வட கொரியா என்றாலே நமக்கு அதிகம் தெரியாத நாடாக இருக்கிறது. அங்கே இப்போதிருக்கும் அதிபருக்கு பிறகு யார் வாரிசு என்ற கேள்வியும் ஊடகங்களால் அவ்வப்போது விவாதிக்கப்படுகிறது.
அந்த வாரிசு ஒரு பெண்ணாக இருந்தால்?
வட கொரிய அதிபரும் சுப்ரீம் தலைவர் என்று அழைக்கப்படுபவருமான கிம் ஜோங் உன்னுக்கு உடன் பிறந்தவர்கள் ஒரே ஒருவர் மட்டுமே. அவர்தான் கிம் யோ ஜோங். இவர் அதிபரின் தங்கை என்பதால் அவருக்கு நெருக்கமாக இருப்பதோடு சக்தி வாய்ந்தவராகவும் கருதப்படுகிறார்.
தங்கை கிம் யோ ஜோங் சர்வதேச கவனம் பெற்றது 2018ஆம் ஆண்டில்தான். அப்போது தென்கொரியாவிற்கு சென்ற குளிர்கால ஒலிம்பிக்கிற்கான குழுவில் அவர் இடம் பெற்றார். இப்படி தென் கொரியாவிற்கு சென்ற கிம் வம்சத்தின் முதல் உறுப்பினர் இவர்தான். இந்த ஒலிம்பிக் போட்டியில் வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஒரே அணியாக பங்கேற்றன.
இதைத் தொடர்ந்து கிம் யோ ஜோங் தனது சகோதரர் ராஜ தந்திர ரீதியாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை சந்தித்த போது கூட உடன் சென்றார். அப்போதுதான் மேற்கத்திய ஊடகங்கள் யார் இந்தப் பெண் என்று கேள்வி எழுப்பி எழுதின.
2020 ஏப்ரல் மாதத்தில் அதிபர் கிம் ஜோங் உன் திடீரென்று பொது நிகழ்ச்சிகள் எவற்றிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு என்ன ஆனது என்பதோடு அவரது உடல்நிலை குறித்தும் ஊடகங்களில் வதந்திகள் பரவின. அந்தக் காலத்தில் அதிபரது தங்கை என்ற முறையில் ஊடகங்களில் அவர்தான் அடுத்த வாரிசு என விவாதங்களைக் கிளப்பின.
கிம் யோ ஜோங் அக்டோர் 2017 இல் வட கொரியாவை ஆளும் கட்சியின் பொலிட்பீரோ(Politbureau) எனப்படும் அரசியல் தலைமைக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார். அதற்கு முன் அவர் பிரச்சாரத் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த பொறுப்பை அவர் இன்னும் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் துறையின் மூலம் ஜோங் தனது சகோதரரின் நற்பெயரை வட கொரிய மக்களிடத்தில் கொண்டு சேர்க்கிறார்.
ஆனால் அவரை அமெரிக்கா இன்னும் கருப்புப் பட்டியலில்தான் வைத்துள்ளது. வட கொரியாவில் நிகழும் மனித மீறல் குற்றச்சாட்டு காரணமாக பல வட கொரிய ஆளும் வர்க்க நபர்கள் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்திருக்கிறது. அந்த நபர்களில் அதிபரது தங்கை ஜோங்கும் ஒருவர். இதனால் அவரோடு அமெரிக்க குடிமகன் எவரும் எந்த விதமான தொடர்போ, பரிவர்த்தனையோ வைத்துக் கொள்ள முடியாது. மேலும் அவருக்கு அமெரிக்காவில் ஏதும் சொத்துக்கள் இருந்தால் இந்த தடை காரணமாக அவை முடக்கப்படும்.
வட கொரியாவின் ஆளும் அதிகார அமைப்பை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் என்பதால் கிம் யோ ஜோங்கின் அரசியல் வலைப்பின்னல் குறித்து அதிகம் தெரியவில்லை. இதனால் அவருக்கு ஆளும் கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை கணக்கிடுவது கடினம்.
கிம் யோ ஜோங் வட கொரிய ஆளும் கட்சியின் செயலாளரும், அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரம் கொண்டவருமான சோ ரியோங் ஹேயின் மகனை திருமணம் செய்து கொண்டிருப்பதாக ஒரு வதந்தி இருக்கிறது. இது உண்மையாக இருந்தால் தங்கை ஜோங்கிற்கு ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகார அந்தஸ்து இருக்குமென நாம் யூகிக்கலாம். இவை எல்லாவற்றையும் விட அவர் அதிபரது தங்கை என்பதுதான் பெரிய தகுதி.
சமீபத்தில் கிம் யோ ஜோங்தான் தென் கொரியாவிற்கு எதிராக கடும் வார்த்தைகள் கொண்ட செய்தி அறிக்கைகளை வெளியிடுவதற்கு பொறுப்பாக இருக்கிறார். இதனால் கொரியப் பிரச்னைகளை கவனிக்கும் வட கொரியாவின் பரதிநிதியாகவும் அவர் இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் அதிபரது தங்கை கிம் யோ ஜோங், கொரிய நாடுகளுக்கிடையிலான எல்லையில் உள்ள இராணுவமயமாக்கப் படாத பகுதிக்கு இராணுவத் துருப்புகளை அனுப்புவதாக அச்சுறுத்தினார். காரணம் வட கொரியாவிற்கு எதிராக தென் கொரிய ஆர்வலர்கள் சிலர் துண்டுப் பிரசுரங்களை அனுப்புவதை தென் கொரியா தடுக்கத் தவறியதாக அவர் கூறினார். மேலும் கொரிய எல்லையில் உள்ள ஒரு தொடர்பு அலுவலகத்தை அழிக்கப் போவதாகவும் எச்சரித்தார். அதே போல ஜூன் 16 அன்று அங்கு ஒரு குண்டு வெடித்து கட்டிடம் தகர்க்கப்பட்டது.
கிம் ஜோங் உன்னுக்குப் பிறகு வட கொரியாவின் அதிபராக ஆகப் போவது யார் என்ற கேள்விக்கு குடும்ப உறவுகளே பதிலாக இருக்கின்றன. அதிபர் உன்னுக்கு குழந்தைகள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவர்கள் வயதில் சிறியவர்கள். அந்த வகையில் அடுத்த நெருக்கமான இரத்த உறவாக அதிபரின் தங்கை கிம் யோ ஜோங் இருக்கிறார். ஒரு வேளை இவர் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அடுத்து வரும் புதிய தலைவருக்கு இவர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். அந்த வகையில் இவர் ஒன்று அடுத்த அதிபராக வர வேண்டும். அப்படி வர முடியவில்ல என்றால் இவர் தனது உயிரை இழக்க வேண்டும்.
மறைந்த தலைவர் கிம் ஜாங் இல்லின் இளைய மகள்தான் கிம் யோ ஜோங். இவர் தனது சகோதரர் கிம் ஜாங் உனை விட நான்கு வயது இளையவர். 1987இல் பிறந்தவர். இருவரும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் படிப்பை முடித்தனர். பிறகு இல் இறந்த பிறகு உன் வட கொரியாவின் அதிபராக பதவியேற்கிறார். இவர் பதவியேற்ற பிறகு ஜோங் 2017 இல் பொலிட்பீரோவின் மாற்று உறுப்பினராக பதவி உயர்வு பெறுகிறார். இப்படி இளவயதில் இவர் பொலிட்பீரோ உறுப்பினராக பதவியேற்பது வடகொரியாவின் அதிகார மட்டத்தில் சீனியாரிட்டி படி பதவி கொடுப்பதில்லை என்பது தெளிவாகிறது.
2014க்கு முன்பு கிம் யோ ஜோங் எப்போதாவது மட்டும்தான் பொதுக் கவனத்தை ஈர்த்தார். 2011 இல் அவரது தந்தையின் இறுதிச் சடங்கு மற்றும் 2014 இல் அவரது சகோதரர் அதிபராக பதவி ஏற்ற போது என இரு தருணங்களில்தான் அவர் பொதுவெளியில தோற்றமளித்தார். தற்போது கூட அவர் எப்போதாவதுதான் தனது சகோதரருடன் அரசு ஊடக செய்திகளில் தென்படுகிறார்.
இருப்பினும் முந்தைய தலைவர் கிம் ஜாங் இல் உடல்நிலை மோசமடைந்த போது 2008 ஆம் ஆண்டிலேயே அவருக்கு ஒரு உயர்பதவி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அண்ணனும் அதிபரும் கிம் ஜாங் உன் எப்போதெல்லாம் ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுகிறாரோ அப்போதெல்லாம் கிம் யோ ஜோங் தான் அடுத்த வாரிசு என கருதப்படுகிறார்.
இப்போதைக்கு அதிபர் கிம் ஜாங் உன் ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அவரது தங்கையான கிம் யோ ஜோங்தான் அடுத்த அதிபர். இல்லையென்றால் வட கொரியாவில் அதிகாரச் சண்டையும் கொலைகளும் நிறைய நடக்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust