நமது உடைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வகை வகையாக, வித விதமாக பயன்படுத்துகிறோமோ, அதே போல குடைக்கும் முக்கியத்துவம் உண்டு உங்களுத்தெரியுமா? மழை வந்தால் மட்டுமே குடை நியாபகம் வரும் பெரும்பாலானோருக்கு. சிலர் மட்டுமே வெயிலுக்கு குடை பிடிப்பதுண்டு. வாருங்கள் குடை தினமான இன்று குடையில் பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
எகிப்திய நாடுகளில் இவை பாரசோல் என்ற பெயரில் 3500 வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டு வந்தது. பாரசோல் என்பது வெயிலில் உபயோகப்படுத்தப்பட்ட குடை. அந்தக் காலத்தில் எகிப்திய பிரபுக்கள், அரச பரம்பரை மற்றும் மதகுருக்களின் பிரத்தியேக உபயோகப் பொருளாக , ஒரு மரியாதைக்கு உரியவருக்கான பொருளாகவே குடை பார்க்கப்பட்டது. குடைகள் வைத்திருப்போருக்கு தனி மரியாதையும், குடைபிடிப்பவர்கள் என்று தனியே நியமிக்கப்பட்டதும் உண்டு. வெயிலிலிருந்து காப்பதற்காக அமைக்கப்பட்ட பாரசோல்கள், கொஞ்சம் கொஞ்சமாக மழைக்கான சேவைப் பொருளாக சீனர்களால் பதினோராம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது. இதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, ஒருவரின் பண நிலையைக்காட்டும் விதமாகக் குடைகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டன. சீன அரசரின் குடையில் நான்கு அடுக்குகள் அமைக்கப்பட்டன. அரசாங்கத்தில் உள்ளவரின் நிலைக்கு ஏற்ப இந்த அடுக்குகள் குறைக்கப்பட்டன.
17-ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள், உயர்தட்டு மக்களின் அடையாளமாக குடைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆங்கிலேய வியாபாரி ஜோனாஸ் ஹான்வே என்பவர் 1750- களில் குடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார். ஹான்வே குடைகளை விற்பனை செய்யும் போது பல எதிர்ப்புகளும் பல வரவேற்புகளும் வந்தது. ஏனென்றால் மன்னர்கள், உயர் வகுப்பினர் மட்டுமே குடைகள் பயன்படுத்த வேண்டும் என்ற விதி முறைகள் எல்லாம் அப்போது வைத்திருந்தார்கள். ஆனால் உலகின் முதல் அதிகாரப்பூர்வ குடை கடை ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் லண்டனில் 1830-களில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும் அந்தக் கடை லண்டனில் இயங்கி வருகிறது.
1852-ம் ஆண்டில் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் குடைகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் தற்போதைய வடிவத்தை வடிவமைத்தார். இவர் இங்கிலீஷ் ஸ்டீல்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
வெண்கொற்றைக்குடையின் கீழ் ஆட்சி நடத்திய பண்டைய தமிழர்கள் என்ற வரிகளை படித்திருப்போம். முற்கால பல்லவ, சோழ, சிற்ப படைப்புகளில் நிச்சயமாக குடை வடிவம் இருக்கும். அதை வைத்தே அதன் காலத்தை அறிந்து கொள்ள முடியும். தமிழர்களும், சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்தியிருப்பதை பறைசாற்றுகின்றன வரலாற்று தரவுகள்.
எகிப்தும் குடையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அங்கு மன்னர்கள் மட்டுமே குடைகளை பயன்படுத்த உரிமை இருந்தது. கிமு 3-ம் நூற்றாண்டில் பண்டைய ரோமில் சூரிய கதிர்களிடம் இருந்து காத்துக் கொள்ள பெண்கள் மட்டுமே குடையை பயன்படுத்தினர். அம்பர்லா என்ற வார்த்தை லத்தீன் மொழி சொல்லான “ UMBRA” என்ற சொல்லிலிருந்துதான் வந்தது.
ஐரோப்பாவில் ஆரம்ப காலத்தில் திமிங்கிலத்தின் எலும்புகளால் உருவாக்கப்பட்டது. மரங்களாலும் கூட குடைகள் வடிவமைக்கப்பட்டன.
18ம் நூற்றாண்டு காலங்களில் குடை பெண்களுக்கான ஒரு அலங்காரப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டது. அதன் பிறகு ஜோனஸ் ஹான்வே என்ற ஆண் ஒருவர் நவீன குடைகளை பயன்படுத்த ஆரம்பித்தார். இது ஒரு வரலாற்று செய்தியாகவே பதிவிடப்படுள்ளது. இந்த ஆங்கிலேயர் பொது இடங்களுக்குச்செல்லும் போதும் குடைகளை எடுத்துச்செல்லும் பழக்கத்தை மேற்கொண்டார். அதன் பிறகே ஆண்களும் குடை எடுத்துச்செல்லும் பழக்கம் வந்தது. அவரை பார்த்த பிறகே உலகில் பல ஆண்களும் குடைகளை ஒரு உபயோகிக்கும் பொருளாக பயன்படுத்தினர். தற்போது உள்ள நவீன குடைகள் கிரேக்க மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட குடைகளின் மாதிரி வடிவத்தை ஒத்திருக்கின்றன.
குடைகளை, தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட பயன்படுத்தப்படலாம். முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். நவீன கால குடை வெளிப்புறங்களில் டெஃப்ளான் பூசப்பட்டிருக்கும், அவை அவற்றின் மேல்பகுதியில் நீர்ப் புகாத வகையில் தடுக்கிறது. நவீன குடைகள் பெரும்பான்மையானவை சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. சீனாவின் ஒரு நகரமான ஷாங்யுவில் ஆயிரம் குடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.
இப்படி பல்வேறு வகையான வரலாறுகள் கொண்ட குடையின் சிறப்புகளை நினைவு கூறும்ம் போது, மழையில் நாம் மறந்து வைத்து விட்டு வந்த குடைகள் நியாபகத்திற்கு வரும் என்பது நிதர்சனமான உண்மை. சரி, மிகப்பழமையான குடை என்னவாக இருக்கும் என்று யோசித்தால், கிருஷ்ணர் கோவர்த்தன மலையையே குடையாக தூக்கி, மழையிலிருந்து மக்களை காத்தார் அல்லவா, அதுவே முதல் குடையாக இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது. மழையோ வெயிலோ எதுவாக இருந்தாலும் நம்மை காத்த குடைக்கு ஒரு நன்றி சொல்லிடுவோம் இந்த குடை தினத்தில்.