இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் நாட்டின் பிரதமராகவும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று (ஜூலை 18, திங்கட்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ரிஷி சுனக் 115 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.
பென்னி மோர்டான்ட்க்கு 82 வாக்குகளும், பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த லிஸ் ட்ரஸ் 71 வாக்குகளையும், கெமி பண்டெநாச் 58 வாக்குகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஜூலை 21ஆம் தேதிக்குள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள 358 கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் இரு தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இருவர் மட்டுமே போட்டியில் நிற்கும் வரை தொடர்ந்து வாக்கெடுப்புகள் நடக்கும். அதன் பிறகு 2 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள், அந்த இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வர். அவரே கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டனின் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார்
ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத நாடாக இருந்த பிரிட்டன் 1950களுக்குப் பிறகு தன்னை ஒரு முழுமையான ஜனநாயக நாடாக மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. அதோடு பல நாட்டைச் சேர்ந்த மக்களும் பிரிட்டனில் குடியேறத் தொடங்கினர்.
அப்படி 1960களில் பிழைப்பு தேடி கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு குடியேறியவர்களில் ரிஷி சுனக்கின் குடும்பமும் ஒன்று. அம்மா உஷா சுனக்கும், தந்தை யஷ்வீர் சுனக்கும் போராடியே ரிஷியை வளர்த்தனர். இந்த குடும்பத்தின் ஆணி வேர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பஞ்சாபில் இருக்கிறது.
அம்மா மிகுந்த சிரமப்பட்டு, படித்து பட்டம் பெற்று, ஒரு சிறிய மருந்துக் கடையை நடத்தி வந்தார். தந்தை யஷ்வீர் பிரிட்டன் அரசின் தேசிய சுகாதார சேவை நிறுவனத்தில் பணியாற்றினார்.
1980 மே 12ஆம் தேதி செளத்ஹாம்ப்டனில் பிறந்த ரிஷி சுனக் படிப்பில் சுட்டி. அதை புரிந்து கொண்ட பெற்றோர், அவர்கள் கனவாக மட்டுமே கண்டு வந்த விஷயங்களை தங்கள் பிள்ளைகளுக்கு எதார்த்தத்தில் கொடுத்தனர்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தன் இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு 2001 - 2004 வரை உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸில் பகுப்பாய்வாளராக பணியாற்றினார். 2006ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
பிறகு 'தி சில்ட்ரன்ஸ் இன்வெஸ்மென்ட் ஃபண்ட்'-ல் கூட்டாளியாக பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு தெலெமெ (Theleme) நிறுவனத்தின் கூட்டாளியானார்.
2009ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தன் மாமனார் நாராயண மூர்த்தியின் கட்டமரான் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் இயக்குநர் ஆனார் ரிஷி சுனக்.
2014ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் ரிச்மண்ட் (யார்க்) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான கமிட்டியில் உறுப்பினரானார்.
2017ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உள்ளூர் அரசாங்கங்களுக்கான அமைச்சரவையில் துணை அமைச்சருக்கு இணையான பதவியில் அமர்ந்தார்.
2019ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டன் கருவூலத்தின் முதன்மைச் செயலராக போரிஸ் ஜான்சனால் நியமிக்கப்பட்டார். மறுபக்கம் கட்சியின் பிரைவி கவுன்சில் (Privy Council) உறுப்பினர் ஆனார்.
பிப்ரவரி 2020-ல் பிரிட்டனின் நிதியமைச்சர் ஆனார். அப்போது கொரோனா தலைவிரித்தாடத் தொடங்கி இருந்தது. கடந்த ஜூலை 5ஆம் தேதி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது போதிய நம்பிக்கை இல்லாததால் தன் நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தற்போது பிரிட்டனின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் ரிஷி சுனக்.
ரிஷி சுனக் பிரிட்டனின் நிதி அமைச்சராக (Chancellor of Exchequer) பொறுப்பேற்ற போது, கொரோனா புதிய உச்சங்களைத் தொட ஆரம்பித்தது. வியாபாரங்கள், பள்ளி, சுற்றுலா, பயணம் எல்லாமே தடைப்பட்டது.
40 வயது கூட நிரம்பாத ஒரு இளைஞரின் கையில் ஒட்டுமொத்த பிரிட்டன் பொருளாதாரம் இருந்தது. மிக முக்கியமாக ரிஷி சுனக்குக்கு அதுநாள் வரை தனியே ஒரு அமைச்சரகத்தை நடத்திய அனுபவமும் இல்லை.
மிகவும் சிரமப்பட்டு வந்த பின்புலம் இருந்ததால், மக்கள் இந்த நேரத்தில் எப்படி உணர்வார்கள்? அவர்களுக்கு எது கொடுத்தால் சரியாக இருக்குமென கணித்து சுமார் 350 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஒரு பெரிய நிதி தொகுப்பையும், கொரோனா மீட்புத் திட்டத்தையும் அறிவித்தார்.
போர் காலத்தில் ஓர் அரசு எப்படி செயல்படுமோ அப்படி போரிஸ் ஜான்சனின் அரசு செயல்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
கொரோனாவில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு அரசின் புதிய கடன் திட்டம், 3 மாதங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விடுப்பு, சிறு வியாபாரங்களுக்கு வட்டி இல்லா கடன் திட்டம்,
கடைகள் மற்றும் பப்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஓராண்டு காலம் செலுத்தாமல் இருக்க விதிவிலக்கு... என பல அதிரடி திட்டங்களை அறிவித்தார். இதில் பல திட்டங்கள் 2008 பொருளாதார நெருக்கடியின் போது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்கின் இந்த புதிய அணுகுமுறை பல பிரிட்டன் அரசியல்வாதிகளை ஆச்சரியப்பட வைத்தது அல்லது கடுமையாக விமர்சிக்க வைத்தது. ஆனாலும் தன் போக்கில், கொரோனாவிலிருந்து பிரிட்டன் மக்களையும், பொருளாதாரத்தையும் ஓரளவுக்காவது மீட்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust