உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இந்த மூன்றுமே ஒரு தனிமனிதனுக்கு நல்லபடியாகக் கிடைத்துவிட்டாலே, அவர்கள் சமூகத்தில் ஓரளவுக்கு நிலையாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் சமீபத்தைய பணவீக்கம் பல நடுத்தர மக்கள், தொழிலாளிகள் மற்றும் ஊழியர்களின் மதிய உணவைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாகக் கோடிக் கணக்கான மக்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஓரளவுக்கு கொரோனா வைரஸ் எல்லாம் கட்டுக்குள் வந்த பின், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் மெல்ல மீண்டும் ஆலைகளுக்கும் அலுவலகத்துக்கும் செல்லத் தொடங்கினர்.
பல மாதங்களுக்குப் பின் திரும்பிச் சென்ற ஊழியர்களுக்கு மதிய உணவு தொடங்கி பேருந்து, பைக், கார் பயணங்கள் வரை ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதன் பெயர் விலைவாசி.
உதாரணத்துக்கு 30 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த லெமன் சாதம் 40 ரூபாய் ஆக அதிகரித்து இருந்தது. மிக இளம் வயதுக் குழந்தைகளைப் பகல் நேரத்தில் பாதுகாப்பாக விட்டுச் செல்லும் டே கேர் மையங்கள், போக்குவரத்து என எல்லாவற்றின் விலையும் கட்டணங்களும் கணிசமாக அதிகரித்திருந்தன.
அமெரிக்காவில் அலுவலகத்துக்குச் செல்லும் பலரும் மதிய உணவை வெளியே கடைகளில் சாப்பிடுவர். ஆனால் இன்று இந்தியக் கலாச்சாரத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளுக்கு மட்டும் ஏதாவது சட்டென ஆரோக்கியமான உணவைச் சமைத்துவிட்டு, இருவருமே வெளியில் மதிய உணவைச் சாப்பிடும் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது, ஊழியர்கள் அலுவலகத்துக்குச் செல்வது அதிகம் செலவு பிடித்த விஷயமாக மாறியுள்ளது. பணியாளர்களுக்குக் கிடைக்கும் சம்பள உயர்வு, இந்த விலைவாசி ஏற்றத்துக்கு ஒத்து அதிகரித்தால் பிழைத்தார்கள், இல்லையெனில் பற்றாக்குறை வாழ்கையைத் தான் நடத்த வேண்டி இருக்கும்.
உணவகங்களையும் இதில் குறை சொல்ல முடியாத அளவுக்கு அவர்களும் விலைவாசி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அதன் எதிரொலியாகத் தான் உணவு பதார்த்தங்களின் விலை அதிகரித்துள்ளது. விநியோகச் சங்கிலி சிக்கல்கள், சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் சரக்கு டெலிவரி சிக்கல்கள், உணவுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு, மாவு போன்ற மூலப் பொருட்களின் விலை ஏற்றம், ஊழியர்களின் சம்பளம்... என ஒரு பெரிய பட்டியலையே உணவு பதார்த்தங்களின் விலை ஏற்றத்துக்கு உணவு விடுதிகள் காரணமாகக் கூறுகின்றன.
சமீபத்தில் ஸ்கொயர் ரிசர்ச்சர்ஸ் என்கிற அமைப்பு அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வில், உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்கர்கள் கருதுவதாகக் கண்டுபிடித்துள்ளது.
அந்தந்த நாட்டின் பிரபல மதிய உணவுப் பதார்த்தங்களான சாப்பாடு (மீல்ஸ்), சாண்ட்வெச்கள், ரேபஸ் போன்றவற்றின் விலை அதிகரித்திருப்பதை ஆங்கிலத்தில் Lunchflation என்கிறார்கள்.
அமெரிக்கா மட்டுமின்றி தென் கொரியா (ஏப்ரல் 2022-ல் 6.6%) போன்ற நாடுகளிலும் உணவுப் பணவீக்கம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (Consumer Price Inflation) கடந்த ஜூன் 2022-ல் 7.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் போதாக்குறைக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் இந்திய அரசு ஜிஎஸ்டி விதித்திருப்பது சற்றே வருத்தமான விஷயம் தான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust