Gabriela Andersen: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத இவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டது ஏன்?

அதே ஆண்டு அக்டோபர் மாதம் ட்வின் சிட்டிஸ் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் கேப்ரியலா.
Gabriela Andersen
Gabriela Andersenட்விட்டர்
Published on

விளையாட்டு வெறுமனே பதக்கங்களுக்காகவும், வெற்றி தோல்விகளுக்காகவும் மட்டும் நடப்பதில்லை.

அது மனிதத்தை நிலைநாட்டவும், நாடுகளைக் கடந்த அன்பின் வெளிப்பாடாகவும், விடாமுயற்சிக்கு வாழ்க்கை உதாரணங்கள் கொடுக்கப்படுவதற்கும் ஒரு வாய்ப்பாக நடத்தப்படுகின்றன.

அப்படி பல அற்புத சம்பவங்களும் விளையாட்டின் வழி அரங்கேறியுள்ளன.

உதாரணத்துக்கு, 1999 இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் சீரிஸின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்ற போது, பாகிஸ்தானின் சக்லின் முஸ்தாக் மிகப் பிரமாதமாக பந்து வீசி இந்திய அணியை பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது சென்னை மைதானத்தில் போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கர கோஷம் எழுப்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு மரியாதை செய்தனர். அது தான் விளையாட்டின் தாக்கம்.

அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் என்கிற பெண்மணிக்கு ஒலிம்பிக் களத்தில் நடந்தது.

ஸ்கை பயிற்சியாளர் டூ மாரத்தான் ஓட்டக்காரர்:

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்தவர். தொடக்கத்தில் ஸ்கை பயிற்சியாளராக வேலை செய்து வந்தவர், 1983ஆம் ஆண்டு கலிஃபோர்னியா சர்வதேச மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் ட்வின் சிட்டிஸ் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் கேப்ரியலா.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியும் பெண்களும்:

1984ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளில் பெண்களுக்கு இடம் இல்லை.

"பெண்களால் அவ்வளவு தூரத்தை ஓடிக் கடக்க முடியுமா?"

"மாரத்தான் ஓடும் அளவுக்கு பெண்களுக்கு வலிமை போதாது"

"பெண்களால் 42.2 கிலோமீட்டரைத் தாக்கு பிடிக்க முடியாது" என ஆண்கள் நிறைந்த சபை பல கருத்துக்களைக் கொண்டிருந்தது.

பெண்களுக்காக சிந்திக்கிறேன் என்கிற பெயரில், பெண்கள் சிந்திப்பதை கவனத்தில் கொள்ளாமல் இருந்தது ஒரு பெருங்கூட்டம். வாய்ப்புக்காக காத்திருந்த பெண்களுக்கு 1984 ஒலிம்பிக்ஸ் ஓர் அற்புத தொடக்கமாக அமைந்தது.

ஆம்.

அந்த ஆண்டு பெண்களுக்கான மாரத்தான் போட்டிகளையும் சேர்த்துக் கொள்ள ஒலிம்பிக் அமைப்புகள் அனுமதியளித்தன. அது தான் பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் மாரத்தான் போட்டி.

Gabriela Andersen
Pele: 'கறுப்பு முத்து' பீலே மரணம் - முடிவுக்கு வந்ததது ஓர் அசாத்திய சகாப்தம்!

மாரத்தானும் கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸும்:

அதோ பெண்கள் மாரத்தான் நடந்து கொண்டிருக்கிறது. 44 வீராங்கனைகள் 42.2 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக ஒலிம்பிக் மாரத்தானில் பெரும்பாலான பந்தய தூரத்தை சாலைகளில் கடந்தாலும், கடைசி 400 மீட்டர் தூரத்தை, ஒலிம்பிக்கின் மற்ற தடகள போட்டிகள் நடக்கும் தடகள ஓடுதளத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் தான் ஓடி எல்லைக் கோட்டைத் தொட வேண்டி இருக்கும்.

தடகள அரங்கில் நுழையும் வீரர்களை, பார்வையாளர்கள் ஆராவாரத்தோடு வரவேற்பர். மற்றவர்களோடு போட்டியிட்டு மாரத்தான் எல்லைக் கோட்டைக் கடந்து வெல்லும் வீராங்கனைகள் வழக்கம் போல பதக்கங்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவர்.

தன்னோடும், தன் முந்தைய ஆகச்சிறந்த சாதனை நேரத்தோடும் போட்டி போடும் வீரர்கள், மாரத்தான் எல்லைக் கோட்டைக் கடக்கும் போது நிச்சயம் தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வார்கள்.

இந்தப் போட்டியில், அமெரிக்காவின் ஜோன் பெனாய்ட் ஒலிம்பிக் பெண்கள் மாரத்தானில் 2 மணி 24 நிமிடம் 52 நொடிகளில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக எல்லைக் கோட்டைக் கடந்தனர்.

மைதானத்துக்குள் கேப்ரியலாவின் வருகை:

கேப்ரியலா ஆண்டெர்சன் ஸ்கீஸ் (Gabriela Andersen Schiess) ஒலிம்பிக் தடகள மைதானத்தில் நுழைந்தார். ஆனால் அவர் ஓடிவருவதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

நிலை குலைந்து விழுவது போல் தள்ளாடிக் கொண்டே வந்தார். ஓட்டம் நடையாக மாறியது. பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், அவருக்கு என்ன நடக்கிறது என சில நொடிகளில் உணர்ந்து கொண்டனர்.

42.2 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் போது உடலில் ஏற்படும் வெப்பம், நீரிழப்பு, கை கால் தசைகளில் ஏற்படும் இறுக்கம்... என பல பிரச்சனைகளை மாரத்தான் வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கேப்ரியலாவின் மனம் ஓட விரும்பினாலும், 39 வயதான அவருடைய உடல் ஓட அனுமதிக்கவில்லை. அவர் உடலில் நீர் அளவு குறைந்து இருக்கலாம், உடலின் தசைகள் இறுகி இருக்கலாம் என பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டனர். இருப்பினும் அவரை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர்.

ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் ஒரு போட்டியாளர், யாருடைய துணையுமின்றி பந்தய தூரத்தைக் கடந்தால் தான், அவருடைய நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இல்லை எனில் அவர் போட்டியை நிறைவு செய்யவில்லை என குறிப்பிடப்படுவார்.

அவரைத் தாங்கிப் பிடிக்க ஓர் ஒலிம்பிக் அதிகாரி ஓடி வருகிறார், அவர் தன்னைத் தொடாத படிக்கு விலகி போட்டி தூரத்தை மெல்ல ஓட்டமும் நடையுமாகக் கடக்கிறார் கேப்ரியலா. இதைப் பார்த்த ரசிகர்களுக்கு அவருடைய விடாமுயற்சியும், மன உறுதியும் பளிச்சிடுகிறது.

பார்வையாளர்களும், ஒலிம்பிக் அதிகாரிகளும், உதவியாளர்களும் எழுந்து நின்று கர கோஷத்தோடு கேப்ரியலாவை ஊக்கப்படுத்தத் தொடங்கினர்.

Gabriela Andersen
"குரங்குப் பையன்" என கேலி: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நம்பிக்கை கதை!

ஒட்டுமொத்த உடலும் தள்ளாடுகிறது, சர்வ சத்தியமாக அவரிடம் மன வலிமை தவிர வேறொன்றும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தன்னம்பிக்கை, அவரது சரீரத்தை எல்லைக் கோட்டை நோக்கி உந்திக் கொண்டிருந்ததை பார்த்து அனைவரும் வியந்தனர்.

எல்லைக் கோட்டை நெருங்க நெருங்க கேப்ரியலாவின் வேகம் குறைந்து கொண்டே வந்தது. எல்லைக் கோட்டை கடந்த உடன் விழச் சென்றவரை, தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர். அப்போது அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் கேப்ரியலாவுக்காக எழுந்து நின்று கைதட்டி, சல்யூட் செய்து வழியனுப்பி வைத்தனர்.

42.2 கிலோமீட்டரில் சுமார் கடைசி 500 மீட்டர் தொலைவை, கிட்டத்தட்ட 5.44 நிமிட போராட்டத்துக்குப் பிறகு, எல்லைக் கோட்டை தன்னிசையாக நிறைவு செய்தார் கேப்ரியலா. 2 மணி 48 நிமிடம் 44 நொடியில் தன் மொத்த பந்தய தூரத்தைக் கடந்திருந்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ்.காம் வலைதளம்.

44 சிங்கப் பெண்கள் கலந்து கொண்ட போட்டியில் கேப்ரியலாவுக்கு 37ஆவது இடம் தான் கிடைத்தது. ஆனால் மனித மனத்தின் வலிமைக்கான போட்டியில் அவர் வைரப் பதக்கத்தை வென்றார்.

பெண்களால் முழு மாரத்தான் ஓட முடியாது, பெண்களின் உடல் அமைப்பு ஒத்துழைக்காது, பெண்கள் தாக்கு பிடிக்கமாட்டார்கள்... என பெண்களின் வலிமை குறித்து முன்வைக்கப்பட்டிருந்த கருத்துகளுக்கு எல்லாம் கேப்ரியலாவின் கடைசி 5.44 நிமிட ஒட்டம் பதிலாக அமைந்தது.

கேப்ரியலா செய்த தவறு:

மாரத்தான் போட்டிகளில், வீரர்கள் ஓடும் போதே நீர் குடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேப்ரியலா அப்போட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைசி நீர்பந்தலில் தண்ணீர் குடிக்க முடியவில்லை.

அது போக, போட்டி நாள் வரை கேப்ரியலாவுக்கு அமெரிக்காவின் தட்ப வெப்ப நிலை முழுமையாக ஒத்துவரவில்லை. அது தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என சில வலைதளங்கள் சொல்கின்றன.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் பெண்கள் ஒலிம்பிக் மாரத்தானில் தங்கம் வென்ற ஜோன் பெனாய்ட்டைக் கூட மாரத்தான் ரசிகர்கள் நாளடைவில் மறக்கலாம். காரணம், ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஒரு புதிய தங்கப் பதக்க வீராங்கனை உருவாகிவிடுவார்.

ஆனால் கேப்ரியலாவை ஒலிம்பிக் போட்டிகள் இருக்கும் வரை எவராலும் மறக்க முடியாது. காரணம், அவரது 5.44 நிமிட நிலை குலைந்த தடுமாற்றத்துடனான நடை... அத்தனை கணமானது, பலமானது, அழுத்தமானது.

Gabriela Andersen
Bruce Lee : தெரிந்த மனிதன் தெரியாத உண்மைகள்- ஓர் உத்வேக கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com