ஒருவழியாக, 700 ஆண்டுகாலமாக நீடித்துவந்த ’கறுப்புச்சாவுகள்’ மர்மத்துக்கு ஆராய்ச்சியாளர்களின் அருஞ்செயலால் விடை கிடைத்திருக்கிறது.
கெட்டுப்போன உணவோ நச்சுச் சாராயமோ உட்கொண்டு ஒரே ஊரில் இத்தனை பேர் பலி எனச் செய்தி வந்தாலே, மனது பக்பக் என அடித்துக்கொள்ளும். துக்கம் தொண்டையை அடைக்கும்.
நாடு நாடாக, கண்டம் கண்டமாக ஆயிரக்கணக்கில் மனிதர்கள் கொள்ளை நோய் தாக்கிச் செத்துப்போவது என்றால்...!
அப்படியொரு காலகட்டம்தான், 1330களின் கறுப்புச்சாவுகள் கொள்ளை நோய் கட்டம்!
வரலாற்றின் பக்கங்களில் கறுப்புச்சாவுகள் எனக் குறிப்பிடப்படும் - அந்தப் பெருந்துயரத்தின் தொடக்கம் எது என வரலாற்றியலாளர்கள் தடுமாறிக்கொண்டு இருந்துவந்தனர். தீவிரமான ஆய்வின் பலனாக, மத்திய ஆசியாவில்தான் அது ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
1330-களின் மத்தியில், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதி எனப் பல கண்டங்களிலும் பரவி, பேரளவிலான மனிதர்களை காலிசெய்தது, கறுப்புச்சாவு எனப்படும் பெருந்தொற்று.
இப்போது கொரோனா எப்படி எந்தக் கண்டத்தையும் விட்டுவைக்காமல், எந்த இனத்தவர், எந்த வகுப்பினர், எந்த வயதினர் என இல்லாமல், இந்த உலகத்தையே படுத்தி எடுத்துவிட்டதோ, இதைப்போலவே அல்லது இதற்கும் மேலாகவே மனிதக் குலத்தை ஒருவழி பண்ணிவிட்டது, கருஞ்சாவு பெருந்தொற்று.
அந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுப் பலியானவர்களின் எண்ணிக்கை, பல பத்து இலட்சங்கள்.
நவீன அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், மருந்தியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தை ஒப்பிட, எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், பெருந்தொற்று எந்த அளவுக்கு சிகிச்சை இல்லாமல் மக்களை அவதிக்கு உள்ளாக்கி இருக்கும் என யோசித்துப்பார்க்க முடியும்.
பெருவீக்கத்தை உண்டாக்கும் இந்தக் கருஞ்சாவுப் பெருந்தொற்று குறித்து நீண்ட காலமாகவே ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் மட்டுமல்ல தொல்லியலாளர்களும் இதில் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால், இதன் தொடக்கம் பற்றி யாருக்கும் திட்டவட்டமான, உறுதியான சான்று கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போதைய கிர்கிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள இசிக்-குல் ஏரியின் அருகில் உள்ள இரண்டு இடுகாடுகளில் புதிய சான்று கண்டறியப்பட்டது. ஸ்டிர்லிங் பல்கலைக்கழக வரலாற்றியல் பேராசிரியரான டாக்டர் பிலிப் சிலாவின் தலைமையிலான குழுவின் இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னர், 1330களின் கருஞ்சாவுகள் பற்றிய மர்மத்தை ஆராய்வதில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
அதையடுத்து, இது தொடர்பாக ஆராய்வதற்கு உலக அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த இரண்டு இடுகாடுகளில், பொது ஆண்டு 1248 க்கும் பொது ஆண்டு 1345-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த- மொத்தம் 467 கல்லறை நடுகற்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் 118 நடுகற்கள் இன்னும் குறிப்பாக, 1338 அல்லது 1339ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கான காரணம் பற்றி டாக்டர் சிலாவின் கண்டறிய முற்பட்டார். இறப்புக்கான காரணமாக, சிரிய மொழியில் மவ்தானா எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது, பெருங் கொள்ளை நோய் என்று கல்லறைக் கற்களில் பதியப்பட்டிருந்ததைக் கண்டார்.
அந்த இடங்கள் இரண்டும் 1880-களில் அகழ்வாய்வு செய்யப்பட்டன. கல்லறையின் அகழ்வுத் தளத்திலிருந்து 30 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன.
அகழ்வாய்வில் தீவிரமாகச் செயல்பட்ட அக்குழுவினர், அந்தக் கல்லறையின் குறிப்பிட்ட காலகட்ட மனிதப்புதைவுகளைத் தேடி அலசினர்.
ஜெர்மனியைச் சேர்ந்த டுபிங்கன் பல்கலைக்கழகத்தின் முனைவர் மரியா ஸ்பைரோவும் பரிணாமத் தொல்லியலுக்கான மாக்ஸ் பிளாங்க் கல்விக்கழகத்தின் பேராசிரியர் ஜொகன்னஸ் கிரௌஸ் ஆகியோர் அடங்கிய மற்ற டி.என்.ஏ. வல்லுநர் குழுவினராலும் அதே இடங்களில் மேற்கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
அங்கு எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பல் மரபணுவை அவர்கள் ஆராய்ச்சி செய்துபார்த்தனர். அதில், பிளேக் கொள்ளைநோய்க்குக் காரணமான எர்சினியா பெஸ்டிஸ் எனப்படும் பாக்டீரியத்தை அவர்கள் கண்டறிந்தனர். அந்தக் கல்லறைகளில் புதைக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களில் அது இடம்பெற்று இருந்தது.
அந்தக் குறிப்பிட்ட பாக்டீரியம்தான் பெருவீக்கக் கொள்ளைநோயை உண்டாக்கக்கூடியது என ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தது. அதே பாக்டீரியத்தை மரபணு ஆய்வு செய்ததில், அதன் ஒரு பகுதிதான் (சடலங்கள் புதைக்கப்பட்ட) சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் கருஞ்சாவுகள் ஏற்படக் காரணம் என்பதை உறுதிப்படுத்தியது.
கருஞ்சாவுகள் எங்கு, எப்போது தொடங்கியது என்பதைப் பற்றி முடிவுக்கு வந்துவிட்டோம் என்கிறார், இந்த ஆய்வுக் குழுவின் பேராசிரியர் கிரௌஸ்.
“ கருஞ்சாவுகளின் மூலத்தை மட்டும் நாங்கள் கண்டறியவில்லை. இப்போதைக்கு உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிற பெரும்பான்மையான பிளேக் கொள்ளை நோய்களின் வகைப்பாடுகளின் மூலத்தையும் கண்டுபிடித்துவிட்டோம்.” என்பது அவரின் பெருமிதமும்கூட.
இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம், புதியதாக இப்படியான கொடுந்துயரங்கள் மீண்டும் நேர்ந்துவிடாமல் தடுப்பதாக இருப்பதே, அவற்றைக் கண்டறிவதன் முழுப் பயனுமாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp