கடந்த மாதம் 24ம் தேதி உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இரண்டாம் நாள் தாக்குதலின் போது “ரஷ்யத் தாக்குதலில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்” என உக்ரைன் பிரதமர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய போது, ருமேனியா அருகில் உள்ள பாம்பு தீவில் ரஷ்யப் போர்க் கப்பல் படைகளுக்கு அஞ்சாமல் வீர மரணம் அடைந்த வீரர்கள், “உக்ரைனின் ஹீரோக்கள்” என்றும் பேசினார்.
அவர்கள் பாம்பு தீவிலிருந்த போது ரஷ்யக் கப்பலிலிருந்து, “உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையுங்கள்; இல்லை என்றால் கொல்லப்படுவீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்தனர். அதற்கு உக்ரைன் தரப்பில், “Go and F**k Yourself” என்று பதிலளிக்கப்பட்டது. இந்த உரையாடலை வீடியோவாக வெளியிட்டார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி. அந்த வீடியோ உலகம் முழுவதும் பகிரப்பட்டது.
13 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக உலகில் அனைவரும் நம்பிய நிலையில் அவர்கள் உயிருடன் இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த வெள்ளி அன்று பாம்புத் தீவில் இருந்த 82 உக்ரைனிய வீரர்களும் முன்வந்து சரணடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் சரணடைந்த பாம்பு தீவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பேட்டி அளித்ததை ஜூலியா கானின் என்ற பத்திரிகையாளர் ட்வீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில், “பாம்பு தீவில் ஒரு கடல் படை இருப்பது உக்ரைனின் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலென்ஸ்கிக்கு தெரியாது” என்று சிப்பாய் குற்றம் சாட்டியதாக திருமதி கானின் கூறியுள்ளார்.