை கொண்ட அருமையான நாடு. இந்த கொண்டாட்டகரமான நிகழ்வுகள் நமக்கிடையில் இருக்கும் கலாச்சார ரீதியிலான வித்தியாசங்களைக் குறைக்க ஒரு பாலம் போல் செயல்படுகிறது. சகிப்புத்தன்மைக்கான சக்தியைக் கண்டுபிடிக்க உதவுகிறது என்று பேசினார் அல் நஹ்யான்.
மேலும், உலகுக்கு யோகா என்கிற ஒரு அருமையான விஷயத்தைக் கொடுத்ததற்கு, இந்தியத் தேசத்துக்கு நன்றியைத் தெரிவித்தார்.
அரபு அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் இருக்கும் நட்பின் குறியீடாக இந்த நாளைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்கிறோம். எல்லோருக்குமான இந்த உலகை இன்னும் மேம்பட்ட இடமாக மாற்றுவதற்குத் தேவையான வலிமையை வெளிக்கொணரும் போது, நம் உறவை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறேன் என்றும் கூறினார் அமைச்சர் அல் அஹ்யான்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எட்டாவது ஆண்டு நிகழ்ச்சியில் 'மனிதத்துக்கான யோகா' என்கிற தலைப்பில் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டது.
யோகாவினால் கிடைக்கும் நன்மையைக் கருதி உலகம் முழுக்க பலரும் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளனர். சர்வதேச யோகா தினம், யோகாவை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்கிறது. யோகா உடலையும் மனதையும் சமநிலைப்படுத்துகிறது. பாலினம், நம்பிக்கைகள், தேசத்தைக் கடந்து யோகா மனிதர்களிடம் சமநிலையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்று பேசினார் அமீரகத்துக்கான இந்தியத் தூதர் சஞ்ஜெய் சுதீப்.
அபுதாபி நகரத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுருக்கமாக அனுமதி இலவசம். கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக டி ஷர்ட்டுகள் மற்றும் யோகா மேட்களையும் வழங்கினர். கலந்து கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நுபுர் ஷர்மா, இஸ்லாத் மதத்தின் இறைத்தூதர் மொஹம்மத் நபிகளைக் குறித்து மிக மோசமாகப் பேசியது சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.
கத்தார், இரான், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளும் அதற்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தன. அந்த கசப்பான நிகழ்வுகளைக் கடந்து, தற்போது அமீரகத்தின் அமைச்சர் ஒருவரே யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அமீரகம் - இந்தியாவுக்கு இடையிலான ராஜ்ஜிய உறவுகளில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் சில வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust